மதுரை மீனாட்சி (திரைப்படம்)
மதுரை மீனாட்சி (Madurai meenatchi) 1993 ஆம் ஆண்டு செல்வா மற்றும் ரஞ்சிதா நடிப்பில், மு. கருணாநிதியின்திரைக்கதை மற்றும் வசனத்தில், தேவா இசையில், பி. அமிர்தம் இயக்கத்தில், ஏ. குணநிதி தயாரிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1][2][3]
மதுரை மீனாட்சி | |
---|---|
இயக்கம் | பி. அமிர்தம் |
தயாரிப்பு | ஏ. குணநிதி |
கதை | மு. கருணாநிதி (வசனம்) |
திரைக்கதை | மு. கருணாநிதி |
இசை | தேவா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பி. அமிர்தம் |
படத்தொகுப்பு | பி. வெங்கடேஸ்வரராவ் |
கலையகம் | பூமாலை புரொடக்சன்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 24, 1993 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
மதுரை (செல்வா) போக்குவரத்துக்கு காவலராக பணிபுரிகிறார். காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெறுவதே அவர் லட்சியம். அவர் தன் தாய் மரகதத்தோடு (சுஜாதா) வசிக்கிறார். அவருக்கும் உள்துறை அமைச்சர் உலகநாதனின் (கேப்டன் ராஜு) மகள் மீனாட்சிக்கும் (ரஞ்சிதா) மோதல் ஏற்படுகிறது. மீனாட்சி தன் தந்தையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மதுரையை பணிமாற்றம் செய்து தன் வீட்டின் பாதுகாவலராக மாற்றுகிறாள். தன் வீட்டுவேலைகளை செய்யச்சொல்லி மதுரையை அவமானப்படுத்துகிறாள்.
குமாரசாமி (விஜயகுமார்) அவரின் சகோதரன் குலசேகரன் (நாசர்) மற்றும் குலசேகரன் மனைவி கோமதி (சபிதா ஆனந்த்) ஆகியோர் பார்வையற்றவர்களுக்கான சிறப்புப் பள்ளியை தங்களுக்குச் சொந்தமான கட்டிடத்தில் நடத்தி வருகின்றனர். பிரதம அமைச்சர் அந்தக் கட்டிடத்தை வாங்க உலகநாதன் மூலம் முயற்சிக்கிறார். அவர்கள் அதை கொடுப்பதற்கு மறுப்புத் தெரிவிக்கவே தனது அடியாட்கள் மூலம் குமாரசாமியைக் கொலை செய்கிறார் உலகநாதன்.
தன் வீட்டுப் பாதுகாவலில் இருக்கும் மதுரையை மீனாட்சி காதலிக்கிறாள். மதுரையும் அவளைக் காதலிக்கிறான். இதை அறியும் உலகநாதன் மதுரையை உடனே பணிமாற்றம் செய்கிறான். உலகநாதன் மற்றும் காவல் ஆய்வாளர் ருத்ரா (பிரதீப் சக்தி) இருவரும் சேர்ந்து குலசேகரனின் சொத்தை அபகரிக்கவும், மதுரையின் மீது பழி சுமத்தி சிறைக்கு அனுப்பவும் திட்டமிடுகின்றனர். அவர்கள் திட்டம் நிறைவேறியதா? அல்லது மதுரை அவர்கள் திட்டத்தை முறியடித்து மீனாட்சியைக் கரம் பிடித்தானா? என்பது மீதிக்கதை.
நடிகர்கள்
- செல்வா - மதுரை
- ரஞ்சிதா - மீனாட்சி
- சுஜாதா - மரகதம்
- நாசர் - குலசேகரன்
- கேப்டன் ராஜு - உலகநாதன்
- எஸ். எஸ். சந்திரன் - பிரம்மய்யா
- விஜய் கிருஷ்ணராஜ் - ஸ்டீபன்
- பிரதீப் சக்தி - ருத்ரா
- பிரதாபச்சந்திரன் - நீதிபதி
- விஜயகுமார் - குமாரசாமி
- சந்திரசேகர் - டி. ஜி. பி.
- எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
- திடீர் கண்ணையா - மாடசாமி
- சபிதா ஆனந்த் - கோமதி
- விஜய சந்திரிகா
இசை
படத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர்கள் மு. கருணாநிதி மற்றும் வைரமுத்து.
வ. எண் | பாடல் | பாடகர்கள் | காலநீளம் |
---|---|---|---|
1 | ஐ லவ் யூ மீனா | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 4:38 |
2 | மாலை | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 4:17 |
3 | நீதி மன்றம் | மலேசியா வாசுதேவன் | 3:11 |
4 | தங்க குணம் | சித்ரா மற்றும் குழு | 2:13 |
சர்ச்சை
அரசியல்வாதிகளை இப்படத்தில் அவதூறு செய்திருப்பதாக உச்ச நீதி மன்றத்தில் இப்படத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[4]
மேற்கோள்கள்
- ↑ "மதுரை மீனாட்சி" இம் மூலத்தில் இருந்து 2010-08-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100812024714/http://www.jointscene.com/movies/Kollywood/Madurai_Meenakshi/9601.
- ↑ "மதுரை மீனாட்சி" இம் மூலத்தில் இருந்து 2004-12-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041217164218/http://www.cinesouth.com/films/cast/newfilmdb/madurai%20meenatshi.html.
- ↑ "மதுரை மீனாட்சி". http://spicyonion.com/movie/madurai-meenakshi/.
- ↑ "சர்ச்சை". https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930306&printsec=frontpage&hl=en.