தெத்துப்பட்டி (கன்னிவாடி) இராஜகாளியம்மன் கோவில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search


தெத்துப்பட்டி (கன்னிவாடி) இராஜகாளியம்மன் கோவில்

மூலவர்: – இராஜகாளியம்மன்
உற்சவர்: -
பழைமை: 500 முதல் 1000 ஆண்டுகள்
காவல் தெய்வங்கள்: காவல் அய்யனார், கருப்பணசுவாமி,
பரிவார தேவதைகள்: கணபதி, முருகன், பஞ்சலோக நவக்கிரகங்கள்
தீர்த்தம்: -
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6.30 மணி வரை
கோவில் விழாக்கள்: செங்கோல் பெறும் விழா, ஆடி பதினெட்டு சித்தர்கள் விழா,

பவுர்ணமி பூசை, ஆடிவெள்ளி திருவிளக்குபூஜை,
நவராத்திரி கலைவிழா, விஜயதசமி, தமிழ்ப் புத்தாண்டு விழா,
அன்னதானம், குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி.

அமைவிடம்: தெத்துப்பட்டி (கன்னிவாடி)
மாவட்டம்: திண்டுக்கல்
மாநிலம்: தமிழ்நாடு, இந்தியா

இராஜகாளியம்மன் கோவில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள தெத்துப்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இது வரலாற்றுச் சிறப்பும் புராணச் சிறப்பும் ஒருங்கே அமைந்த கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் 1971-ஆம் ஆண்டு இராஜகாளி போகர் பீடம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. தொடர்ந்து 1981-ஆம் ஆண்டு அத்தி மரத்தில் ஆன இராஜகாளியம்மன் மூலவர் சிலை நிறுவப்பட்டது. இறுதியாக 1984-ஆம் ஆண்டு கருவறையில் கல்லில் வடிக்கப்பட்ட இராஜகாளியம்மன் சிலை செங்கோலுடன் நிறுவப்பட்டது.

பரிவார தேவதைகள்

பரிவார தெய்வங்களான கணபதி, காவல் அய்யனார், பாலமுருகன், கருப்பணசுவாமி, நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்கள் உள்ளன. மற்றும் மகாபோகர், யோக ஆஞ்சநேயர் தவயோக பீடங்கள் எல்லாம் சிறப்பாக அமைந்துள்ளன.

சிறப்பு அமைப்புகள்

இங்கு முற்றிலும் வித்தியாசமாக பஞ்சலோகத்தால் வடித்த கோட்சார நவக்கிரக சிலைகள் சித்த ஆகம முறைப்படி அமைந்துள்ளதாக அறிகிறோம். மற்றொரு சிறப்பு அஷ்ட நாகர் (எட்டுத் தலை பாம்பு) மேல் நின்று நடனமாடும் ஸ்ரீ கிருஷ்ணர் சிலை.

போகரின் கன்னி பூசை, சாபம், சாப நிவர்த்தி

கோவில் அமைந்துள்ள தெத்துப்பட்டி கிராமத்தைச் சூழ்ந்து உள்ள கன்னிவாடி மலை, பன்றிமலை என்ற மலைகள் பற்றி அரிகேசவ பர்வதம், வராககிரி என்று பழைய மலைவாகட நூல்களில் கூறப்பட்டுள்ளன. கன்னிவாடி மலை சித்தர்கள் வாழும் மலையாகும். இம்மலைக்கு சித்த முனிவர் போகர் (பதினெண் சித்தர்களில் ஒருவர்) தம் சீடர்களான கோரக்கர், கரூவூரார், கொங்கணர் போன்ற சித்தர்கள் சூழ வருகை புரிந்து கன்னி பூசை செய்துள்ளதாக அறிகிறோம். பூசை தொடங்குமுன் தன சித்துக்களை பயன்படுத்தி, கமண்டல நீர் தெளித்து, ஒரு கல்லுக்கு உயிரளித்து 'கன்னிவாடி' எனக்கூறியபடி ஒரு கன்னிப்பெண்ணை உருவாக்கி பூசை செய்யத் தொடங்கினார்.

போகரின் கன்னி பூசை நிறைவுறும் முன்பு அன்னை புவனேஸ்வரி அம்மன் கடும் சினமுற்று போகர் முன் தோன்றினாள். தன சினத்தை போகருக்கு உணர்த்தி கன்னிப்பெண்ணை மீண்டும் கல்லாக மாற்றினாள். இது மட்டுமல்லாமல் போகருக்கு சாபம் கொடுத்தாள். போகர் இந்த சாபத்தால் தவ வலிமை இழந்து முதுமையுற்று கன்னிவாடி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தெத்துபட்டி இராஜகாளியம்மன் கோவிலுக்கு வந்து தவமியற்றினார். இவர் தவத்தை மெச்சி இராஜகாளியம்மன் போகர் முன் தோன்றி சாப நிவர்த்தியளித்தார்.

பின்பு போகர் மீண்டும் தவ வலிமை திரும்பப் பெற்று மேற்கே சக்திகிரி (பழநிமலை) நோக்கிச் சென்று பழனி முருகனை வழிபட்டுள்ளார். போகர் முன் முருகன் தோன்றி போகரின் சாபத்தை முழுதாக நிவர்த்தி செய்தார். பின்பு போகர் மற்ற சித்தர்களுடன் கூடி ஆய்வு செய்து, நவபாசாணத்தால் ஆகிய முருகன் சிலையை வடித்தார். அச்சிலையை பழனி மலையில் நிறுவி மக்கள் வழிபட வகை செய்தார்.

ராஜகாளியம்மன் தல வரலாறு

சிலப்பதிகாரம்

மதுரை மீதும், பாண்டியன் நெடுஞ்செழியன் மீதும் கண்ணகி சாபம் இட்டதால் மதுரை தீ பிடித்து எரிந்ததாக சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் கூறியுள்ளார். அதன்படி நெடுஞ்செழியன் உயிர் துறந்தான். மதுரை நகர் தீப்பற்றி எரியும் போது அடுத்து என்ன செய்வது என தெரியாது கண்ணகி தெருவில் வருகிறாள். அப்போது மதுராபதித் தெய்வம் கண்ணகி முன் தோன்றி பூர்வஜென்ம வினையை உணர்த்தினாள். பின்னர் நெருப்பு தணிந்தது என கூறியுள்ளார்.

போகர் ஓலைச்சுவடிக் குறிப்பு

போகர் ஓலைச்சுவடிக் குறிப்புகளின் படி மதுராபதி தெய்வம் என்று அறியப்படும் மதுரை காளி, கோவலன் கொலையுண்டது கண்டு பாண்டியன் அரண்மனை நோக்கிச் சென்று அங்கே செங்கோல் ஏந்திய பாண்டியனைக் கண்டாள். மதுராபதியாகிய இராஜகாளியம்மன் பாண்டியன் செங்கோலைத் தொட்டு நீதி கேட்ட போது, பாண்டிய மன்னன் மீனாட்சி சொக்கநாதர் ஆகிய தெய்வங்களின் பெயரை உச்சரித்து அபயம் கேட்டு கூக்குரலிட்டது கேட்டு மீனாட்சியும் சொக்கநாதரும் பாண்டியன் முன் தோன்றினர். இத்தெய்வங்கள் மதுரை காளியுடன் வாதிடத் தொடங்கினர். மதுரை காளி தன கடமையிலிருந்து எவ்வாறு தவறினாள் என்பது வாதம். மதுரை நகரின் காவல் தெய்வம், பாண்டிய வம்சத்தின் குல தெய்வம் ஆகிய இரண்டு பொறுப்புகளை ஏற்றுள்ள மதுரை காளி மதுரை நகரை தீயினின்று காக்கத் தவறியது தான் பிழை என்பது மீனாட்சி சொக்கநாதர் வைத்த வாதம்.

பாண்டியன் அரண்மனை உள்ளே நுழையும் வரை கண்ணகி மானிடப்பெண். பாண்டிய மன்னன் ஊழ்வினைப் பயனாலும், கண்ணகியின் கற்பின் சக்தியாலும் அவள் காளியாகவே மாறிவிட்டதால் மதுரையை தீயினின்று காக்க இயலவில்லை' என்பது இதற்கு மதுர காளி வைத்தபதில் வாதம். சொக்கனாதனாகிய சிவன் இறுதியாக தொகுத்து சொன்ன தீர்ப்பு என்னவெனில், பாண்டிய மன்னன் தன கடமை தவறி கண்ணகி என்ற கற்புகரசியின் வாழ்வை அழித்தது மட்டுமல்ல தன்னையும் அழித்துக் கொண்டுள்ளான். எனவே அவனுக்கு மறுபிறவி உண்டு. மன்னன் தன கடைசி பிறவியில் காளி கோவில் கட்டி சாப நிவர்த்தி அடைவான். இது காலம் வரை மதுராபதி தெய்வமாகிய நீ குடியிருக்க கோவிலின்றி மதுரை மீனாட்சி கோவில் மேற்கு கோபுரத்தில் துயில் கொள்ள வேண்டும். இதன்படி இராஜகாளியம்மனுக்கு போகர் எழுப்பிய கோவிலில் மதுரை காளியாகிய மதுராபதி அரூப சக்தியாக உறைகிறாள் என்பது போகர் குறிப்பு.

வேண்டுதல்கள்

இங்கு திருமணம் தடை, குழந்தைப் பேறின்மை ஆகிய தடைகள் நீங்க வேண்டுதல்கள் வைக்கப்படுகின்றன.

நேர்த்திக்கடன்

வேண்டுதல்கள் நிறைவேறியதும் ஆதிராஜகாளியம்மனுக்கு சாம்பிராணி தைலம் பூசப்பட்டு அபிசேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

திருவிழா

இராஜகாளியம்மன் கோவிலில் செங்கோல் பெறும் விழா, ஆடி பதினெட்டு சித்தர்கள் விழா, பவுர்ணமி பூசை, ஆடிவெள்ளி திருவிளக்குபூஜை, நவராத்திரி கலைவிழா, விஜயதசமி, தமிழ்ப் புத்தாண்டு விழா, அன்னதானம், குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி, ஆகிய திருவிழாக்கள் சிறப்பாக நடக்கின்றன .