திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்
தேவாரம், திருப்புகழ், பாடல் பெற்ற திருவாலங்காடு வட ஆரண்யேசுவரர் திருக்கோயில் | |
---|---|
படிமம்:Tiruvalangadu4.jpg | |
புவியியல் ஆள்கூற்று: | 13°07′49″N 79°46′29″E / 13.130285°N 79.774660°E |
பெயர் | |
பெயர்: | திருவாலங்காடு வட ஆரண்யேசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவாலங்காடு |
மாவட்டம்: | திருவள்ளூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வட ஆரண்யேஸ்வரர் (தேவர் சிங்கப் பெருமான்) |
உற்சவர்: | ஶ்ரீ ரத்தினசபாபதீஸ்வரர் |
தாயார்: | வண்டார்குழலி |
உற்சவர் தாயார்: | சமீசீனாம்பிகை |
தல விருட்சம்: | ஆலமரம் |
தீர்த்தம்: | முக்தி |
சிறப்பு திருவிழாக்கள்: | மார்கழி திருவாதிரை 3 நாட்கள் பங்குனி உத்திரம் 10 நாட்கள் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம், திருப்புகழ், |
பாடியவர்கள்: | காரைக்கால் அம்மையார், திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், |
திருவாலங்காடு வட ஆரண்யேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[1]
இறைவன், இறைவி
இச்சிவாலயத்தின் மூலவர் வட ஆரண்யேஸ்வரர், தாயார் வண்டார்குழலி.
அமைவிடம்
இச்சிவாலயம் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு எனும் ஊரில் அமைந்துள்ளது.
திருவிழா
மார்கழி திருவாதிரை இங்கு மிக சிறப்பு. இது தவிர சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் இங்கு கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்திற்கு 10 நாட்கள் பிரம்மோற்சவம் பங்குனி சுவாதி நட்சத்திரத்தன்று காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா நடைபெறுகிறது
தல சிறப்பு
சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜ பெருமான் நித்தமும் நடமாடும் ஐம்பெரும் அம்பலங்களில் ரத்தின சபை ஆகும். இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது. அம்மனின் சக்தி பீடங்களில் இது காளி பீடம்.
திறக்கும் நேரம்
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்து இருக்கும்.
பொது தகவல்
முன் காலத்தில் ஆலமரக்காடாக இருந்து அதில் இறைவன் சுயம்புவாக தோன்றி, நடனம் செய்த படியால் இத்தல இறைவன் வட ஆரண்யேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.
பிரார்த்தனை
நடனக்கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் தலம்.
நேர்த்திக்கடன்
சிவனுக்கு அபிஷேக ஆராதனை செய்தல்.
தலபெருமை
காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் பெற்ற சிறப்புடையது. தாமரை மலர் விரித்தாற் போல் அமைந்து அதன் மேல் அமைந்துள்ள "கமலத்தேர்" இங்கு தனி சிறப்பு.
தல வரலாறு
சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அரக்கர்களை அழித்து விட்டு, அவளையே ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள். அரக்கர்களை அழித்து அவர்களது ரத்தத்தை உண்ட காளி, பல கோர செயல்களை புரிந்தாள். இதனால் முஞ்சிகேச கார்க்கோடக முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார். அவரை கண்ட காளி, "நீ என்னுடன் நடனமாடி வெற்றிபெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம்" என்றாள். சிவனும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். அப்போது தன் காதில் இருந்த மணியை கீழே விழவைத்து, பின் அதை தன் இடக்கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார்.
இதைக்கண்ட காளி, இது போன்ற தாண்டவம் தன்னால் ஆட இயலாது என தோற்று விடுகிறாள். அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி, "என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள், முதலில் உன்னை வழிபாடு செய்த பின் என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும்" என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனி கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009