தாந்தோன்றிமலை கல்யாணவெங்கடரமணசுவாமி கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Thanthondrimalaivenkatramanaswamytemple1.jpg
தாந்தோன்றிமலை கல்யாணவெங்கடரமணசுவாமி கோயில்

தாந்தோன்றிமலை கல்யாணவெங்கடரமணசுவாமி கோயில் கரூர் மாவட்டம் கரூர் வட்டம் கரூர் நகருக்குத் தெற்கே 4 கிமீ தொலைவில் கரூர்-திண்டுக்கல் சாலையில் (வழி குஜிலியாம்பாறை) உள்ளது.

கோயில் அமைப்பு

படிமம்:Thanthondrimalaivenkatramanaswamytemple2.jpg
கோயில் எதிரில் குளம்

இந்த குடைவரைக் கோயில் கிழக்கிலிருந்து மேற்காக அரை பர்லாங் தூரம் பரவியுள்ள குன்றின் மேல் புறம் அமைந்துள்ளது. இக்குன்று மேல் புறம் உயர்ந்தும், கீழ்ப்புறம் தாழ்ந்தும் அமைந்துள்ளது. கருவறையின் குகைக்கு மேலே மலை மீது கட்டப்பட்ட கோபுரம் கம்பீரமாய் பிரகாசிக்கிறது. கருவறை 19 அடி 6 அங்குலத்திற்கு 14 அடி 6 அங்குல அளவில் குடையப்பட்டுள்ளது. இதன் உயரம் 9 அடி 9 அங்குலம் ஆகும். கருவறையின் நடுவில் உயர்ந்த மேடை உள்ளது. மேடையின் கீழ்ப்புறம் கல்யாண வெங்கடரமண சுவாமி பாறையிலேயே புடைப்புச் சிற்பமாகக் காட்சியளிக்கிறார். இம்மேடையின் மூன்று புறங்களிலும் 4 அடி அகலம் நடைபாதை பள்ளமாகச் செதுக்கப்பட்டுள்ளது. குடைவரையின் முன்பாக காணப்படும் மகாமண்டபம் மற்றும் சன்னதிகள் பிற்காலத்தில் கட்டப்பட்டவையாகும். இவை ஏறத்தாழ கி.பி.13-14ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகர பேரரசின் காலத்தில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. [1] கோயிலின் எதிரில் குளம் உள்ளது.

பெருமாள்

இக்குன்றின் மேல் குடையப்பட்டுள்ள அழகிய குடைவரையில் மேற்கு நோக்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். பெருமாள் லட்சுமியைத் தனது மார்பில் தாங்கிய நிலையில் பிரம்மாண்ட வடிவுடன் காணப்படுகிறார். தாயாருக்கு தனியாக சன்னதி இல்லை.

பிற குடைவரைகள்

இக்குடைவரை, கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டியபுரம், விழுப்புரம் மாவட்டம் கீழ்மாவிலங்கை ஆகிய இடங்களில் காணப்படும் குடைவரைகளுடன் ஒப்புநோக்கத்தக்கது. இம்மூன்று குடைவரைகளின் அமைப்பும் பல அம்சங்களில் ஒன்றுபட்டுள்ளது. நாமக்கல் லட்சுமி நரசிம்மசுவாமி குடைவரையைக் காட்டிலும் தாந்தோன்றிமலை குடைவரை சற்று பெரியதாகும். [1]

குடமுழுக்கு

இக்கோயிலில் 7.9.2014 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. [2]

மேற்கோள்

  1. 1.0 1.1 ம.இராசசேகர தங்கமணி, அருள்மிகு கல்யாண வெங்கடரமணசுவாமி திருக்கோயில் ஸ்தல புராணம், தாந்தோன்றிமலை, கரூர், 639 005, நவம்பர் 2005
  2. தாந்தோன்றிமலை பெருமாள் கோயிலில் மகாசம்ரோஷணம், தினமணி, 8.9.2014

உசாத்துணை

  1. தாந்தோன்றிமலை வெங்கட்ரமணகோவிலில் தேரோட்டம் கோலாகலம், தினமலர், 8.10.2011
  2. தினமணி, 6.9.2014