குன்றத்தூர் கந்தழீஸ்வரர் கோயில்
குன்றத்தூர் கந்தழீஸ்வரர் கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 12°59′17″N 80°05′37″E / 12.988096°N 80.093681°E |
பெயர் | |
பெயர்: | குன்றத்தூர் கந்தழீஸ்வரர் கோயில் |
ஆங்கிலம்: | Kundrathur Kandhazheeswarar Temple |
அமைவிடம் | |
ஊர்: | குன்றத்தூர் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கந்தழீஸ்வரர் |
தாயார்: | நகைமுகைவல்லி என்ற நகைமுகவல்லி |
சிறப்பு திருவிழாக்கள்: | சிவராத்திரி |
வரலாறு | |
தொன்மை: | 1600 ஆண்டுகள் |
அமைத்தவர்: | இரண்டாம் குலோத்துங்க சோழன் |
கந்தழீஸ்வரர் கோயில் என்பது, இந்தியா வின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் குன்றத்தூர் ஊரில் உள்ள சிவாலயம் ஆகும். இக்கோயிலின் மூலவர்: கந்தழீஸ்வரர். அம்மன்/தாயார்: நகைமுகைவல்லி.[1] சதுர வடிவ பீடத்தில், ஆவுடையார் லிங்கத்திருமேனியுடன் மூலவர் காட்சியளிக்கிறார். பொ.ஊ. 1241-ஆம் ஆண்டு, திரிபுவனச் சக்கரவர்த்தி சிறீ இராசராசன் ஆட்சியில், இந்த ஆலயத்துக்குச் செய்த திருப்பணி விவரங்கள் கல்வெட்டில் உள்ளன. பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் அவதரித்த ஊர் குன்றத்தூர். சேக்கிழார் இந்த ஆலயத்தில் தரிசனம் செய்ததுடன் திருப்பணிகளும் செய்துள்ளார். குன்றத்தூர் பகுதியில் 4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார், இரண்டாம் குலோத்துங்க சோழனின் அமைச்சரவையில் முதல் அமைச்சராகப் பணியாற்றியவர். குலோத்துங்க சோழன் கேட்டுக் கொண்டதற்கிணங்க 63 நாயன்மார்கள் பற்றி அவர் 'பெரிய புராணம்' என்னும் நூலை இயற்றினார்.[2] ஆரம்பத்தில் வைணவத்தில் பற்று கொண்டிருந்த சேக்கிழார், காலப்போக்கில் சைவத்தில் மிகப் பற்று கொண்டு தொண்டுகள் புரிந்தார்.
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 46 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கந்தழீஸ்வரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 12°59'17.2"N 80°05'37.3"E (12.988096°N, 80.093681°E). பல்லாவரத்திலிருந்து பம்மல், அனகாபுத்தூர் வழியாக குன்றத்தூர் ஊரில் நுழைந்ததும், மலை மேல் குன்றத்தூர் முருகன் கோயில் உள்ளது. மலையடிவாரத்தில், ஊரகப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. அதன் அருகிலேயே, கந்தழீஸ்வரர் கோயில் உள்ளது. வடபழனி முருகன் கோயிலில் இருந்து, போரூர், கோவூர், மூன்றாம் கட்டளை ஊர்கள் வழியாக குன்றத்தூர் ஊரை அடைந்து, முருகன் கோயில் செல்லும் வழியில் ஊரகப் பெருமாள் கோயிலுக்கு அருகில் கந்தழீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
போக்குவரத்து
சாலைப் போக்குவரத்து
குன்றத்தூருக்கு சென்னையிலிருந்து பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் வழியாகவும், வடபழனி, போரூர், கோவூர், மூன்றாம் கட்டளை வழியாகவும் வந்து செல்ல இரவு 9 மணி வரை மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் திருப்பெரும்புதூர் சென்று வர, மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தொடருந்து போக்குவரத்து
குன்றத்தூர் சென்று வர, தொடருந்து நிலையங்கள் அருகாமையில் இல்லை. பல்லாவரம் தொடருந்து நிலையம் சென்று, அங்கிருந்து பேருந்து சேவைகள் மூலம் பயணப்படலாம்.
வான்வழிப் போக்குவரத்து
சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம், இங்கிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலுள்ளது.
கோயில் வரலாறு
தேவர்களைக் கொடுமைப்படுத்திய அசுரன் தாரகாசுரனை அழிக்க முற்பட்ட முருகன், படையுடன் கிளம்பினார். திருப்போரூர் திருத்தலத்தில் நடந்த போரில் தாரகாசுரனை முருகன் வதம் செய்தார். அந்த சம்ஹாரம் முடிந்ததும், மனம் அமைதி பெற, திருத்தணி நோக்கிப் புறப்பட்டார். வழியில் குன்றத்தூர் மலையின் மீது அமர்ந்தார். குன்றத்தூர் மலையில் தங்கி இருந்த முருகன், ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி பிரதிஷ்டையும் செய்து பூஜித்தார். அந்த சிவன், மலை அடிவாரத்தில் 'கந்தழீஸ்வரர்' என்ற பெயரில் தனி கோவில் கொண்டு அருள்புரிந்து வருவதைக் காணலாம். கந்தனால் உருவாக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டதால் அவருக்கு இந்தப் பெயர் வந்தது.[3] (கந்தழீஸ்வரர்).
சேக்கிழார், வைகை நதிக்கரைத் தெய்வங்களை வணங்கி விட்டு, காவிரிக் கரையில் உள்ள கடவுள்களைத் தரிசித்து விட்டு, பாலாற்றங்கரையில் அருளும் இறைமூர்த்திகளையும் பிரார்த்தனை செய்து விட்டு, குசஸ்தலை நதி பாயும் ஊர் (இன்றைய சென்னை) வர நெருங்கினார். வழியில் அற்புதமான சிவாலயத்தைக் கண்டார். வாழையும் தென்னையும் அதிகம் பயிராகும் பூமி அது. மலையின் அடிவாரத்தில் உள்ள இறைவனைத் தரிசித்து, அங்கேயே சிலகாலம் தங்கி தவம் செய்வது என்று முடிவு செய்தார். பிரம்மாண்டமான சிவலிங்க மூர்த்தியின் சாந்நித்தியத்தில் சரணாகதி அடைந்தார். ஒருநாள் சேக்கிழாருக்கு அற்புத தரிசனம் அளித்தார் சிவபெருமான். அந்தக் கணமே தனது மொத்தக் கர்வமும் தொலைந்ததை உணர்ந்தார் சேக்கிழார்; மெய்சிலிர்த்துப் போனார். 'என் கர்வத்தையும் செருக்கையும் அழித்த கந்தழீஸ்வரா' என்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.[4] பரவசத்தில் திளைத்தார். 'கந்துதல்' என்றால் 'பற்றுதல்'. தன்னைப் பற்றிக் கொண்டிருந்த ஆணவப் பற்றை அழித்த ஈஸ்வரர் என்றும், இவ்வுலகில் வெளியுலகப் பற்றுதல் அழித்தால் இறைவனை நெருங்கலாம் என்ற அர்த்தத்தில் (கந்து+அழி+ஈஸ்வரர்) கந்தழீஸ்வரர் என்று இறைவனுக்குத் திருநாமம் சூட்டி மகிழ்ந்தார்.
மற்ற சன்னதிகள்
இக்கோயிலில், விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ரிஷபாரூடர், சூரியபகவான், சனிபகவான், 63 நாயன்மார்கள் சன்னதிகள் முக்கியமானவை.
கோயில் நேரங்கள்
காலையில் 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காக கோயில் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
ஓவியம்
தனது காலை லிங்கத்தின் மீது தூக்கி வைத்து, தனது கண்ணைப் பிடுங்கும் கோலத்தில் கண்ணப்ப நாயனார் ஓவியம் ஒன்று, கோவில் பிரகாரச் சுவற்றில் உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "Kandhazheeswarar- Kundrathur>Tamilnadu Temple>கந்தழீஸ்வரர்". Dinamalar.
- ↑ "குன்றத்தூரில் சேக்கிழார் குருபூஜை தொடக்கம்". Dinamani. https://www.dinamani.com/tamilnadu/2016/jun/05/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95-2520466.html.
- ↑ "திருமண வாழ்க்கை அருளும் குன்றத்தூர் முருகன் கோவில்". மாலைமலர். https://www.maalaimalar.com/devotional/temples/2017/01/05102355/1060210/kundrathur-murugan-temple.vpf.
- ↑ "Kandhazheeswarar- Kundrathur>Tamilnadu>Temple>கந்தழீஸ்வரர்". Dinamalar.