ஹம் ஆப்கே ஹைன் கௌன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஹம் ஆப்கே ஹைன் கௌன்
இயக்கம்சூரஜ் பார்ஜட்யா
தயாரிப்புஅஜீத் குமார் பார்ஜட்யா
கமல் குமார் பார்ஜட்யா
ராஜ்குமார் பார்ஜட்யா
கதைசூரஜ் பார்ஜட்யா
இசைராம்லட்சுமண்
நடிப்பு
ஒளிப்பதிவுராஜன் கினாகி
படத்தொகுப்புமுக்தார் அகமது
கலையகம்ராஜ்ஸ்ரீ புரொடக்ஷ்ன்ஸ்
விநியோகம்ராஜ்ஸ்ரீ புரொடக்ஷ்ன்ஸ்
வெளியீடுஆகத்து 5, 1994 (1994-08-05)
ஓட்டம்199 நிமிடங்கள்[lower-alpha 1]
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு42.5 மில்லியன்[2]1.35 பில்லியன்

ஹம் ஆப்கே ஹைன் கௌன்(Hum Aapke Hain Koun..!) [3] English: Who am I to You)  1994 ஆம் ஆண்டில் வெளியான இந்திய மெல்லிசைக் காதல் நகைச்சுவைப் படம் ஆகும். இத்திரைப்படத்தை சூரஜ் பார்ஜத்யா எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படம் ராஜ்ஸ்ரீ புரொடக்சன்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் சல்மான் கான்  மற்றும் மாதுரி தீட்சித் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது இந்தியத் திருமண உறவுகளையும், திருமணமான தம்பதியினரின் உறவினையும் அவர்களின் குடும்பங்களுக்கிடையேயான உறவினையும் பற்றி பேசுகிறது. ஒரு குடும்பத்தின் நலனுக்காக ஒருவரின் காதலைத் தியாகம் செய்யும் கதையாகும்.  இதே நிறுவனத்தின் போச்புரி திரைப்படமான நதியா கே பார் (1982) என்ற திரைப்படத்தின் தழுவல் ஆகும்.

இத்திரைப்படம் உலகளவில் 1.35 பில்லியன் அளவுக்கு வசூல் செய்துள்ளது. ஹம் ஆப்கே ஹைன் கௌன், அதிக வருமானம் தந்த பாலிவுட் திரைப்படமாக இருந்தது. இத்திரைப்படம் இந்தியத் திரையுலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய படமாக இருந்தது. படத்தை விநியோகம் செய்யும் முறையிலும், வன்முறை குறைந்த கதைக்களத்திலும் இலாபம் பார்க்க முடியும் என்ற முறையிலும் மாற்றத்தைத் தந்த படமாகும். இதுவே 1990 களில் 1 பில்லியனுக்கும் மேலாக வசூலைத் தந்த முதல் இந்திப் படமாகவும் இதுவரையிலும் கூட அதிக வசூலைத் தந்த பாலிவுட் படங்களில் ஒன்றாகவும் உள்ளது. திரைப்பட வசூல் குறித்த இந்திய அளவிலான அமைப்பு இத்திரைப்படத்தை நவீன சகாப்தத்தின் மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படமாகக் குறிப்பிட்டிருந்தது.[4] இத்திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிரேமாலயம் என்ற பெயருடன் திரையிடப்பட்டது..[5] 14-பாடல்களுடன் உள்ள இசை வடிவம், வழக்கத்திற்கு மாறான அதிக எண்ணிக்கையைக் கொண்டிருந்ததால் இது பாலிவுட் வரலாற்றில் மிகவும் பிரபலமாகியிருந்தது. இத்திரைப்படத்தின் 14 பாடல்களில் 11 பாடல்களுக்கு மிகப் பிரபலமான பாடகி லதா மங்கேஷ்கர் பாடியிருந்தார்.

இத்திரைப்படம், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, உள்ளிட்ட ஐந்து பிலிம்பேர் விருதுகளையும் தேசிய அளவிலான சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்திற்கான விருதினையும் பெற்றுள்ளது. இத்திரைப்படம் இந்திய திருமணக் கொண்டாட்டங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வாறான கொண்டாட்டங்கள் இத்தரைப்படத்தின் பாடல்கள் மற்றும் விளையாட்டுகளையும் உள்ளடக்கிக்கொள்கின்றன.

கதைக்களம்

பிரேம் (சல்மான் கான்) தன் இளம் வயதிலேயே பெற்றோரை இழந்து விடுகிறான். அவன் தனது மூத்த சகோதரன் ராஜேஷ் (மோனிஷ் பால்) மற்றும் மாமா கைலாஷ்நாத் (அலோக் நாத்) ஆகியோருடன் வசித்து வருகிறான். தனது குடும்ப வணிகத்தையும் குடும்பத்தையும் நிர்வகித்து வரும் ராஜேஷ் தனக்கான பொருத்தமான மணப்பெண்னைத் தேடுகிறார். பேராசிரியர் சித்தார்த் சௌத்ரி (அனுபம் கெர்) மற்றும் திருமதி. சௌத்ரி (ரீமா லாகூ) ஆகியோர் இரண்டு பெண்களின், பூஜா (ரேணுகா சகானே) மற்றும் நிஷா (மாதுரி தீட்சித்) பெற்றோராவர். சௌத்ரி தம்பதியினரும் கைலாஷ்நாத் வீட்டினரும் நீண்ட நெடுங்காலத்திற்குப் பின் சந்திக்கும் பழைய நண்பர்கள் ஆவர். இவர்கள் ராஜேஷ் மற்றும் பூஜாவின் திருமணத்திற்காக ஏற்பாடு செய்கிறார்கள். முதல் சந்திப்பிலிருந்தே, நிஷாவும், பிரேமும் இலேசான மனதுடன் சிறுசிறு வாய்ச்சண்டைகளில் ஈடுபடுகிறார்கள். நகைச்சுவையும், சின்னச்சின்ன சேட்டைகளும் படம் முழுவதும், ராஜேஷ்-பூஜா திருமணம் வரையிலும் தொடர்கிறது. பிரேம் தனது மைத்துனியுடன் ஒத்துப்போகக்கூடிய உறவைக் கொண்டுள்ளார். ஒரு நேரத்தில் பூஜாவும், ராஜேஷுக்கும் குழந்தை பிறந்த இருக்கிறது. பேராசிரியர் மற்றும் திருமதி சௌத்ரி கைலாஷ்நாத்தின் வீட்டிற்கு இது தொடர்பான நிகழ்ச்சிக்கு வரமுடியாமல் போக பதிலாக நிஷாவை அனுப்பி வைக்கின்றனர். இதற்கிடையில், நிஷா மற்றும் பிரேம் காதலிக்கத் தொடங்குகின்றனர். ஆனால், இதை இரகசியமாக வைத்துள்ளனர். திரு மற்றும் திருமதி சௌத்ரி தங்களது பேரக்குழந்தையைப் பார்ப்பதற்காக வருகின்றனர். பிரியும் நேரம் வந்த போது அனைவரும் கவலையடைகின்றனர். பிரேம் மற்றும் நிஷா தாங்கள் மீண்டும் இணையும் போது என்றென்றும் பிரியாமல் இருக்க உறுதியெடுக்கிறார்கள்.பூஜா பிறந்த வீட்டிற்கு வந்து பெற்றோருடன் இருக்க அழைக்கப்படுகிறாள். இதற்காக பிரேம் அவளை அழைத்துச் செல்கிறான். அவர்கள் பூஜாவின் பிறந்த வீட்டையடையும் போது தான் பிரேமும், நிஷாவும் காதலிப்பதை பூஜா அறிகிறாள். நிஷாவுக்கு கழுத்தணி ஒன்றை அணிவித்து அவர்கள் திருமணத்திற்கு உறுதுணையாய் நிற்பதாய் உறுதியளிக்கிறாள். இதன் பிறகு திடீரென பூஜா படியிலிருந்து தவறி விழுந்து தலைக்காயமேற்பட்டு இறந்து விடுகிறாள். குடும்பமே சோகத்தில் மூழ்குகிறது.தனது சகோதரியின் குழந்தையை நிஷா நன்கு கவனித்துக் கொள்கிறாள். அவர்களது பெற்றோர் மற்றும் கைலாஷ்நாத் இந்தக் குழந்தைக்கு நிஷா நல்ல தாயாக இருக்க முடியும் என்று உணர்கிறார்கள். அதனால் ராஜேஷுக்கு நிஷாவைத் திருமணம் முடித்துக் கொடுக்க முடிவெடுக்கிறார்கள். இச்செய்தியை அரைகுறையாகக் கேட்கும் நிஷா தனக்கும் பிரேமுக்கும் திருமணம் முடிக்கத் தனது பெற்றோர் நினைப்பதாகக் கருதிக் கொள்கிறாள். அதனால் அதற்கு அவள் ஒத்துக்கொள்கிறாள். திருமணத்திற்கு முந்தைய நாள் நிகழ்ச்சியில் தான் ராஜேஷுக்குத் தன்னை மணமுடிக்க எண்ணியுள்ளதை அறிகிறாள்.

பிரேமும், நிஷாவும் தங்களது காதலை ராஜேஷுக்காகவும், குழந்தைக்காகவும் தியாகம் செய்ய உறுதியெடுக்கிறார்கள். திருமணத்திற்கு சில கணங்கள் முன்பாக, நிஷா பிரேமின் நாய்க்குட்டி டஃபியிடம் பூஜா தனக்களித்த கழுத்தணியையும் தான் எழுதிய கடிதத்தையும் கொடுக்குமாறு கூறுகிறாள். டஃபி நிஷாவின் அறையிலிருந்து வெளியேறி பிரேமின் அறைக்குச் செல்வதற்குப் பதிலாக ராஜேஷின் அறைக்குச் சென்று ராஜேஷிடம் கொடுத்து விடுகிறது. ராஜேஷ் கடிதத்தைப் படித்து பிரேமும், நிஷாவும் ஒருவரையொருவர் காதலிப்பதை அறிகிறான். இறுதியாக, திருமணத்தை நிறுத்தி நிஷா, பிரேமிடம் மன்னிப்புக் கோருகிறான். பின்னர் நிஷாவும், பிரேமும் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்கின்றனர். இறுதியின் படத்தின் தலைப்பு திரையில் தெரிய பதிலாக நான் உன்னுடையவள் என்ற பதிலுடன் முடிகிறது.

அடிக்குறிப்பு

  1. இது பதிப்பினைப் பொறுத்து 185 அல்லது 196 நிமிடங்களாகவோ இருக்கலாம்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஹம்_ஆப்கே_ஹைன்_கௌன்&oldid=29574" இருந்து மீள்விக்கப்பட்டது