ஸ்ரீலேக்கா பேரின்பகுமார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஸ்ரீலேக்கா பேரின்பகுமார் ஈழத்தில் இன்று குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவர். மேடை நாடக நடிகை. நாடகமும் அரங்கியலும் ஆசிரியை.

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் தர்மலிங்கம் லோகேஸ்வரி தம்பதிகளுக்கு மகளாக 14.05.1977 இல் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை சுன்னாகம் மயிலணி சைவ மகாவித்தியாலயத்திலும், இடைநிலை, உயர்கல்வியை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும் பெற்றார். யாழ்ப்பணப் பல்கலைக்கழகத்தில் கலை (சிறப்பு) மாணிப் பட்டத்தை பெற்றதோடு தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வியியல் டிப்ளோமா கற்கைநெறியிலும் தேறியுள்ளார். ஆசிரியராக கடமையாற்றும் இவரது துணைவர் பாடசாலை அதிபர் பேரின்பகுமார்.

கலை இலக்கிய பணி

பாடசாலையில் கல்வி கற்கும் காலத்திலிருந்தே எழுத்தாற்றல் பெற்ற இவர் அக்காலத்திலேயே எழுத‍த்தொடங்கினார். கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம், நாடக எழுத்துரு, நாவல் என்ற அனைத்துத் தளங்களிலும் தடம் பதித்துள்ளார். இவரது எழுத்துகளுக்கு தாயகம், கலைமுகம் சஞ்சிகைகளும் வலம்புரி பத்திரிகையும் களம் அமைத்துக் கொடுத்தன. இவரது ஆக்க இலக்கியங்களின் கருப்பொருள் சமூக நோக்கோடு அமைந்த‍தோடு அவரால் வார்க்கப்படும் பாத்திரங்கள் நாளாந்த வாழ்வோட்டத்தில் தினம் சந்திக்கும் பாத்திரங்களாக இருக்கின்றன. தேசிய கலை இலக்கியப் பேரவையின் உறுப்பினரான ஸ்ரீலேக்கா பேரின்பகுமார் சிறுகதைகள் மட்டுமன்றி கவிதைகளையும் எழுதியுள்ளதோடு பேரவையின் கவியரங்கமான நிற்க அதற்குத் தக கவியரங்கில் பங்குபற்றினார்.அவரது சில கவிதைகள் 'தாயகம்' இதழில் பிரசுரமாகியுள்ளன. நாடக அரங்க‍க் கல்லூரியில் இணைந்து குழந்தை ம. சண்முகலிங்கத்தின் அன்ரிக்கனி நாடகத்தில் முதன்மைப் பாத்திரத்தில் சிறப்பாக நடித்து நாடக ஆர்வலரின் பாராட்டைப் பெற்றதோடு மூத்த நாடக கலைஞர்களின் வாழ்த்தையும் பெற்றவர். செம்முக ஆற்றுகை குழுவின் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் அன்பமுதூறும் அயலார் நாடகத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்தும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை வேப்பம்குச்சி (சிறுகதைத் தொகுப்பு), கிண்கிணிநாதங்கள் (சிறுவர் நாடகங்கள்), தூரத்து மழையும் இங்கு சாரல் அடிக்கும் (சிறுகதைத் தொகுப்பு)-2017, மயில் இறகு (சிறுவர் இலக்கியம்), கண்மணியே கவி பாடு (சிறுவர் பாடல்கள்), கிணற்றங்கரை (நாடக எழுத்துருக்கள்) ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.

பெற்ற பரிசுகள், விருதுகள்

  • தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடாக வந்துள்ள கிணற்றங்கரை நாடகத் தொகுப்புக்கு இலங்கை சாகித்திய விருது
  • மயிலிறகு சிறுவர் இலக்கியத்திற்காக வடமாகாண அரசின் சிறந்த நூலுக்கான விருது
  • கிண்கிணி நாதங்கள் வடமாகாண அரசின் சிறந்த நூலுக்கான விருது
  • கிணற்றங்கரை நாடக இலக்கியத்திற்கான வடமாகாண அரசின் சிறந்த நூலுக்கான விருது
  • தேசிய ரீதியில் அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் தொடர்ந்து 09 வருடங்களாக விருதுகள் பெற்றுள்ளார்.

வெளி இணைப்பு

ஆளுமை:ஸ்ரீலேக்கா பேரின்பகுமார்