வல்லூர் தேவராசப்பிள்ளை
வல்லூர் தேவராசப்பிள்ளை என்பவர் குசேலோபாக்கியானம் என்ற கதை இலக்கிய நூலின் ஆசிரியர் என்று அறியப்படுபவர் ஆவார்.
வரலாறு
வல்லூர் தேவராசப்பிள்ளையின் தந்தை பெயர் வீராச்சாமிப் பிள்ளை. வல்லூர் தேவராசப்பிள்ளை பிறந்த ஊர் தொண்டை நாட்டு வல்லூர் ஆகும். இவர் ஒரு செல்வந்தராவார். இவர் பெங்களூரில் வசித்து வந்தார். இவர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளிடம் பாடம் கேட்ட மாணவர் ஆவார். காலம் கி.பி.1837 ஆகும்.[1] இவர் தம் ஆசிரியர் போல செய்யுள் இயற்ற ஆர்வம் கொண்டு சில தனிப்பாடல்களை இயற்றித் தன் ஆசிரியரிடம் காட்டித் திருத்திக்கொண்டார். பின்னர்த் தெலுங்கு நூலான குசேலோபாக்கியானத்தைத் தமிழில் இயற்ற ஆர்வம் கொண்டார். தெலுங்கு நூலை வசன நடையில் தமிழில் எழுதி வைத்துக் கொண்டு, அதைத் தமிழில் செய்யுள் இலக்கியமாக எழுத முன்றார். அப்போது அவருக்குச் செய்யுள் இயற்றுவதில் போதிய ஆற்றல் இல்லாததால் சில பாக்கள் மட்டும் எழுதி, மேற்கொண்டு எழுத இயலாமல் சோர்வடைந்திருந்தார். அதைக்கண்டு இரங்கிய இவரின் ஆசிரியர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தானே குசேலோபாக்கியானம் நூலை இயற்றி அதை வல்லூர் தேவராசப்பிள்ளை பெயரிலேயே வெளியிடவைத்தார்.[2] இந்த வரலாறை உ. வே. சாமிநாதையர் எழுதிய திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் என்ற நூலின் முதல் பாகத்தில் தெளிவாக எழுதியுள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ ஏழாம் வகுப்பு, தமிழ். செய்யுள்: தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். 2007. பக். 31.
- ↑ பாலூர் கண்ணப்ப முதலியார் எழுதிய, தமிழ் இலக்கிய அகராதி, பக்கம் 476, பதிப்பு: 1957, சென்ட்ரல் பதிப்பகம், சென்னை.