வ. சு. செங்கல்வராய பிள்ளை
இயற்பெயர்/ அறியும் பெயர் |
வ. சு. செங்கல்வராய பிள்ளை |
---|---|
பிறப்புபெயர் | வ. சு. செங்கல்வராய பிள்ளை |
பிறந்ததிகதி | 22 மே 1933 |
பிறந்தஇடம் | மஞ்சக்குப்பம் |
இறப்பு | ஆகத்து 25, 1972 | (அகவை 89)
அறியப்படுவது | நூலாசிரியர், உரையாசிரியர் |
பெற்றோர் | வடக்குப்பட்டு சுப்பிரமணிய பிள்ளை |
வ. சு. செங்கல்வராய பிள்ளை (ஆகஸ்ட் 15, 1883 - ஆகஸ்ட் 25, 1971) தமிழறிஞர். தணிகைமணி, ராவ்பகதூர், வ.சு.செ. என்று அழைக்கப்படுவர் பல தமிழ் நூல்களை எழுதியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
திருப்புகழைத் தேடித் தொகுத்து பதிப்பித்த சிவஞானச் செல்வர், வடக்குப்பட்டு சுப்பிரமணிய பிள்ளையின் இளைய மகனான இவர், அன்றைய தென்னாற்காடு மாவட்டத்திலுள்ள மஞ்சக்குப்பத்தில் பிறந்தார்.
1888-1891-ஆம் ஆண்டுகளில் அரசு ஊழியரான இவரின் தந்தையார் நாமக்கல்லில் பணியாற்றியதால், அங்குள்ள கழகப் பள்ளிக்கூடத்தில் தணிகைமணி மூன்றாம் வகுப்பு வரை பயின்றார். அதன் பிறகு கும்பகோணம், திருவாரூர், மதுரை ஆகிய ஊர்களில் தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். 1901-ஆம் ஆண்டில் சென்னை மில்லர் கல்லூரியில் மெய்யியல் பட்டமும், பின்னர் அதே கல்லூரியில் தமிழ்ல் முதுமாணிப் பட்டமும் பெற்றார்.
கல்வியில் சாதனையாளராக விளங்கிய தணிகைமணி, அலுவலகப் பணியிலும் தனது முத்திரையைப் பதித்தார். இவரது பணியைப் பாராட்டி ஆங்கிலேய அரசு ராவ் சாகிப், ராவ் பகதூர் ஆகிய பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தது.
தமிழ்ப் பணி
மரபான சைவக் குடும்பப் பின்னணியாலும், இவருக்குத் தமிழ் கற்பித்த தமிழாசிரியர்களான பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள், கோபாலாசாரியார் ஆகியோரின் தாக்கத்தாலும், இவர் தமிழ்ப் பணியின்பால் தம்மை இணைத்துக் கொண்டார். 1905-இல் அரசுப் பணியில் சேர்ந்த இவர், அலுவலகப் பணியையும், தமிழ்ப் பணியையும் ஒருங்கிணைத்துச் செய்தார்.
சிறுவயதிலேயே தனது தமையனாரிடம் யாப்பிலக்கணங்களைக் கற்றுக்கொண்ட இவர்,
"கண்ணனும் வேதனும் போற்றுமுருகா கவின் மணியே
விண்ணவர் கோன்தான் பதம்பெறச் செய்த செவ்வேலவனே
பெண்ணோடு பாகன் அளித்த குமரா பெருநிதியே
தண்ணருளே பொழி தேவே தணிகைத் தயாநிதியே"
என்று முருகனைப் புகழ்ந்து பாடல்களைப் பாடியுள்ளார். திருத்தணிகை முருகனைப் போற்றும் பாங்கிலான இப்பாடல், தணிகைமணியின் தொடக்ககாலப் பாடல்களில் ஒன்று எனலாம். இவ்வாறு தமிழார்வம் கொண்ட தணிகைமணி உரையாசிரியர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாசிரியர் எனப் பல தளங்களில் தமிழுக்காகத் தொண்டாற்றியுள்ளார்.
எழுதிய நூல்கள்
தணிகைமணி தாம் வாழ்ந்த காலத்தில் ஏறத்தாழ நாற்பது நூல்களைப் படைத்துள்ளார். இவை பெரும்பாலும் முருகனைப் பற்றியனவாகவும், தேவாரத்தைப் பற்றியனவாகவும் உள்ளன. தணிகைமணியின் படைப்புகளில் முன்னிற்பவை அவரின் முருகனைப் பற்றிய ஆக்கங்களாகும்.
- திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ்,
- தணிகைப் பதிகம்,
- தணிகைத் தசாங்கம்,
- வேல்ப்பாட்டு,
- சேவல்பாட்டு,
- கோழிக்கொடி,
- தணிகைக் கலிவெண்பா,
- திருத்தணிகேசர் எம்பாவை,
- திருத்தணிகேசர் திருப்பள்ளியெழுச்சி,
- மஞ்சைப் பாட்டு,
- வள்ளி திருமணத் தத்துவம்,
- வள்ளி-கிழவர் வாக்குவாதம்
முதலிய பல நூல்களைச் இயற்றியுள்ளார்.
இவை தவிர, முருகனைப் பற்றிய பாடல்கள் அனைத்தையும் தொகுத்து, "முருகவேள் பன்னிரு திருமுறை' என்ற தொகுப்பையும் தந்துள்ளார். இதனுள் திருப்புகழ் கந்தரலங்காரம், கந்தரநுபூதி, திருவகுப்பு, சேய்த்தொண்டர் புராணம் முதலியன உள்ளன.
தணிகைமணி, திருப்புகழுக்கு மிக எளிமையான உரையை எழுதிப் பதிப்பித்துள்ளார். 1951-ஆம் ஆண்டு முதல் இவரின் திருப்புகழ் உரை வெளிவரத் தொடங்கியது.[1] இதை அவர், இதழ் போன்றே பகுதி பகுதியாக வெளியிட்டுள்ளார். அவரின் திருப்புகழ் பதிப்பு முயற்சியானது தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது எனலாம்.
தேவார ஒளிநெறி
தணிகைமணியின் மற்றுமொரு சிறந்த முயற்சி, தேவார ஒளிநெறி, தேவார ஒளிநெறிக் கட்டுரைகள், திருவாசக ஒளிநெறி, திருவாசக ஒளிநெறிக் கட்டுரைகளாகும். தேவாரத்திலுள்ள சொற்கள், தலங்கள், அரிய சொல்லாட்சிகள், அடியவர்கள் முதலியவற்றுக்கு அகர வரிசையில் விளக்கம் தந்துள்ளார்.
இவரின் தேவார ஒளிநெறியானது 466 தலைப்புகளில் மூன்று பாகங்களாகவும், அப்பர் தேவார ஒளிநெறி 190 தலைப்புகளில் இரண்டு பாகங்களாகவும், சுந்தரர் தேவார ஒளிநெறி 261 தலைப்புகளில் ஒரே நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டுடைமை
இவரது படைப்புகளை தமிழக அரசு 2010-11 அறிக்கையில் நாட்டுடைமை ஆக்கும் அறிவிப்பை வெளியிட்டது.[2]
மேற்கோள்கள்
- ↑ "நூல் வெளி: எங்கும் புகழ் மணக்கும் திருப்புகழ்!". Hindu Tamil Thisai. 2023-06-10. பார்க்கப்பட்ட நாள் 2023-06-24.
- ↑ "புதிய புத்தகம் பேசுது". 16 ஜூலை 2010. பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.
{{cite web}}
: Check date values in:|date=
(help)
வெளி இணைப்புகள்
- தணிகைமணி வ.சு.செங்கல்வராய பிள்ளை, முனைவர் அ.கா.அழகர்சாமி, தினமணி, மார்ச் 7, 2010