மோகன் குமாரமங்கலம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மோகன் குமாரமங்கலம் (நவம்பர் 1, 1916 - மே 31, 1973) இந்திய அரசியல்வாதியும் புகழ் பெற்ற வழக்கறிஞரும் ஆவார். இவர் பொதுவுடமை கொள்கையின் பால் ஈர்ப்பு கொண்டவர். முதலி்ல் இந்திய பொதுவுடமைக்கட்சியிலும் பின்னர் காங்கிரசு கட்சியிலும் பங்குவகித்தார். இவர் புதுச்சேரி மக்களவை உறுப்பினராக 1971-1972 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1973 மே 31 இல் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.[1]

கல்வி

சென்னை மாகாண முன்னாள் முதல்வர் ப. சுப்பராயன் - இராதாபாய் தம்பதி்க்கு மூன்றாவது மகனாக லண்டனி்ல் 1916ம் ஆண்டு பிறந்தார். கோபால் குமாரமங்கலம், ப. பி. குமாரமங்கலம் ஆகியோர் இவருக்கு மூத்தவர்கள். இவர் ஈடன், கிங் கல்லூரிகளிலும் கேம்பிரிச்சிலும் கல்வி கற்றார். கேம்பிரிச்சில் இருந்த போது கேம்பிரிச் சங்கத்தின் (Cambridge Union Society) தலைவராக 1938ல் பதவி வகித்தார். கேம்பிரிச்சில் இருந்த போது பொதுவுடமைக்கொள்கையின் பால் ஈர்ப்புகொண்டார். இன்னர் டெம்பிளில் வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்டார்.

இந்திய சுதந்திர போராட்டம்

1939ல் இந்தியா திரும்பி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். 1941 ல் சி. சுப்ரமணியம், உமாநாத்,இராமமூர்த்தி ஆகியோருடன் அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகித்தற்காக கைது செய்யப்பட்டார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மக்களின் போர் என்ற பொதுவுடமை இதழின் ஆசிரியராக பணி புரிந்தார்.

அமைச்சர்

இவர் சோவியத் ஒன்றியத்துடன் நட்புறவுடன் இந்தியா இருக்கவேண்டும் என விரும்பினார். இந்திய-சோவியத் பண்பாட்டு அமைப்பை உருவாக்கினார். 1960 கால கட்டத்தில் பொதுவுடமை கட்சியிலிருந்து விலகிக்கொண்டார். 1967 ல் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து இவர் காங்கிரசு கட்சியில் இணைந்தார். 1971 லிருந்து 1973 வரை நடுவண் அரசின் இரும்பு மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

குடும்பம்

இவர் வங்காள அரசியல் தலைவரான அஜோய் முகர்சியின் சகோதரியான கல்யாணி முகர்சியை 1943ல் மணந்தார். அஜோய் முகர்சி பின்னாளில் மேற்கு வங்காளத்தின் முதல்வராக பதவி வகித்தார். இவர்களுக்கு ரங்கராஜன் குமாரமங்கலம் என்ற மகனும் இரண்டு மகள்களும் பிறந்தனர். லலிதா குமாரமங்கலம் இவரது மகளாவார். ரங்கராஜன் குமாரமங்கலம் காங்கிரசு மற்றும் பாஜக அமைச்சரவையில் அங்கம் வகித்தார்.

மேற்கோள்கள்

  1. "Indian crash site probed by crews." அசோசியேட்டட் பிரெசு (AP) at the Spokane Daily Chronicle. Friday June 1, 1973. p. 11. Retrieved from கூகிள் செய்திகள் (63/72) on November 28, 2014.
"https://tamilar.wiki/index.php?title=மோகன்_குமாரமங்கலம்&oldid=27357" இருந்து மீள்விக்கப்பட்டது