மியரி ஜேம்சு துரைராஜா தம்பிமுத்து
இயற்பெயர் | மியரி ஜேம்ஸ் துரைராஜா தம்பிமுத்து Meary James Thurairajah Tambimuttu |
---|---|
பிறந்ததிகதி | ஆகத்து 15, 1915 |
பிறந்தஇடம் | இலங்கை, இலங்கை |
இறப்பு | சூன் 23, 1983 | (அகவை 67)
புனைபெயர் | தம்பிமுத்து |
பணி | இதழாசிரியர், கவிஞர் |
தேசியம் | பிரித்தானியர் |
காலம் | 1938–1983 |
வகை | கவிதை |
மியரி ஜேம்சு துரைராஜா தம்பிமுத்து (Meary James Thurairajah Tambimuttu, 15 ஆகத்து 1915 – 23 சூன் 1983) இலங்கைத் தமிழரும், ஆங்கிலக் கவிஞரும், இதழாசிரியரும், திறனாய்வாளரும், பதிப்பாளரும் ஆவார்.
வாழ்க்கைச் சுருக்கம்
இலங்கையின் வடக்கே அச்சுவேலியில்[1] பிறந்த தம்பிமுத்து உரோமன் கத்தோலிக்கராக வளர்க்கப்பட்டார்.[1] ஆங்கிலத்தில் பெரும் புலமை பெற்று, 21வது அகவையில் தான் எழுதிய ஆங்கிலக் கவிதைகளைத் தொகுத்து மூன்று பாகங்களாக வெளியிட்டார். தம்பிமுத்து கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் கல்வி பயின்று பின்னர் 1938ஆம் ஆண்டில் இலண்டனுக்குப் புலம் பெயர்ந்தார். இலண்டன் சென்ற அடுத்த ஆண்டு 1939 சனவரியில் தனது நண்பரான அந்தனி டிக்கின்சு என்பவருடன் சேர்ந்து Poetry London என்ற சிற்றிதழை ஆரம்பித்தார்.[1] இவ்விதழ் போர்க் கால சூழலில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. தம்பிமுத்து அவரது நண்பர்களால் "தம்பி" என அழைக்கப்பட்டார். கவிதை இதழை வெளியிட்டதோடு, அவ்விதழின் வழியாக நூல் வெளியீட்டிலும் ஈடுபட்டார். Editions Poetry London, Lyrebird Press என்ற இரு பதிப்பகங்களை நிறுவி அவற்றினூடாக பல இலக்கியங்களை வெளியிட்டார்.
தம்பிமுத்துவின் பொயெட்ரி லண்டன் பதிப்பகம் எலிசபெத் ஸ்மார்ட் எழுதிய By Grand Central Station I Sat Down and Wept, டேவிட் காசுகாயின் எழுதிய Poems 1937-1942, லாரன்சு டரெல் எழுதிய Cefalu, என்றி மில்லரின் The Cosmological Eye, Sunday After the War, விளாதிமிர் நபோக்கோவின் The Real Life of Sebastian Knight, கீத் டக்ளசின் Alamein to Zem Zem போன்ற பிரபலமான நூல்களை வெளியிட்டது.[2] 1951 ஆம் ஆண்டு வரை இப்பதிப்பகம் நூல்களை வெளியிட்டு வந்தது.[3]
தம்பிமுத்து பிற்காலத்தில் அமெரிக்காவில் Poetry London - New York என்ற பெயரில் சிற்றிதழ் ஒன்றை ஆரம்பித்து நடத்தினார். தனது 67வது அகவையில் இலண்டனில் காலமானார். இலங்கையில் தம்பிமுத்து வெளியிட்ட படைப்புகள் தற்போது கிடைக்கா விட்டாலும், அவரது பிற்காலப் படைப்புகள் வடமேற்குப் பல்கலைக்கழகத்திலும், பிரித்தானிய நூலகத்திலும் வைக்கப்பட்டுள்ளன.
நூல்கள்
கவிதை நூல்கள்
- Natarajah: A Poem for Mr. T. S. Eliot's Sixtieth Birthday (1948) PL Pamphlets
- Out of this War (1941) The Fortune Press
தொகுப்புகள்
- T. S. Eliot: A Symposium தொகுப்பாளர்கள்: ரிச்சார்ட் மார்ச், தம்பிமுத்து (1948)
- Poetry in Wartime: An Anthology (1942)
- India Love Poems (1977)
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "One Hundred Tamils of the 20th Century". தமிழ்நேசன். http://www.tamilnation.co/hundredtamils/tambimuttu.htm. பார்த்த நாள்: 15 ஆகத்து 2015.
- ↑ Williams, Jane (1989). Tambimuttu: Bridge Between Two Worlds. Peter Owen. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7206-0718-3. https://archive.org/details/tambimuttubridge00will. pp. 274-290
- ↑ Poetry London - Poetry London, Poetry London—New York, Poetry London/Apple Magazine.
வெளி இணைப்புகள்
- Poetry London இதழ்கள், நூலகம் திட்டம்
- ஆங்கிலக் கவிதை உலகில் தடம் பதித்த துரைராஜா தம்பிமுத்து – எம். பௌசர், எதுவரை, இதழ் 19
- Tamil studies Now published in the collection: T.Wignesan. Rama and Ravana at the Altar of Hanuman: On Tamils, Tamil Literature & Tamil Culture. Allahabad:Cyberwit.net, 2008, 750p. & at Chennai: Institute of Asian Studies, 2007, 439p. பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
- Tambimuttu Archive at Northwestern University Library பரணிடப்பட்டது 2010-06-09 at the வந்தவழி இயந்திரம்
- Tambimuttu and the Poetry London Papers at the British Library: Reputation and Evidence