மகர னகர மயக்கம்
Jump to navigation
Jump to search
[ம்] எழுத்தில் முடியும் சொல் வருமொழியின் முதலெழுத்து உயிரெழுத்தாக இருந்தால் [ன்] எழுத்தாக மாறும்.
எடுத்துக்காட்டு
- அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து [1]
- அறன் அழீஇ அல்லவை செய்தல் [2]
- அறன் வரையான் (வரையான் என்னும் சொல்லிலுள்ள [வ] அரையுயிர்) [3]
தமிழில் இப்படி மயங்காத அஃறிணைச் சொற்கள் ஒன்பது எனத் தொல்காப்பியம் வரையறுத்துக் கூறுகிறது. [4] இவற்றிற்கு எடுத்துக்காட்டுகள் தருவதில் உரையாசிரியர்கள் வேறுபடுகின்றனர்.
உயர்திணைப் பெயர்கள் இவ்வாறு மாறுவதிலை.
- கந்தன் என்னும் சொல்லைக் கந்தம் என எழுதுவதில்லை.
1.உகின் [5], 2.செகின் [6], 3.விழன் [7], 4.பயின் [8], 5.அழன் [9], 6.புழன் [10], 7.குயின் [11], 8.கடான் [12], 9.வயான் [13] ஆகியவை அந்த 9 சொற்கள் என்று இளம்பூரணர் எடுத்துக்காட்டுகிறார். இவற்றில் உகின் என்னும் சொல்லை விட்டுவிட்டு எகின் [14] என்னும் சொல்லைச் சேர்த்து நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.
- நன்னூல் இதனை எழுத்துப்பொலி எனக் குறிப்பிடுகிறது. [15]
அடிக்குறிப்பு
- ↑ திருக்குறள் 130
- ↑ திருக்குறள் 182
- ↑ திருக்குறள் 150
- ↑
மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப
புகர் அறக் கிளந்த அஃறிணை மேன (தொல்காப்பியம் எழுத்ததிகாரம் 82, மொழிமரபு) - ↑ இது மருவி நகத்தைக் குறிக்கும் 'உகிர்' என்னும் சொல்லாகியுள்ளது
- ↑ இதன் மரூஉமொழி காளையின் செகிலை(திமிலை)க் குறிக்கிறது
- ↑ விழல் என்னும் நாணல் தட்டை. இதனைப் பேய்க்கரும்பு எனவும் கூறுவர்
- ↑ அரக்குப் பிசின் "சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கல்" (அகநானூறு 1)
- ↑ அழல் என்னும் பிணம் எரியும் தீ
- ↑ உள்துளை கொண்ட பொருள் (புழை)
- ↑ குயின்றமைத்த பாறை வீடுகள்
- ↑ யானை மதத்தைக் குறிக்கும் 'கடாம்' என்னும் சொல்லின் மயக்கம் இது அன்று. கடைநிலையை உணர்த்தும் சொல்
- ↑ கருவுற்றிருக்கும் காலத்தில் மகளிர் விரும்பும் மண் தின்னும் ஆசை
- ↑
புளியமரம்
- எகின்-மரம் ஆயின் ஆண்-மர இயற்றே. (தொல்காப்பியம் சொல்லதிகாரம் 337)
- ஏனை எகினே அகரம் வருமே;
- வல்லெழுத்து இயற்கை மிகுதல் வேண்டும். (தொல்காப்பியம் சொல்லதிகாரம் 338)
- ↑
மகர இறுதி அஃறிணைப் பெயரின்
னகரமோடு உறழா நடப்பன உளவே (நன்னூல் 122)