பொ. ம. இராசமணி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பொ. ம. இராசமணி

பொ. ம. ராசமணி (P. M. Rasamani, பெப்ரவரி 1, 1936 - நவம்பர் 28, 2009) ஒரு தமிழறிஞர். பட்டிமன்ற மேடைகளில் பங்கேற்றவர். 79 தமிழ் நூல்களை எழுதியுள்ளார். ஓவியர். தென் தமிழக மக்களால் "நகைச்சுவைத் தென்றல்", "இரண்டாம் கலைவாணர்", "இலக்கிய வித்தகர்" என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

இவர் 1936 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் முதல் நாள் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயிலை அடுத்த மலையடிகுறிச்சி என்ற சிற்றூரில் பிறந்தார். அவரது தந்தை பெயர் மரிய கனகப்பன்; தாயார் மரிய செல்லம்மாள். சிறு வயது முதலே தமிழ் மீது ஆர்வம் கொண்ட இவர் தனது 12ஆம் வயதில் தனது முதல் சிறுகதையை பிரசுரித்தார்; தனது 16ஆம் வயதில் பொது மேடைகளில் பேச ஆரம்பித்தார். 1952 ஆம் ஆண்டு முதல் இளைஞர் காங்கிரஸ் இயக்க பேச்சாளராகத் தனது சொற்பொழிவுகளை தொடங்கிய இவர், விரைவில் தனது அரசியல் தளைகளை உதறிவிட்டு அரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழ்ப் பணிகளை தொடர்ந்தார். கணிதம் மற்றும் ஆங்கில துறைகளிலும் விருப்பம் கொண்டிருந்த இவர், பாளையம்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் இளநிலை கணிதம் மற்றும் இளநிலை ஆசிரியப் பயிற்சி கற்றுத் தேர்ந்தார். பாளையம்கோட்டை தூய சவேரியார் மேநிலைப் பள்ளியில் 35 ஆண்டு காலம் (1959 -1994) கணித ஆசிரியராகவும் பணிபுரிந்தார். இவர் ஆசிரிய பணியின் போதும் பணி ஓய்வுக்கு பின்னும் தனது மேடைப் பேச்சுக்களையும் எழுத்துப் பணிகளையும் தொடர்ந்து வந்தார்.

தமிழ்ப் பணி

தமிழ் இலக்கியங்களையும் சமூக மற்றும் சமய சீர்திருத்த சிந்தனைகளையும் பாமர மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஊடகமாக இவர் நகைச்சுவையை கண்டார். இவரது நகைச்சுவை நிறைந்த இலக்கியப் பேச்சுக்கள், 1960களின் தொடக்கத்தில், படித்த மேல்தட்டு மக்களுக்கு மட்டுமென கருதப்பட்ட தமிழ் இலக்கிய மன்றங்களை, பெருந்திரளான மக்கள் கூட்டம் காண வர செய்தன. துவக்கத்தில், ரா. பி. சேதுப்பிள்ளை, குன்றக்குடி அடிகளார் மற்றும் கி. வா. ஜகந்நாதன் போன்ற தமிழறிஞர்களின் தலைமையில் பேசி வந்த இவர், பிறகு தனக்கென்று தனியொரு பாணியில் நகைச்சுவை பட்டிமன்றங்களையும், வழக்காடு மன்றங்களையும், விசாரணை மன்றங்களையும் படைத்தார். இவரை நடுவராகக் கொண்டு, இவரது தலைமையில் 60 தமிழ் பேச்சாளர்கள் அடங்கிய ஒரு குழு இலக்கிய, சமூக மற்றும் சமய தலைப்புகளில் இத்தகைய விவாத மன்றங்களை தமிழகமெங்கும் ஏறக்குறைய 40 ஆண்டு காலம் (1967 -2006) நடத்தி வந்தது. இக்குழுவின் களம் பெரும்பாலும் தென் தமிழக மாவட்டங்களாக இருந்தாலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும், சில முறை கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களிலும், ஒரு முறை ஐக்கிய அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரத்திலும் (2002 ஆம் ஆண்டு) இக்குழு தமது விவாத மன்றங்களை அரங்கேற்றி உள்ளது. பொ. ம. ராசமணி, தனது பாணி பட்டிமன்ற முறைமைகளை இளைய தலைமுறை பேச்சாளர்கள் கற்றுக்கொள்வதற்காக, "நகைச்சுவை பட்டிமன்றங்கள் 41" (புத்தக பூங்கா பதிப்பகம், சென்னை, 2001) என்ற நூலாக வெளியீட்டு உள்ளார்.

பொ. ம. ராசமணி மரபு கவிதைகளையும் சந்த பாடல்களையும் இயற்றியுள்ளார். இவரது "அறிவு பசி" (சாமி செல்வ வெளியீடு, சங்கரன் கோயில், 1963) என்ற சந்தப் பாடல் திரட்டு சமூக சீர்திருத்த சிந்தனைகளைப் போதிக்கிறது. இவரது கிறித்தவப் புதினமான "சாவின் தோல்வி" (கௌசானல் பதிப்பகம், திருநெல்வேலி, 1960), மரணப்படுக்கையில் இருக்கும் தனது மகளை காப்பாற்ற போராடும் ஒரு தந்தையின் உணர்வு போராட்டங்களை நம் கண் முன்னே படைக்கிறது. தமிழ் வர்ணனைகளை இவர் எடுத்தாளும் திறனுக்கு எடுத்துக்காட்டு இவரது "பேசாத பேச்சு" (கௌசானல் பதிப்பகம், திருநெல்வேலி, 1961) எனும் நூல். இவரது நகைச்சுவை கதைகளின் தொகுப்பான "சிரிப்பு தரும் சிந்தனைகள்" (புத்தக பூங்கா பதிப்பகம், சென்னை, 1991) என்ற நூல் மூன்றாம் பதிப்புகளை கடந்து இன்னும் பல இளைய தலைமுறை நகைச்சுவை பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு நகைச்சுவை அகராதியாக உதவுகிறது. இவரது இலக்கிய ஆராய்ச்சிக்கு உதாரணம் இவரது "வள்ளுவர் ஏன் வளர்ந்து கொண்டே இருக்கிறார்?" (புத்தக பூங்கா பதிப்பகம், சென்னை, 2004) என்ற நூல். இவரது 61 ஆண்டு கால (1948 -2009) எழுத்து பணிக்கு சான்றாக இன்று இவரது 79 நூல்கள் வாழ்ந்து கொண்டுள்ளன.

சிறப்புகள்

இந்தியக் கத்தோலிக்க எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக 1972 ஆம் ஆண்டு பதவி வகித்தார். 2000 ஆம் ஆண்டு திருச்சி "கலை காவேரி" அமைப்பின் சிறப்பு விருது பெற்றார். 2002 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டு ஹூஸ்டன் நகர பாரதி இலக்கிய மன்றத்தின் "சிந்தனை செல்வர்" விருது பெற்றார். பாளையம்கோட்டை கத்தோலிக்க மறை மாவட்ட பத்திரிகையான "புதிய பார்வை" க்கு பொறுப்பாசிரியராக பணியாற்றி வந்தார். தமிழக தொல்லியல் ஆய்வு துறையின் கௌரவ உறுப்பினராக பணி புரிந்தவர்.

"https://tamilar.wiki/index.php?title=பொ._ம._இராசமணி&oldid=5198" இருந்து மீள்விக்கப்பட்டது