பிளாண்டர் புலத்தில்
பிளாண்டர் புலத்தில் (In Flanders Fields) என்பது முதலாம் உலகப் போர்க் காலத்தில் கனடிய போர் மருத்துவர் லெப்டினன்ட் கேணல் சோன் மக்கிரே என்பவரால் எழுதப்பட்ட ஒரு போர்க் கவிதை ஆகும்.[1] இக்கவிதை மே மாதம் மூன்றாம் நாள் 1915இல் தனது நண்பனும் சக படைவீரருமான அலெக்சிசு கெல்மர் என்பவரது இழப்பின் உத்வேகத்தால் உருவாகியது. டிசம்பர் எட்டாம் நாள் இலண்டனில் வெளியாகிய பஞ்ச் பத்திரிகையில் வெளிவந்தது.
முதலாம் உலகப்போரில் படைவீரர்களிடையே மிகவும் பிரபலம் பெற்றதும் அடிக்கடி கூறப்படுவதுமான கவிதையாக இது விளங்கியது. இதன் திடீர்ப் பிரசித்தி காரணமாக, கவிதையின் சிலவரிகள் போருக்கு பணம், படைபலம் திரட்ட உதவியது. இக்கவிதையில் போரில் உயிரிழந்த வீரர்களைப் புதைத்த இடங்களில் வளரும் பொப்பிச் செடிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது, அதுவே நினைவுறுத்தும் நாளின் சின்னமாக இன்று விளங்குகின்றது. இக்கவிதையும் பொப்பிச் சின்னமும் பொதுநலவாய நாட்டு மக்களிடையே, குறிப்பாக கனடாவில், பிரபல்யமானவையாக உள்ளன.
கவிதை
In Flanders fields the poppies blow
Between the crosses, row on row,
That mark our place; and in the sky
The larks, still bravely singing, fly
Scarce heard amid the guns below.
We are the Dead. Short days ago
We lived, felt dawn, saw sunset glow,
Loved and were loved, and now we lie
In Flanders fields.
Take up our quarrel with the foe:
To you from failing hands we throw
The torch; be yours to hold it high.
If ye break faith with us who die
We shall not sleep, though poppies grow
In Flanders fields.
கவிதையின் தமிழாக்கம்
பிளாண்டர் புலத்தில் பொப்பிகள் மலரும்
சிலுவைகள் இடையே, தொடர் தொடராக,
எங்கள் இடமே அதுவென சுட்டும், அந்த
வானத்தில் வானம்பாடிகள் பறக்கும்,
அவை வீரகானங்கள் மௌனமாய் இசைக்கும்,
துப்பாக்கி ஓசைகள் கீழேயோங்க – கானமோ
அரிதாய்ச் செவிதன்னில் மோதும்.
நாம்தான் சாவைக் கண்டவர்கள்.
நாட்கள் சில முன்னர்
உயிருடன் இருந்தோம்,
உணர்ந்தோம் வைகறை அழகை
கண்ணுற்றோம் ஒளிரும் அந்திநேரம்,
காதலுற்றோம் காதல் பெற்றோம்,
இன்றோ பிளாண்டர் புலத்தில்
துயில்கின்றோம்.
எதிரியுடன் எங்கள் சமரை உமதாக்குங்கள்:
வீழ்ந்து கொண்டிருக்கும் கைகளில் இருந்து
தீவர்த்திதனை உமக்காக எறிகின்றோம்;
உயரத்தில் நீங்கள் தாங்கிக்கொள்ள.
வீரமரணித்த எம்முடன் உம்
நம்பிக்கை உடைந்தால்
நாங்கள் துயிலமாட்டோம்,
பிளாண்டர் புலத்தில் பொப்பிகள்
வளர்ந்தாலும் கூட..
நிகழ்ந்து கொண்டிருக்கும் போரைத் தொடர்ந்து கொண்டு செல்லுங்கள் என்று இறந்த ஒரு வீரன் கூறுவதுபோன்று இக்கவிதை அமைந்துள்ளது.[2] இறுதி வரியில் "நாங்கள் துயிலமாட்டோம், பிளாண்டர் புலத்தில் பொப்பிகள் வளர்ந்தாலும் கூட.." என்பது சோன் மக்கிரே ஒரு மருத்துவர் என்பதை நினைவுபடுத்துகின்றது. ஒருவகை பொப்பிச் செடிகள் மற்றும் அவற்றின் விதைகள் மருத்துவத்தில் தூக்கத்தை உண்டாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அபினி அல்லது அபின் எனும் போதையூட்டுகிற, வலிநீக்கி மருந்துப்பொருள் ஒரு பொப்பி வகை அபினிச் செடியில் (Papaver somniferum L. அல்லது paeoniflorum) இருந்து பெறப்படுகின்றது. பிளாண்டர் புலத்தில் வளர்ந்த பொப்பிகள் பப்பாவேர் ரோயியாசு (Papaver rhoeas) எனும் இனத்தைச் சார்ந்தவை.
மேற்கோள்கள்
- ↑ Prescott 1985, ப. 11
- ↑ In Flanders Fields and Other Poems. G. P. Putnam's Sons. 1919. பக். 3. https://archive.org/details/inflandersfields00mccriala. பார்த்த நாள்: 5 November 2010.