பால கணபதி
பால கணபதி(சமக்கிருதம்: बाल-गणपति, bāla-gaṇapati, , விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 1வது திருவுருவம் ஆகும். இவ்வடிவம் யானை முகம் கொண்ட இந்துக் கடவுளான விநாயகரைக் குழந்தையாகப் பாவித்து வழிபடுவதற்கு உரியது.[1] பால கணபதியை பல்வேறு வடிவங்களில் ஓவியர்கள் காட்டுவது உண்டு. விநாயகரின் தாய், தந்தையராகக் கொள்ளப்படும் பார்வதியும், சிவனும் பால கணபதியைக் குளிப்பாட்டுவது போலவும்,[1] பார்வதியின் மடியில் அல்லது தோளில் இருப்பது போலவும்[2] வரையப்பட்ட படங்கள் உள்ளன. தவிர, பால கணபதி இருப்பது போலவும், தவழ்வது போலவும் காட்டுகின்ற ஓவியங்களும், சிற்பங்களும் உள்ளன.[3]
பெயர்
சமசுக்கிருதத்தில் "பால" என்பது "இளம்" அல்லது "சிறு பராயம்" எனப் பொருள்படும். கணபதியைச் சிறு பராயத்தினராகக் கொண்டு வழிபடுவதற்கான வடிவம் ஆகையால் இதற்கு "பால கணபதி" எனப் பெயர் ஏற்பட்டது.
திருவுருவ அமைப்பு
பால கணபதி நான்கு திருக்கரங்களும் யானைமுகமும் உடைவர். இவரது மேனி உதிக்கின்ற செங்கதிர் போன்ற செந்நிறம் கொண்டது எனச் சில மூலங்களில் காட்டப்பட்டுள்ளது.[4] வேறு சில மூலங்கள் இவரைப் பொன்னிற மேனி கொண்டவர் என்கின்றன.[5] குழந்தைத் திருமேனி கொண்டவராகப் பெரும்பாலும் காட்டப்பட்டாலும், சில சமயங்களில் குழந்தையாகக் காட்டாமல் குழந்தையின் முகத் தோற்றத்துடன் மட்டும் காட்டுவது உண்டு.[3] கழுத்தில் பூமாலை அணிந்திருப்பார்.[6]
பால கணபதி நான்கு கைகளை உடையவர். நான்கு கைகளிலும் ஏந்தியிருக்கும் பொருள்கள் ஓவியங்களிலும் சிற்பங்களிலும் ஒரே மாதிரியாகக் காணப்படுவது இல்லை. சிலவற்றில் மாம்பழம், மாமரக் கிளை, கரும்பு, மோதகம் ஆகியவற்றை[7] ஏந்தியிருப்பவராகக் காணப்படும் பால கணபதி, வேறு சிலவற்றில் வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், கரும்பு ஆகியவற்றை ஏந்தியவராகக் காணப்படுகிறார். இப்பொருட்கள் செழிப்பையும், வளத்தையும் குறித்துக்காட்டுகின்றன. [5] பலாப்பழத்துக்குப் பதிலாக பூங்கொத்தை[3] அவரது தும்பிக்கையில் மோதகத்தை[5] அல்லது விளாம்பழத்தை[8] ஏந்தியபடி காட்டப்படும் பால கணபதி வடிவங்களும் உண்டு. பெரும்பாலும் துதிக்கையில் மோதகத்தை ஏந்தி அதை வாயை நோக்கித் திருப்பி வைத்திருப்பதையும் காண முடியும்.
இச் சிறுபராயக் கடவுள் எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்புக்களைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது.[9] இவரை வணங்குவதனால் சிறுவர்கள் நல்ல ஒழுக்கத்தை அடைய முடியும் எனவும் கூறுகின்றனர். அத்துடன் இவர் குழந்தையைப் போன்ற மகிழ்வையும், நல்ல உடல்நலத்தையும் தனது பக்தர்களுக்குத் தருவார் என்றும் கூறுகின்றனர்.[3] இரண்டு கைகளுடனான சிறுவன் வடிவில் இவரை வணங்குவதற்கான கோயில்கள் சில தென்னிந்தியாவில் காணப்படுகின்றன. அங்கே இவரைப் பிள்ளையார் (சிறுவன்) என்பர்.[1]
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 1.2 Saligrama Krishna Ramachandra Rao (1991). Pratima Kosha: Descriptive Glossary of Indian Iconography. IBH Prakashana. p. 145.
- ↑ Nagar p. 18
- ↑ 3.0 3.1 3.2 3.3 T.K.Jagannathan (20 August 2009). Sri Ganesha. Pustak Mahal. p. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-223-1054-2.
- ↑ Martin-Dubost p. 224
- ↑ 5.0 5.1 5.2 Subramuniyaswami p. 59
- ↑ Chinmayananda, Swami (1987). Glory of Ganesha. Bombay: Central Chinmaya Mission Trust. p. 87.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Martin-Dubost p. 120
- ↑ T. A. Gopinatha Rao (1993). Elements of Hindu iconography. Motilal Banarsidass Publisher. p. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0878-2.
- ↑ Subramuniyaswami p. 159
உசாத்துணைகள்
- Martin-Dubost, Paul (1997). Gaņeśa: The Enchanter of the Three Worlds. Mumbai: Project for Indian Cultural Studies. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-900184-3-4.
- Satguru Sivaya Subramuniyaswami. Loving Ganesha. Himalayan Academy Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-934145-17-3.
- Shanti Lal Nagar (1992). The Cult of Vinayaka. Intellectual Pub. House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7076-043-6.