பாரிமகளிர்
தற்போது பிரான்மலை என அழைக்கப்படும் பரம்புமலை சூழ்ந்த 300 ஊர்களைக் கொண்ட வளநாட்டின் மன்னனாக இருந்த பாரி மன்னன் மகளிர் இருவர். பாரி மன்னன் கொல்லப்பட்ட பின்பு புலவர் கபிலர் அவர்களை அழைத்துச் சென்ற போது பாரி மகளிர் பாடிய பாடல்
பாடல்
“அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்
எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர் கொளார்
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்
வென்று எரிமுரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்! யாம் எந்தையும் இலமே?”[1] என்று இவர்கள் தம் தந்தையை இழந்த துயரத்தைப் பாடியுள்ளனர்.
இந்தப் பாடலில் முன் இரண்டு அடிகள் ஒருவர் பாடியது போலவும், பின் மூன்று அடிகள் மற்றொருவர் பாடியது போலவும் காணப்படுகிது. அவர்கள் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரட்டைப்புலவர்கள் போலச் செய்யுள் இயற்றிய சங்ககாலப் புலவர்கள் எனலாம்.
- பாடல் சொல்லும் செய்தி
கடந்த மாத நிறைமதி நாளில் தந்தையுடன் மகிழ்ந்திருந்தோம். இந்த மாத நிறைமதி நாளில் எம் குன்றையும் பிறர் கைப்பற்றிக்கொண்டனர். எம் தந்தை எங்களுடன் இல்லை. என்ன செய்வோம்?
பழமொழி நானூறு பாடல் சொல்லும் செய்தி
பாரிமகள் என்று இந்தப் பாடல் ஒருமையில் குறிப்பிடுகிறது. நாட்டில் வறட்சி நிலவியபோது தன் முற்றத்துக்கு வந்த பாணன் ஒருவனுக்குப் பாரிமகள் பொன்னை உணவுக்காக வழங்கியதாக இந்தப் பாடல் குறிப்பிடுகிறது. இந்தப் பாடலில் வரும் ‘பொன்’ என்னும் சொல்லுக்குப் பொன்னாங்கண்ணிக் கீரை எனக் கொள்ளுமாறும் பாடல் உள்ளது. [2]
கபிலர் இவர்களுக்குச் செய்த திருமண முயற்சி
கபிலர் இவர்களுக்குத் திருமணம் செய்ய அழைத்துச் செல்கிறார். [3]. நீ என்னை வணங்கும் வாள் வீரன். நான் பரிமகளிரைத் தருகிறேன். நீ மணந்து ஏற்றுககொள் என்று விச்சிக்கோனை வேண்டினார். அவன் மணந்துகொள்ள மறுத்துவிட்டான். [4] இருங்கோவேளிடம் சென்று அவ்வாறே வேண்டினார். அவனும் மறுத்துவிட்டான். [5] அரசர்கள் மணந்துகொள்ள மறுத்துவிடவே கபிலர் பாரி மகளிரை கடையெழு வள்ளல்களில் ஒருவனான மலையன் அரசன் ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார். பின்னர் வடக்கிருந்து உயிர் துறந்தார். [6]
10 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு
கபிலர் குன்றில் முதலாம் இராசராசன் காலத்துக் கல்வெட்டு ஒன்று பாரிமகளிரைக் கபிலர் தென்பெண்ணை ஆற்றுப்படுகை அரசன் மலையன் என்பவனுக்குத் திருமணம் செய்து கொடுத்த பின்னர் தீயில் இறங்கி உயிர் நீத்தார் எனக் குறிப்பிடுகிறது.
பாரிமகளிர் கதை
பாரிமகளிர் இருவரின் பெயர் அங்கவை, சங்கவை என்றும், அவர்கள் மழையில் நனைந்துகொண்டு வந்த ஔவையாருக்கு நீலச்சிற்றாடை வழங்கினார்கள் என்றும், ஔவையார் விநாயகனைக்கொண்டு எழுதிய ஓலையைச் சேர சோழ பாண்டியருக்கு அனுப்பி அவர்கள் அங்கவை சங்கவை திருமணத்துக்குச் சீர் கொண்டுவந்து தரத் திருமணம் திருக்கோவலூர் அரசன் தெய்வீகன் என்பவனோடு சிறப்பாக நடைபெற்றது என்றும், வெட்டிய பலாமரம் தழைத்துப் பழம் தந்தது என்பன போன்ற மாயவித்தைக் கதைகளுடன் கதை வளர்கிறது.