பரீனா லை
பரீனா லை (Farina Lai) இலங்கைத் திரைப்பட, மற்றும் நடன நடிகையும் ஆவார். தமிழ், சிங்களத் திரைப்படங்களில் நடித்தவர். ஐம்பதிற்கும் மேற்பட்ட சிங்களப் படங்களில் நடனமாடியுள்ளார்.[1]
திரைப்படத் துறையில்
மலாய் முசுலிம் இனத்தைச் சேர்ந்த பரீனா லை, 1970 ஆம் ஆண்டு வெளியான மஞ்சள் குங்குமம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் முதன்முதலில் நடனமாடியதன் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.[2] தொடர்ந்து பல சிங்களப் படங்களில் நடனக் காட்சிகளில் தோன்றினார். மேலும் இரவுக் கேளிக்கை விடுதிகளில் பாடகர் எம். எஸ். பெர்னாந்துவுடன் இணைந்து நடனமாடினார்.
1975 ஆம் ஆண்டில் வெளியான புதிய காற்று திரைப்படத்தில் வி. பி. கணேசனுடன் இணைந்து கதாநாயகியாக நடித்தார். சிங்கள் நடிகர் காமினி பொன்சேகா தயாரித்த "சருங்கலே" (1979), "உதுமானெனி" (1979) போன்ற சிங்களப் படங்களில் காமினி பொன்சேகாவின் தங்கையாக நடித்தார். இலங்கை, இந்திய கூட்டுத்தயாரிப்பான நங்கூரம் படத்தில் நடிகை லட்சுமியின் தங்கையாக நடித்தார். பிற்காலத்தில் குணசித்திர நடிகையாக நடித்தார். நெஞ்சுக்கு நீதி, அவள் ஒரு ஜீவநதி திரைப்படங்களில் நடனமாடி நடித்திருந்தார்.
சில்லையூர் செல்வராசனின் மகன் திலீபன் செல்வராஜன் கதாநாயகனாக நடித்த "ஆதரகதாவ" என்ற சிங்களத் திரைப்படத்தில் திலீபனின் சகோதரியாகத் தமிழில் பேசி நடித்தார். இவர் கடைசியாக "அலிபாபா ஹொரு ஹதலிய" எனும் சிங்களப் படத்தில் ரொபின் பெர்னாந்துவுக்குச் சோடியாக நடித்தார்[1].
நடித்த திரைப்படங்கள் சில
தமிழ்த் திரைப்படங்கள்
- மஞ்சள் குங்குமம் (1970)
- புதிய காற்று (1975)
- நங்கூரம்
- நெஞ்சுக்கு நீதி
- அவள் ஒரு ஜீவநதி
சிங்களத் திரைப்படங்கள்
- ரேமனமாலி
- சிரில்மல்லி
- லோக்க ஹொரு
- சமன்மலி
- மினிசுன் அதர மினிஹெக்
- லஸ்சன கெல்ல
- சருங்கலே (1979)
- உதுமானெனி (1979)
- செனகெலிய (1974)
- சிஞ்சிஞ்நோனா (1977)
- மல்கெருலு (1980)
- ஆதரகதாவ
- அலிபாபா ஹொரு ஹதலிய
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "நாட்டியத் தாரகை பரீனலை!". தினகரன் வாரமஞ்சரி. 18-11-2012 இம் மூலத்தில் இருந்து 2013-07-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130703024954/http://www.thinakaran.lk/Vaaramanjari/2012/11/18/?fn=f1211185. பார்த்த நாள்: 18-11-2012.
- ↑ இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை, தம்பிஐயா தேவதாஸ்