நெ. பழனிக்குமணன்
நெ. பழனிக்குமணன், 2015ஆம் ஆண்டுக்குரிய வரைபடம் மற்றும் தகவல் தொகுப்புகள் புலிட்சர் பரிசை பகிர்ந்து கொண்டவர்.[1] இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தகவல் நுட்ப, மென் பொருள் வித்தகர். அமெரிக்க மருத்துவக் காப்பீட்டில் நடைபெற்ற முறைகேடுகளை வால் ஸ்ட்ரீட் இதழ் அம்பலப்படுத்தியது. இந்தக் கட்டுரைகளுக்கான வரைபடம், தகவல் தொகுப்புகள் ஆகியவற்றை உருவாக்கியவர்கள் அடங்கிய குழுவில் பழனிக் குமணன் இடம் பெற்றிருந்தார். அமெரிக்காவில் 880000 பேருக்கு மருத்துவச் சிகிச்சை செய்வதற்காக மருத்துவ ஆய்வுக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு உதவி செய்தது. இந்தத் திட்டத்தினால் பல மருத்துவமனைகளும் மருத்துவர்களும் பலன் அடைந்தனர். ஆனால் முறைகேடுகள் நடந்ததை அறிய பழனிக் குமணன் உருவாக்கிய மென்பொருள் உதவியது. இந்த மென் பொருள் உதவியுடன் வால் ஸ்ட்ரீட் இதழ் முறைகேடுகளை விவரித்து கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டது. இதன் விளைவாக அமெரிக்க அரசு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தது. இவ்வரிய செயலைப் பாராட்டி புலிட்சர் பரிசு வால் ஸ்ட்ரீட் குழுவினருக்கு வழங்கப்பட்டது.[2] பழனிக் குமணன் குழுவில் இடம் பெற்ற மற்றவர்களுடன் புலிட்சர் பரிசைப் பகிர்ந்து கொண்டார். பழனிக் குமணன் தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியலாளர் பழ. நெடுமாறனின் மகன் ஆவார்.
சான்றுகள்
- ↑ "Software engineer Palani Kumanan of Wall Street Journal wins Pulitzer Prize for investigative reporting". http://www.americanbazaaronline.com/2015/04/22/software-engineer-palani-kumanan-of-wall-street-journal-wins-pulitzer-prize-for-investigative-reporting/. பார்த்த நாள்: 28 ஆகத்து 2015.
- ↑ "Wall Street Journal Wins Investigative Pulitzer". http://www.wsj.com/articles/wsj-new-york-times-win-pulitzers-1429557628. பார்த்த நாள்: 28 ஆகத்து 2015.