நல்வழுதியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நல்வழுதியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பரிபாடல் 12 எண்ணுள்ள பாடல் ஒன்று மட்டும் இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. வையை ஆற்றின் வெருமையை இது பாடுகிறது. நந்நாகனார் என்னும் இசைவாணர் இதற்கு இசை அமைத்து பாலையாழ்ப் பண்ணில் பாடியுள்ளார்.

பரிபாடல் 12 தரும் செய்தி

வையை ஆற்று நீராட்டு விழா இந்தப் பாடலில் விரித்துரைக்கப்மடுகிறது.

மலைச்சாரலில் உதிர்ந்த மலர்களையும், தகரம், ஞாழல், தேவதாரு போன்ற மரங்களையும் வையா வெள்ளம் அடித்துக்கொண்டு வந்தது. கரையிலிருந்த நாகம், அகில், சுரபுன்னை, ஞெமை, சந்தனம் போன்ற மரங்களைப் பறித்து அசைத்துக்கொண்டு பாய்ந்தது.

மதுரை மக்கள் நீராடச் செல்லத் தம்மை ஒப்பனை செய்துகொண்டனர். பொற்பூ, முத்துவடம், கைவளை, தோள்வளை, கட்டுவடம், கால்மோதிரம், மாலை, கூந்தலில் வெட்டிவேர், முதலானவற்றை அணிந்துகொண்டனர். அகில் போன்ற மண எண்ணெய் பூசிக்கொண்டனர். நீராடற் புடவை உடுத்திக்கொண்டனர்.

ஆடவர் குதிரை, களிறு, தேர் ஆகியவற்றில் சென்றனர். வெள்ளத்தைக் கண்டுகளித்தவர் பலரும் பலவாறு பல்வேறு மொழிகளில் பேசிக்கொண்டனர். குழல், முழவு, மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி, தாளம் முதலான இசைக்கருவிகள் முழங்கின. ஆடவரும் பெண்டிரும் தம் நிறை அழிந்து ஒருவரை ஒருவர் நோக்கினர். காட்டினர். பேசிக்கொண்டனர். சிலர் ஊடுவதும் கூடுவதுமாக நடித்தனர்.

அல்லி, ஆம்பல், குருக்கத்தி, சண்பகம், சுரபுன்னை, செங்கழுநீர், தாமரை, துளவு, நறவம், நாகம், பாதிரி, மல்லிகை, முல்லை, வகுளம் முதலான மலர்களை வெள்ளம் சுமந்து வந்தது.

இவ்வாறு வையை பல்வகைப் புகழும் கொண்டு விளங்கியது.

"https://tamilar.wiki/index.php?title=நல்வழுதியார்&oldid=12538" இருந்து மீள்விக்கப்பட்டது