ந. சுந்தரம்பிள்ளை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அராலியூர் ந.
சுந்தரம்பிள்ளை
அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை.jpg
பிறப்பு 22-09-1933
அராலி
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்
ஆசிரியர்
வாழ்க்கைத்
துணை
மங்கையர்க்கரசி


அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை (பிறப்பு: செப்டம்பர் 22, 1933) ஒரு தமிழ் சிறுகதை எழுத்தாளரும், நாடக எழுத்தாளரும், நாடகக் கலைஞருமாவார். இவர் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த நீராவியடியில் வசிக்கிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

நடராசா தம்பதியினரின் புதல்வராக யாழ்ப்பாண மாவட்டம் வட்டுக்கோட்டையில் அராலியூரில் பிறந்த சுந்தரம்பிள்ளை கொக்குவில் இந்துக் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். கலைமாணிப் பட்டதாரியான இவர் பட்டப்பின்படிப்பாக 'கல்வி டிப்ளோமா' பட்டத்தினையும் பெற்றுள்ளார். நீண்ட காலமாக ஆசிரியராகப் பணியாற்றித் தற்போது ஓய்வுபெற்று முழுநேர வாசிப்பும், எழுத்தும் என்ற அடிப்படையில் வாழ்ந்து வருகின்றார். இவரின் மனைவி "மங்கையர்க்கரசி". இவர் ஓர் ஆசிரியை. மகன் "மணிவண்ணன்". இவரும் பட்டதாரி ஆசிரியர். இருவரும் மரணித்து விட்டனர்.

இவரது முதலாவது சிறுகதை 1950ஆம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகையில் "கையொப்பம்" எனும் தலைப்பில் வெளியானது. இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரின் சிறுகதைகள் இலங்கையில் வெளிவரும் தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.

சிறுகதைத் துறையினைவிட நாடகத்துறையிலே இவரின் ஈடுபாட்டினை அதிகமாக காணமுடிகின்றது. இவரது முதலாவது நாடகம் 31 டிசம்பர் 1954இல் 'இழந்த காதல்' எனும் தலைப்பில் 'அராலி சரசுவதி வித்தியாசாலையில்' அரங்கேற்றம் கண்டது. இந்த நாடகத்தை எழுதியவரும், கதாநாயகனும் இவரே. 1959ஆம் ஆண்டு ஆசிரியரானதும் அராலியில் மேடை நாடகத் தொழிற்பாடுகளில் முழு மூச்சில் ஈடுபடலானார். 1954க்கும் 1974க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இவர் இருபது நாடகங்களை எழுதி மேடையேற்றியுள்ளார். இவரின் முதலாவது வானொலி நாடகம் இலங்கை வானொலியில் 'நானே ராஜா' என்ற தலைப்பில் 1980ஆம் ஆண்டில் ஒலிபரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்றுவரை 385க்கு மேற்பட்ட வானொலி நாடகங்களை இவர் எழுதியுள்ளார்.

எழுதிய சில நூல்கள்

அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை இதுவரை 21 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். விபரம் வருமாறு:-

வானொலி நாடக நூல்கள்

  • கெட்டிக்காரர்கள் - 1988
  • முதலாம்பிள்ளை - 1990
  • வீடு - 1997
  • யாழ்ப்பாணமா? கொழும்பா? - 1998
  • எங்கள் நாடு - 2002 (பரிசு பெற்ற வானொலி நாடகங்கள்)
  • மழைவெள்ளம் - 2003
  • இமயம் - 2004

மேடை நாடக நூல்கள்

  • பொலிடோலே கதி - 1976
  • பணமோ பணம் - 1977

இலக்கிய நூல்கள்

  • நாடகம் எழுதுவது எப்படி? - 1997
  • வானொலி நாடகம் எழுதுவது எப்படி? - 2003
  • சிறுகதை எழுதுவது எப்படி? - 2005
  • யாழ்ப்பாணத்தில் அந்த ஆறு மாதங்கள் - 1997

விமர்சன நூல்கள்

  • இலக்கியக் கட்டுரைகள் - 2000
  • 'வீடற்றவன்' நாவலின் விளக்கமும், விமர்சனம் - 2001
  • இலக்கிய விமர்சனம் - 2002
  • பொருளோ பொருள் நாடகத்தின் விளக்கமும் விமர்சனம் - 2004

சிறுகதைத் தொகுப்பு

  • யாழ்ப்பாணம் - 1999

நாவல்கள்

  • அக்கரைச் சீமையில் - 1994
  • ஒரு காதலின் கதை - 2001

பெற்ற பரிசில்களும், விருதுகளும்

  • இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவை 2000ஆம் ஆண்டு நடத்திய பவளவிழா இலக்கியப் போட்டிகளில் வானொலி நாடகம் எழுதும் போட்டியில் முதலாம் பரிசு.
  • இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தேசிய ஒருங்கிணைப்பு செயல்திட்டப் பணியகம் ஆகியன ஒருங்கிணைந்து 1998 ஆம் ஆண்டு நடத்திய வானொலி நாடகம் எழுதும் போட்டியில் முதலாம் பரிசு
  • நோர்வே நாட்டுத் 'தமிழ் நாதம்' வானொலி நிலையம் அகில உலக ரீதியில் நடத்திய வானொலி நாடகம் எழுதும் போட்டியில் முதலாம் பரிசு
  • நோர்வே நாட்டிலுள்ள 'மொல்டே தமிழ் கலை கலாசார மன்றம்' அகில உலக ரீதியில் நடத்திய வானொலி நாடகம் எழுதும் போட்டியில் முதலாம் பரிசு.
  • கனடா ரொறன்ரோ பெருநகர் - ஆசிய வானொலியின் தமிழ் ஒலிபரப்புப் பிரிவினால் அகில உலக ரீதியில் நடத்திய வானொலி நாடகம் எழுதும் போட்டியில் முதலாம் பரிசு.
  • இலங்கை வானொலி 1995ஆம் ஆண்டு நடத்திய நாடகம் எழுதும் போட்டியில் முதலாம் பரிசு.
  • வீரகேசரி பத்திரிகை 1997ஆம் ஆண்டு நடத்திய நாவல் எழுதும் போட்டியில் மூன்றாம் பரிசு.
  • அவுஸ்திரேலியாவில் உள்ள 'விக்ரோரியா இலங்கைத் தமிழர் சங்கம்’ நடத்திய இலக்கியப் போட்டிகளில் சிறு கதைக்கான முதலாம் பரிசு
  • முதலாம் பிள்ளை, எங்கள் நாடு, இமயம் நாடக நூல்களுக்கு வடக்கு,கிழக்கு மாகாண சபையின் பரிசுகள்.
  • 1988ஆம் ஆண்டு வீரகேசரிப் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு.
  • இமயம் நாடகநூலுக்கு - சாகித்தியப் பரிசு.

இவரின் இத்தகைய சேவைகளை கருத்திற் கொண்டு இலங்கை அரசு கலைஞர்களுக்கு வழங்கும் உயரிய விருதான 'கலாபூஷணம்' விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.

வெளி இணைப்புகள்

* அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை

"https://tamilar.wiki/index.php?title=ந._சுந்தரம்பிள்ளை&oldid=2729" இருந்து மீள்விக்கப்பட்டது