ந. சிவசுப்பிரமணியம்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ந. சிவசுப்பிரமணியம் |
---|---|
பிறந்ததிகதி | ஜூலை 25, 1939 |
இறப்பு | 1991 |
ந. சிவசுப்பிரமணியம் (ஜூலை 25, 1939-1991) ஈழத்து இசை நாடகக் கலைஞர். நடனம், நாட்டுக்கூத்து, நாடகம், மரபுவழிப்பாடல்கள், வில்லிசை போன்றவற்றில் ஈடுபாடுகொண்டவர். பல இசை நாடகங்கள், ஓரங்க நாடகங்கள், ஆட்ட நாட்டுக்கூத்துக்கள் நடித்ததுடன், நெறியாள்கை செய்து அரங்கேற்றினார்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கை பருத்தித்துறையில் மாதனை கிராமத்தில் நல்லத்தம்பி, பாக்கியம் இணையருக்கு மகனாக ஜூலை 25, 1939 அன்று சிவசுப்பிரமணியம் பிறந்தார். ஆரம்பக்கல்வியை மாதனை மெ.மி.த.க பாடசாலையில் பயின்றார். பள்ளிக்கல்வியை யா-வேலாயுதம் மாவித்தியாலையிலும் பயின்றார். உயர்கல்வியை சாவக்கச்சேரி ரிபோர்க் கல்லூரியில் பயின்றார். தாய்வழி உறவினர்கள் நாடகக்கலையில் இருந்ததால் இயல்பாகவே சிவசுப்பிரமணியம் அதில் ஈடுபட்டார்.
கலை வாழ்க்கை
நடனம், நாட்டுக்கூத்து, நாடகம், மரபுவழிப்பாடல்கள், வில்லிசை போன்றவற்றில் ஈடுபாடு கொண்டார். மெ.மி.த.க பாடசாலையில் பத்து வயதில் கோபி கிருஷ்ணா நாட்டிய நாடகத்தில் கிருஷ்ணனாக நடனம் ஆடினார். அண்ணாவியார் ச. செல்லத்துரை சிவசுப்பிரமணியத்தின் குரு. "மாதனை கலிவாணி வினோத கான சபாவின்" முக்கியமான நடிகராக சிவசுப்பிரமணியம் இருந்தார். முதன்முதலில் 1970-ல் "காத்தவராயன்" சிந்து நடைக் கூத்தில் சிவனாக நடித்தார்.1970 வரை கரகம், காவடி, ஆடல்பாடல் பாடுவதிலும், உடுக்கு வாசிப்பதிலும் புகழ் பெற்றார்.
அம்மன் சித்தி விநாயகர் கலாமன்றம், துன்னாலை இந்து இளைஞர் மன்றம், வல்லிபுரக்குறிச்சி குருக்கட்டு சித்திவிநாயகர் கலாமன்றம், கற்கோவளம் வேணுகானசபா, மாதனை மகாகாளி மகளிர் நடனகலாலயம், பருத்தித்துறை சிவசாயி கலாமன்றம், புற்றளை சித்திவிநாயகர் கலாமன்றம், தும்பளை சக்திதேவி கலாமன்றம், முதலிய மன்றங்களின் மூலம் பல நாடகங்களை நெறிப்படுத்தி மேடையேற்றினார். "வள்ளி திருமணம்" நாடகத்தை யா/தும்பளை சிவப்பிரகாச மகாவித்தியிலும், "சத்தியவேள்வி" நாடகத்தை யா/புற்றளை மகாவித்தியாலயம், யா/ஹாட்லிக் கல்லூரி, யா/புலோலி மேற்கு சிவசாயி கலாமன்றத்திலும் அரங்கேற்றினார்.
சிவசுப்ரமணியத்தின் நெறியாள்கை வழிப்படுத்தலின் கீழ் வடமராட்சியில் உள்ள பாடசரலைகளான யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாட சாலை, யா/புனித தோமையா தோ.சு.பெண்கள் பாடசாலை, யா/சிவப்பிரகாசம் வித்தியாலயம், யா/வேலாயுதம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் பல்கலை நிகழ்வுகள் அரங்கப்படுத்தப்பட்டன. இவரது நாடகங்கள் மாதனை, தும்பளை, கற்கோவளம், வவுவியா. மஞ்ளார், அனவெட்டி, முள்ளியவனை போன்ற இடங்களிலும் அதிக தடவைகள் மேடையேற்றப்பட்டது. 1975-ல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அ.தாஸிஸியசினால் நெறிப்படுத்தப்பட்ட நாடகமேடைப் பாடல் பிரிவில் "காத்தவராயன்" நாடகத்தினை அண்ணாவியர்களான எஸ். கணபதிப்பிள்ளை, து. மகாலிங்கம் ஆகியோருடன் இணைந்து பாடி ஒலிப்பதிவு செய்து ஒவ்வொரு சனிக்கிழமையும் வானெலியில் ஒலிபரப்பப்பினார். யாழ். பல்கலைக்கழகத்தில் இ. பாலசுந்தரம்பிள்ளையின் நெறியாக்கத்தின் கீழ் நடிகமணி வி.வி. வைரமுத்து, மௌனகுரு ஆகியோருடன் "காத்தவராயன்" நாடகத்தில் முத்துமாரி எனும் பாத்திரமேற்று நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.
ஸ்ரீவள்ளி நாடகம் இவர் நடித்த நாடகங்களுள் அதிகமாக மேடையேற்றப்பட்ட நாடகம். 1991-ல் இவரது வலதுகால் துண்டிக்கப்பட்டு ஊனமுற்ற நிலையில் சிவசாயி கலாமன்றம், பாடசாலைகள் போன்றவற்றிற்கு நாடகங்களைத் தயாரித்துப் பழக்கி மேடையேற்றினார். ஒரு கால் இழந்த நிலையிலும் இசைநாடகம், தாட்டுக்கூத்து ஆகியவற்றில் ஆர்வத்துடன் செயற்பட்டார்.
இணைந்து நடித்தவர்கள்
- மாதனையூர் து. மகாலிங்கம்
- வ. கிருஸ்ணபிள்ளை
- ச. வேணுகோபால்
- நா. கணபதிப்பிள்ளை (சின்னமணி)
- இ. குலசேகரம்
- இ. பாலசுப்பிரமணியம்
- ப. பரராஜசேகரம்
- ப. கண்ணதாசசர்மா
- வே. சரவணபவான்
மறைவு
ந. சிவசுப்பிரமணியம் 1991-ல் காலமானார்.
இசை நாடகங்கள்
- காத்தவராயன் - சிவன், நடுக்காத்தான், பின்முத்துமாரி
- ஸ்ரீவள்ளி - குறத்தி, வேடன், முருகன்
- சத்தியவான் சாவித்திரி - சத்தியவான்
- அரிச்சந்திரா - அரிச்சந்திரன், சந்திரமதி, நாரதர்
- நல்லதங்காள் - நல்லதங்காள், குலகேசரி
- பட்டினத்தார் - முன் பட்டினத்தார்
- பாஞ்சாலி சபதம் - பாஞ்சாலி
- சிலம்புச் செல்வி - மாதவி, சேரலாதன்
- இலங்கேஸ்வரன் - இராமர்
ஓரங்க நாடகங்கள்
- தேரோட்டி மகன்
- சூழ்ச்சி
- ஏகலைவன்
ஆட்ட நாட்டுக்கூத்துக்கள்
- மனுநீதிகண்ட சோழன்
- மகிடாசுரன் வதம்
- ஆடல் சௌந்தரி
இசை நாடகங்கள்
- வள்ளி திருமணம்
- சத்தியவேள்வி