தெள்விளி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தெள்விளி என்பது ஒருவகையான விளையாட்டு ஓசையும், தொழிலோசையும் ஆகும். குலவை, வீளை முதலான நாவோசைகள் இதன் வகைகள்.

தெள்விளி ஓசை

இணைப்பறவைக்காக புறா [1], பருந்து [2] [3] ஆகியவை எழுப்பும் குரல் தெள்விளி எப்படிக் கேட்கும் என்பதை உணர்த்தும் உவமைகள். கொம்பு ஊதும் ஓசை [4], பறை முழக்கம் [5] ஆகியனவும் தெள்விளிக்கு உவமை. கோவலர் ஊதும் குழலோசையில் வரும் தெறிப்பிசை [6] [7] பார்வை வேட்டுவன் [8] வலையில் பட்ட ஆண்மான் புலம்பும் குரல் [9] ஆகியனவும் தெள்விளி ஓசைக்கு எடுத்துக்காட்டுகள்.

ஆடவர் தெள்விளி

வண்டியில் பூட்டிய எருதுகளை ஓட்டும்போது ஆடவர் நாக்கைத் தெழித்து ஓட்டும் 'நறுக்கு ஓசை' ஒருவகைத் தெள்விளி. [10] நெல் அறுத்த அரிகால் நிலத்தை மீண்டும் நன்செய் ஆக்குவதற்காக எருதுகளை விட்டு மிதிக்கச் செய்யும்போது உழவர் நாவால் எழுப்பும் ஒசையும் தெள்விளி ஆகும். [11]

மகளிர் தெள்விளி

தினைப்புனம் காக்கும் மகளிர் தெள்விளி எழுப்பிக் கிளிகளை ஓட்டுவர். [12]. எழுந்தெழுந்து தெள்விளி பயிற்றி ஓட்டுவர். [13]. அந்தத் தெள்விளி கேட்டு மயில் ஆடுவதும் உண்டு. [14]

அடிக்குறிப்பு

  1. அம் சினை வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தௌ விளி, (நற்றிணை 305)
  2. இனந்தீர் பருந்தின் புலம்புகொள் தெள்விளி (குறுந்தொகை 207)
  3. வளை வாய்ப் பருந்தின், வள் உகிர்ச் சேவல் கிளைத் தரு தௌ விளி கெழு முடைப் பயிரும் (அகநானூறு 363)
  4. வயிர் இடைப்பட்ட தௌ விளி இயம்ப, {அகநானூறு 269)
  5. கோடைத் தௌ விளி விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்ப, (அகநானூறு 321)
  6. கோவலர் ஆம்பல் அம் தீங்குழல் தெள்விளி பயிற்ற (குறிஞ்சிப்பாட்டு 222)
  7. பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும் சிறு வெதிர்ந் தீம் குழற் புலம்பு கொள் தௌ விளி, (அகநானூறு 399)
  8. பார்வைக்குப் பெண்மானை வைத்து ஆண்மானைப் பிடிக்கும் வேட்டுவன்
  9. பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ, நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தௌ விளி, சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும் (நற்றிணை 212)
  10. பகடு தெழி தௌ விளி (அகநானூறு 17)
  11. அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர் ஓதைத் தௌ விளி புலம்தொறும் பரப்ப (அகநானூறு 41)
  12. புள்ளார் இயத்த விலங்குமலைச் சிலம்பின், வள்ளுயிர்த் தெள்விளி இடையிடைப் பயிற்றிக, கிள்ளை யோப்பியும் (குறிஞ்சிப்பாட்டு 100, )
  13. எழுந்து எழுந்து, கிள்ளைத் தௌ விளி இடைஇடை பயிற்றி, ஆங்கு ஆங்கு ஒழுகாய்ஆயின், (அகநானூறு 28)
  14. எல் வளை மகளிர் தெள்விளி இசைப்பின், பழனக் காவில் பசு மயில் ஆலும் (பதிற்றுப்பத்து 27)
"https://tamilar.wiki/index.php?title=தெள்விளி&oldid=13230" இருந்து மீள்விக்கப்பட்டது