தெறிகள் (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தெறிகள் என்பது 1970 களில் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் உமாபதி ஆவார்.

வரலாறு

இலக்கிய ஆர்வமும், கவிதை எழுதும் ஆற்றலும் பெற்ற உமாபதி பத்திரிகைத் துறையில் தன்னாலியன்றதைச் செய்ய ஆசைப்பட்டு, தெறிகள் இதழைத் துவக்கினார். முதலில் விருதுநகரிலிருந்து வெளிவந்த இந்தச் சிற்றறிதழ் பின்னர் நாகர்கோவிலிலிருந்து வெளியானது.

கசடதபற போன்ற தோற்றம் கொண்டிருந்த தெறிகள் கவிதை, சிறுகதை, இலக்கியம் சம்பந்தமான கட்டுரைகளைத் தாங்கி வந்தது. ஓவியங்களிலும் இது அக்கறை காட்டியது. அட்டையில் நவீன ஓவியங்கள் அச்சாயின. ஐந்து இதழ்கள் சாதாரணமாக வந்தபிறகு, பத்திரிகையின் அமைப்பிலும் உள்ளடக்கத்திலும் முன்னேற்றங்கள் காட்ட விரும்பினார் உமாபதி. இது தெறிகள் இதழின் புதிய பரிணாமத்தில் புலனாயிற்று.

இதன்பிறகு காலாண்டு இதழ்-1 என்று குறிக்கப் பெற்றுள்ள இதழ் எந்த ஆண்டு எந்த மாதம் தயாராயிற்று எனத் தேதியிடப் பெறாமல் ஒரு சிறப்பு மலர் போலவே வெளியானது. 90 பக்கங்கள் (அட்டை தனி ) கொண்ட இந்த இதழில் சம்பத் எழுதிய 'இடைவெளி' (குறுநாவல்) 42 பக்கங்களும், கலாப்ரியாவின் ‘சுயம்வரம்' (குறுங்காவியம்) 28 பக்கங்களும் வந்தன. இவை இரண்டுமே சோதனை ரீதியான படைப்பு முயற்சிகளாகும். [1] இந்த இதழ் கிடைத்த மூன்றாம் மாதத்தில், 'அடுத்த இதழ் இன்னின்ன விஷயங்கள்' தாங்கி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காலம் அதற்கு இடம் தரவில்லை.

நிறுத்தம்

1975 வரை தடையின்றி இந்த இதழ் வெளிவந்துகொண்டிருந்தது. உமாபதி நாகர் கோயிலில் பணியாற்றிக் கொண்டிருந்ததால் அங்கிருந்து இதழ் வெளிவந்துகொண்டிருந்தது. இதழில் புதுக்கவிதைகள் வெளியாகிவந்தன. அச்சமயம் இந்தியாவில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட காலமாக இருந்தது. புதுக்கவிதையின் வழியாக பூடகமான கருத்துகள் வெளியாகும் என உளவுத் துறையினர் ஐயம் கொண்டிருந்தனர். எனவே உமாபதிக்கு பத்திரிக்கை தொடர்பாக அலுவலகத்தில் நெருக்கடிகள் ஏற்படத் தொடங்கின. இதனால் தெறிகளை நிறுத்தவேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.[2]

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தெறிகள்_(இதழ்)&oldid=17673" இருந்து மீள்விக்கப்பட்டது