துறை (பொருள்-இலக்கணம்)
பொருள் இலக்கணத்தில் துறை என்பது ஒரு பாகுபாடு. தொல்காப்பியம் தமிழ் மொழியின் பாங்கை எழுத்து-அதிகாரம், சொல்-அதிகாரம் என்னும் இரு பகுதிகளில் விளக்குகிறது. தமிழின் இலக்கியப் பாங்கைப் பொருள்-அதிகாரம் என்னும் தலைப்பில் விளக்குகிறது. பொருளை அகம் [1] புறம் [2] எனப் பாகுபடுத்திக் காட்டுகிறது. இது மக்களின் வாழ்வியல் முறைமை. அகம் என்பது ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும் வாழ்க்கை பற்றியது. புறம் என்பது அவர்கள் புறத்தே உள்ள மற்றவர்களோடு உறவு கொள்ளும் வாழ்க்கை பற்றியது. கல்வி, ஆட்சி, வணிகம், உழவு முதலான தொழில்கள் ஆகியவை அனைத்தும் புறப்பொருள்.
திணை என்னும் சொல் வாழ்க்கை ஓடும் ஒழுகலாற்றினைக் குறிக்கும். ஒழுகும் ஆறு ஒழுகலாறு. ஆற்றில் இறங்கிப் பயன்படுத்தும் இடத்தைத் துறை என்கிறோம். அதுபோல வாழ்க்கையில் அமைந்து கிடப்பனவே இலக்கியத் துறைகள். இந்த இலக்கியத் துறைகளை வகுத்துக் காட்டுவனவே இலக்கணத் துறைகள். அதாவது இலக்கணம் காட்டும் துறைகள்.
தொல்காப்பியம் புறத்திணையில் தான் வகுத்துக்கொண்ட ஏழு திணைகளுக்கும் துறைகளைச் சுட்டுகிறது. புறப்பொருள் வெண்பாமாலை தன் போக்கில் வகுத்துக்கொண்ட 12 திணைகளுக்கும் துறைகளைக் காட்டுகிறது. தொல்காப்பியத்தில் துறைகளின் பெயர்கள் செய்தி வடிவில் உள்ளன. புறப்பொருள் வெண்பாமாலையில் ஒவ்வொரு துறையும் ஒரு கொளுப் பாடலாலும், அதனை விளக்கும் ஓர் எடுத்துக்காட்டுப் பாடலாலும் விளக்கப்பட்டுள்ளன.
அகத்திணைப் பாடல்களுக்குத் துறை கூறும் பாங்கு பண்டைய இலக்கணங்களிலும், இலக்கியங்களிலும் இல்லை. பிற்காலத்தில் தோன்றிய கோவை இலக்கியங்கள் இவற்றிற்கும் துறை சுட்டும் பாங்கினைக் கையாளுகின்றன்ன.