திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோவில்
பத்திரகாளி மாரியம்மன் கோவில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 9°49′17″N 77°58′56″E / 9.821350°N 77.982255°E |
பெயர் | |
பெயர்: | பத்திரகாளி மாரியம்மன் கோவில் |
அமைவிடம் | |
ஊர்: | திருமங்கலம் |
மாவட்டம்: | மதுரை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஸ்ரீ மாரியம்மன் |
உற்சவர்: | ஸ்ரீ பத்திரகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன் |
சிறப்பு திருவிழாக்கள்: | வைகாசி திருவிழா நவராத்திரி திருவிழா பெரிய கார்த்திகை திருவிழா திருவாதிரை திருவிழா தைப்பூசத் திருவிழா பங்குனி உத்திரத் திருவிழா |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கலை |
வரலாறு | |
தொன்மை: | 160 ஆண்டுகளுக்கு மேல் |
கட்டப்பட்ட நாள்: | 1852 |
கோயில் அறக்கட்டளை: | பாண்டியகுல சத்திரிய நாடார் உறவின்முறை |
ஸ்ரீ பத்திரகாளி மாரியம்மன் திருக்கோவில் தமிழகத்தின் மதுரை மாவட்டத்தின் தென்கோடி எல்லையாக அமைந்துள்ள திருமங்கலம் நகரில் உள்ளது. இது திருமங்கலத்தில் தெற்கில் குண்டாற்றின் கரையோரம் அமைந்துள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பழமையான கோயில்களுள் இதுவும் ஒன்றாகும். இந்தக் கோயிலில் வழிபட்டுச் செல்பவர்களுக்கு அம்மை உட்பட அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்கிற நம்பிக்கை இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது.
தலவரலாறு
இருநூற்றாண்டுகளுக்கு முன்பு வரை திருமங்கலம் பாண்டிய குல க்ஷத்ரிய நாடார் இன மக்களின் முயற்சியால், அவர்களுக்கென்று ஒரு மாரியம்மன் கோவில், சில மளிகைக் கடைகள், கல்வி நிறுவனங்கள் என தானே நிறுவினர். அப்படி 18ம் நூற்றாண்டின் இடையில்[சான்று தேவை] நிறுவப்பட்டது தான், மதுரை மாவட்டம் திருமங்கலத்திலுள்ள பத்திரகாளி மாரியம்மன் கோவில்.
ஆரம்பத்தில் தற்போதய திருமங்கலம் பள்ளிக்கூடத் தெருவில் தண்டல்முறை எனும் இடத்தில் சிறு விநாயகர் கோவிலாக இருந்து வந்தது. பின்னர், நாடார் சமூக மக்களின் நிலத்தைப் பெற்று அதனை கோவில் கட்ட தானமாக நல்லதம்பி நாடார் என்பவர் வழங்கினார். இங்கு கோவிலை உருவாக்க அடித்தளம் தோண்டும்போது கிடைக்கப் பெற்ற விநாயகர், அகோர வீரபத்திரர் ஆகியவற்றோடு மூலவராக மாரியம்மன், முருகர், தண்டாயுதபாணி, விசாலாட்சி சமேத காசி விசுவநாதரைக் கொண்டு 1872ம் ஆண்டு சித்திரை மாதம் 11ம் நாள், கோவிலின் முதல் குடமுழுக்கு நடைபெற்றது. கோயிலுக்கான இடத்தை தானமாக அளித்த நல்லதம்பி நாடார் மற்றும் அவரது துணைவியாரின் சிலைகள், கோவில் கொடிமரத்தின் வலதுபுறமுள்ள தூணில் அமைத்தனர். பின்னர் வந்த ஆண்டுகளில், அன்றைய கோவில் தர்மகர்த்தா P.P. பூச்சி நாடார், கோவிலுக்கு பின்புறம் செயல்பட்டு வந்த தனது சுருட்டுப் பேட்டையை தானமாக அளித்ததில் கோவில் மேலும் விரிவடைந்தது.
இக்கோவிலை கட்டுவதற்கு, இதே ஊரில் உள்ள பழைய மாரியம்மன் கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
குடமுழுக்கு
இக்கோவிலில் இதுவரை ஆறு குடமுழுக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. 1850ம் ஆண்டு இக்கோவில் கட்ட ஆரம்பித்து 3 பலிபீடங்களுடன் 1852ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பின்னர் 1872ம் ஆண்டு சித்திரை மாதம் 11ம் நாள் கோயிலின் முதல் குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் 1922ம் ஆண்டு இரண்டாவது குடமுழுக்கும், 1934ல் மூன்றாவது குடமுழுக்கும், 1964ம் ஆண்டு தை மாதம் 20ம் நாள் நான்காவது குடமுழுக்கும், 1994ம் ஆண்டு சித்திரை மாதம் 11ம் நாள் ஐந்தாவது குடமுழுக்கும், 2007ம் ஆண்டு பங்குனி மாதம் 22ம் நாள் ஆறாவது குடமுழுக்கும் நடைபெற்றது.
அம்மனின் அமைப்பு
பொதுவாக கோயில்களில் மாரியம்மன் இடது காலை மடித்து வலது காலை ஊன்றியபடிதான் இருக்கும். ஆனால் இந்தக் கோயிலில் இருக்கும் மாரியம்மனோ வலது காலை மடித்து இடது காலை ஊன்றியிருக்கிறார். இந்த அமைப்பு இங்கிருக்கும் மாரியம்மனின் சிறப்பம்சம்.
துதிகள் - விநாயகர் துதி
(வெண்பா)
“ | மன்னுபுகழ் மேவுதிரு மங்கலத்தில் கோவில் கொள்
சொன்ன பிரணவத்தின் சொற்பொருளான்-பன்னரிய சீர்முக் குருணி விநாயகன்தன் சேவடியைச் சார்வதுவே மேன்மை தரும் |
” |
பத்திரகாளி மாரியம்மன் துதி
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)
“ | பொன்வளமும் கலைமணமும் பொலிய நின்று
பொங்குதிரு மங்கலமாம் மூதூர் தன்னில் மன்னுயிர்க்கும் கண்கண்ட தெய்வமாகி வழிவழியே ஆற்றலருள் வழங்கும் எங்கள் அன்புருவாம் ஆதிபராசக்தியான அன்னையவள் ஒப்பில்சீர் பத்ரகாளி இன்புருவாம் மாரியம்மன் எழில்பார்பாத இருபோதும் எப்போதும் இறைஞ்சுவோமே. |
” |
பரிவார தேவதைகள் துதி
(பதினான்கு சீர் ஆசிரிய விருத்தம்)
“ | திங்கள்மும் மாரியது உலகெலாம் பெய்திந்த
நானிலம் செழித்துப் பொங்கச் செய்யதிரு மங்கலப் பதியதனில் யாவர்க்கும் உதவிடும் முக்குருணி விநாயகத் தேவரருள் தாயன்பு வஸ்வ நாதன் சத்தியவி சாலாட்சி நடராசர் சிவகாமி தாய்பத்ர காளி மாரி அங்கையீ ராறுான் வள்ளிதெய் வானை தெண் டாயுதன் வீர பத்திரன் அப்பருடன் சம்பந்தர் அருள்ஞான சுந்தரர் ஐயனே னாதி நாதர் கண்ணனோடு ருக்மணி பாமா நவக்கிரக புங்கவர் வர்க்க மெல்லாம் தட்சணா மூர்த்தியுடன் சண்டிகேஸ் வரனாரும் தன்னருளை நல்க வேண்டும் |
” |
கோயில் அமைந்துள்ள இடம்
வைகையாற்றின் கிளை நதியான திருமங்கலம் விழியாக பாயும் குண்டாற்றின் கிழக்கு ஆற்றங்கரையில் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வடக்கு திசையை பிராதான வாயிலாகவும், கிழக்கு திசையை உற்சவர் வெளியேறும் வாயிலாகக் கொண்டு, திராவிடக் கட்டிடக்கலை அமைப்பில் காணப்படுகின்றது.
திருமங்கலம் பெயர்க்காரணம்
மீனாட்சியை திருமணம் செய்ய, கயிலையில் இருந்த சிவன் மதுரைக்கு வந்தார். அவர்களின் திருமணம் மதுரையில் நடந்தது. திருமணத்திற்கு முன்பு, தேவர்கள் மதுரை அருகிலுள்ள ஒரு பகுதிக்கு வந்து, பொன்னை உருக்கி மாங்கல்யம் செய்தனர். மாங்கல்யம் செய்வதற்கு முன்பு, சிவனை வழிபட தேவர்கள் விரும்பினர். அவர்களின் விருப்பத்தை உணர்ந்த சிவன், இவ்விடத்தில் தனது திருமணத்திற்கு முன்பே பார்வதி சமேதராக எழுந்தருளி காட்சி தந்தார். இங்கு திருமாங்கல்யம் செய்யப்பட்டதால், இப்பகுதியை தேவர்கள் "திருமாங்கல்யபுரம்' என அழைத்தனர். காலப் போக்கில் "திருமங்கலம்' என பெயர் மாறியது
மேற்படி கதைக்கு எந்த ஆதாரமும், ஆவணமும் இல்லை. புணையப்படும் வரலாறு! https://kidcha.blogspot.com/2015/12/blog-post.html?m=1
திருவிழாக்கள்
இக்கோவில் நடக்கும் ஒவ்வொரு திருவிழாவும் பிரசித்தம்.
வைகாசி திருவிழா
வைகாசி மாத அம்மாவாசையைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையன்று முதல் 13நாட்கள் வரை நடக்கும் திருவிழா வைகாசித் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதுவே இக்கோவிலின் முக்கிய திருவிழாவாகும். கொடியேற்றத்திற்கு முந்தய ஞாயிற்றுக்கிழமை இரவு திருவிழாவிற்கான பூச்சொரிதல் விழா நடைபெறும்.
நாள் | கிழமை | காலை | இரவு |
---|---|---|---|
1ம் நாள் | ஞாயிறு | கெடியேற்றம் | சிம்ம வாகனத்தில் மாரியம்மன் நகர்வலம் |
2ம் நாள் | திங்கள் | வெள்ளிச் சப்பரத்தில் மாரியம்மன் நகர்வலம் |
பூத வாகனத்தில் மாரியம்மன் நகர்வலம் |
3ம் நாள் | செவ்வாய் | வெள்ளிச் சப்பரத்தில் மாரியம்மன் நகர்வலம் |
அன்ன வாகனத்தில் மாரியம்மன் நகர்வலம் |
4ம் நாள் | புதன் | வெள்ளிச் சப்பரத்தில் மாரியம்மன் நகர்வலம் |
காமதேனு வாகனத்தில் மாரியம்மன் நகர்வலம் |
5ம் நாள் | வியாழன் | வெள்ளிச் சப்பரத்தில் மாரியம்மன் நகர்வலம் |
பெரிய குதிரை வாகனத்தில் மாரியம்மன் நகர்வலம் |
6ம் நாள் | வெள்ளி | வெள்ளிச் சப்பரத்தில் பத்திரகாளியம்மன், மாரியம்மன் நகர்வலம் |
பெரிய ரிசப வாகனத்தில் பத்திரகாளியம்மன் மற்றும் சிறிய ரிசப வாகனத்தில் மாரியம்மன் நகர்வலம் சமணர் கழுவேற்ற லீலை |
7ம் நாள் | சனி | வெள்ளிச் சப்பரத்தில் மாரியம்மன் நகர்வலம் |
பூப்பல்லக்கில் மாரியம்மன் நகர்வலம் |
8ம் நாள் | ஞாயிறு | தண்டிகையில் மாரியம்மன் நகர்வலம் |
மாலை: ஊஞ்சல் இரவு: பூச்சப்பரத்தில் நகர்வலம் |
9ம் நாள் | திங்கள் | _ | மாலை: முளைப்பாரிகை இரவு: நாக வாகனத்தில் மாரியம்மன் நகர்வலம் |
10ம் நாள் | செவ்வாய் | வெள்ளிச் சப்பரத்தில் பத்திரகாளியம்மன், மாரியம்மன் நகர்வலம் |
வெள்ளி சிம்ம வாகனத்தில் பத்திரகாளியம்மன் மற்றும் சிறிய குதிரை வாகனத்தில் மாரியம்மன் நகர்வலம் வந்து கோவில் முன்பு சூரசம்ஹாரம் நடைபெறும் |
11ம் நாள் | புதன் | வெள்ளிச் சப்பரத்தில் மாரியம்மன் நகர்வலம் |
பத்தியுலாத்துதல் (மாவிளக்கு) |
12ம் நாள் | வியாழன் | வெள்ளிச் சப்பரத்தில் மாரியம்மன் நகர்வலம் |
யானை வாகனத்தில் மாரியம்மன் நகர்வலம் |
13ம் நாள் | வெள்ளி | சிறிய குதிரை வாகனத்தில் மாரியம்மன் நகர்வலம் |
மாலை: ஆயிரம்பொன் சப்பரத்தில் குண்டாற்றில் எழுந்தருளள் இரவு: பழைய மாரியம்மன் கோவிலில் தசாவதாரக்காட்சி மறுநாள் காலை: கொடியிறக்கம் |
திருவிழாவின் 5ஆம் நாளான குதிரையோட்டம், 6ஆம் நாளான சமணர் கழுவேற்றம், 9ம் நாளான முளைப்பாரிகை, 10ம் நாளான சூரசம்ஹாரம், 13ம் நாளான அம்மன் குண்டாற்றில் எழுந்தருளுவதும் முக்கிய நிகழ்ச்சிகளாகும். இப்பதிமூன்று நாட்களிலும்இ கோயிலுக்கு அருகில் அமைத்துள்ள பி.கே.என் பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் பொருட்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் (பாட்டு கச்சேரி, ஆடல் பாடல், பட்டி மன்றம்) நடை பெறும்.
நவராத்திரி திருவிழா
புரட்டாசி மாதத்தில் நவராத்திரி கொலு. திருவிழா தொடங்கிய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு மாலை முதல் இரவு வரை ஓதுவார்களால் மந்திரங்கள் ஓதப்படும். விழாவன் கடைசி நாளான விஜயதசமியன்று மாரியம்மன் புறப்பாடாகி, இங்குள்ள பி.கே.என் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலுள்ள வன்னி மரத்தடியில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும்.
நாள் | அலங்காரம் |
---|---|
1ம் நாள் | மீனாட்சி அலங்காரம் |
2ம் நாள் | இராஜ இராஜேஸ்வரி அலங்காரம் |
3ம் நாள் | அன்னபூரணி அலங்காரம் |
4ம் நாள் | சரசுவதி அலங்காரம் |
5ம் நாள் | கிருஷ்னர் அலங்காரம் |
6ம் நாள் | மீனாட்சி திருக்கல்யாணம் |
7ம் நாள் | இராஜாங்கம் அலங்காரம் |
8ம் நாள் | மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் |
9ம் நாள் | சிவ பூசை |
10ம் நாள் | அம்பு போடும் நிகழ்ச்சி |
பெரிய கார்த்திகைத் திருவிழா
கார்த்திகை மாதத்தில் தீப உற்சவம். கார்த்திகை தீபதினத்தன்று மாலை வள்ளி தெய்வாணை சமேதராய் முருகர் வெள்ளி மயில் வாகனத்தில் அலங்காரம் செய்யப்பட்டு கோவிலின் வடக்கு வாசலில் உள்ள ஆறுகால் மண்டபத்தில் எழுந்தருளுவார். பின்னர் கோவிலின் முன்புள்ள திடலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு சுவாமி நகர்வலம் நடைபெறும்
திருவாதிரை திருவிழா
மார்கழி மாதத்தில் வரும் பவுர்னமியன்று திருவாதிரை திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை விடியும் முன்பு, கோவிலின் உள் மணடபத்தில் பத்திரகாளியம்மன் சிம்ம வாகனத்திலும் மற்றும் மாரியம்மன் ரிஷப வாகனத்திலும் அலங்காரமாகி பூசை நடைபெற்று பிராசதமாக திருவாதிரைக் களி தரப்படும். பின்னர் இரு அம்மனும் செவ்வந்திப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புறப்பாடாகி நகர்வலம் வருவர். சுவாமி கோவில் வந்தடைந்தவுடன் செவ்வந்திப் பூக்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும். இதனால் இத்திருவிழாவை, செவ்வந்திப்பூ திருவிழா என்று அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.
தைப்பூசத் திருவிழா
தை மாதத்தில் வரும் பவுர்னமியன்று தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தன்று மாலை வள்ளி தெய்வாணை சமேதராய் முருகர் வெள்ளி மயில் வாகனத்தில் அலங்காரம் செய்யப்பட்டு கோவிலின் கிழக்கு வாசலில் எழுந்தருளுவார். பின்னர் உற்சவருக்கு பூசை நடைபெற்று சுவாமி நகர்வலம் நடைபெறும்.
பங்குனி உத்திரத் திருவிழா
பங்குனி மாதத்தில் வரும் பவுர்னமியன்று பங்குனி உத்திரத் திருவிழா கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தன்று மாலை வள்ளி தெய்வாணை சமேதராய் முருகர் வெள்ளி மயில் வாகனத்தில் அலங்காரம் செய்யப்பட்டு கோவிலின் கிழக்கு வாசலில் எழுந்தருளுவார். பின்னர் உற்சவருக்கு பூசை நடைபெற்று சுவாமி நகர்வலம் நடைபெறும்.
போக்குவரத்து
சாலை வசதி
மதுரையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையான NH-7ல் திருமங்கலம் அமைந்திருப்பதால், இராஜபாளையம், குற்றாலம்,திருநெல்வேலி, நாகர்கோவில்,தூத்துக்குடி, விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட அனைத்து ஊர்களில் இருந்தும், பேருந்து வசதிகள் உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளைய பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்தும் 24மணி நேர நகர் பேருந்து வசதி உள்ளது. திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து கோவிலுக்கு செல்ல ஆட்டோக்கள் கிடைக்கும்.
தொடருந்து வசதி
மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் கொல்லம் இடையே இயங்கும் அனைத்து பயணிகள் தொடருந்துகளும் திருமங்கலம் தொடருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன. மைசூர் விரைவு தொடருந்து, தூத்துக்குடி விரைவு தொடருந்து, முத்து நகர் விரைவு தொடருந்து, அனந்தபுரி விரைவு தொடருந்து போன்ற விரைவுத் தொடருந்துகளும் இங்கு நின்று செல்கின்றன. திருமங்கலம் தொடருந்து நிலையத்திலிருந்து கோவிலுக்கு செல்ல ஆட்டோக்கள் கிடைக்கும்.
இவற்றையும் பார்க்க
- பாண்டியகுல சத்திரிய நாடார் உறவின்முறை
- பி. கே. என். வித்யாசாலா
- பி. கே. என். கலை மற்றும் அறிவியல் கல்லூரி