திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோயில்
புவியியல் ஆள்கூற்று:11°06′05″N 77°20′55″E / 11.101264°N 77.348517°E / 11.101264; 77.348517
பெயர்
புராண பெயர்(கள்):திருப்போர் வீரராகவப் பெருமாள் கோயில்
பெயர்:திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோயில்
ஆங்கிலம்:Tiruppur Veeraragava Perumal Temple
அமைவிடம்
ஊர்:திருப்பூர்
மாவட்டம்:திருப்பூர் மாவட்டம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வீரராகவப் பெருமாள்
உற்சவர்:சிறீதேவி, பூதேவி சமேத வீரராகவப் பெருமாள்
தாயார்:சிறீதேவி, பூதேவி
உற்சவர் தாயார்:சிறீதேவி, பூதேவி
தல விருட்சம்:மகிழம், வில்வ மரங்கள்
தீர்த்தம்:கனகாலய புஷ்கரணி
ஆகமம்:பாஞ்சராத்ர ஆகமம்
சிறப்பு திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி, வைகாசி விசாகத் தேர்த் திருவிழா, புரட்டாசி உதய கருடசேவை, ராமநவமி, பங்குனி உத்திரம், பிரம்மோற்சவம், ஆடிப் பூரம், வரலட்சுமி பூசை, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, அம்பு சேவை, கார்த்திகை தீபம், கூடாரவல்லி உற்சவம், அனுமன் ஜெயந்தி
வரலாறு
தொன்மை:12ஆம் நூற்றாண்டு
கட்டப்பட்ட நாள்:1939இல் புதுப்பிக்கப்பட்டது
தொலைபேசி எண்:+91 421 2204101

வீரராகவப் பெருமாள் கோயில் என்ற வைணவத் திருக்கோயில், இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. வழக்கமாக, மற்ற வைணவக் கோயில்களில் சயனக் கோலத்தில் பெருமாளின் திருமுகம் மேல் நோக்கி இருக்கும். ஆனால், இக்கோயிலின் மூலவர் சயனக் கோலத்தில், தன்னை வணங்கும் பக்தர்களைப் பார்க்கும் வண்ணம் அருள்பாலிக்கிறார். புஜங்க சயனமாக தென்திசையில் சிரம் வைத்து, வட திசை திருப்பாதம் நீட்டி, மேற்குத் திசை முதுகு காட்டி, கிழக்குத் திசையில் திருமுகம் காட்டி, ஆனந்த நிலையில், நாடி வரும் பக்தர்களைப் பார்வையால் ஆட்கொள்ளும் அற்புதக் கோலம் வேறு எந்தக் கோயிலிலும் காணாத அரிதான திருக்கோலம். கனகவல்லி (சிறீதேவி) தாயார், பூதேவி தாயார் இருவரும் இரண்டு தனித்தனி கருவறை விமானங்கள் கூடிய தனித்தனி சன்னதிகள் கொண்டு அருள்பாலிக்கின்றனர். பெருமாளுக்கு வலது புறத்தில், சிரசுப் பகுதியில் செல்வங்கள் அருளும் கனகவல்லி தாயார் அபயஹஸ்த முத்திரையில், அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்; இடதுபுறத்தில் பூதேவி தாயார் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

சேர, சோழ, பாண்டிய நாடுகளைப் போலவே கொங்கு நாடு என்று ஒரு தனிநாடு இருந்தது. கொங்கு நாடு 24 உள்நாடுகளாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது. பிரிவு நாட்டில் ஒன்றான குறுப்பு நாட்டில், திருப்பூர் இடம் பெற்றிருந்தது. குறுப்பு நாட்டின் பெருமையைக் கூறும் பழங்காலப் பாடலில், 'மஞ்சள், இஞ்சி, கமுகு, தென்னை வளம் மிக்க நாடு; வளர்சோலை மா, கதலி வாத்திக்கும் நாடு தஞ்சம் என்று வந்தவரைத் தாபரிக்கும் நாடு' எனக் குறிப்பிடப்படுகிறது. அத்தகைய திருப்பூர் நகரின் மையப்பகுதியில் அனந்தசயனக் கோலத்தில் 'வீரராகவப் பெருமாள்' என்ற திருநாமம் கொண்டு, பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். பழங்காலத்தில், மூலவர் மற்றும் இருபுறமும் தாயார்களுக்கு சிறிய அளவிலான விமானங்களுடன் கூடிய கற்கோயில் இருந்துள்ளது. பழைய தூண்கள், மேற்கூரைகள் இயற்கை சீற்றங்களாலோ அல்லது முகலாயர் படையெடுப்பாலோ சிதிலமடைந்திருக்கலாம் என செவிவழிச் செய்தி உள்ளது. பழைய கோயிலுக்குப் பதிலாக, 1939ல் கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நரசிம்மர் தூண் மற்றும் அதில் இடம் பெற்றுள்ள சிற்பங்களை ஆய்வு செய்ததில், ஏறத்தாழ 12ம் நூற்றாண்டில் கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்பது தொல்லியல் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. பெருமாள் கோயிலுக்கு, மைசூர் மன்னரால் 345.35 ஏக்கர் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டது குறித்து செப்புப் பட்டயங்கள் மூலம் தெரியவருகிறது. பின்னர், ஆங்கிலேயர் காலத்தில் இனாம் சாசனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் அமைவதற்கு முன், இங்குள்ள வில்வ மரத்தடியில் சுவாமி எழுந்தருளியிருந்ததாகவும், பிற்காலத்தில் கோயில் உருவாக்கப்பட்டு அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக செவி வழிச் செய்தி உள்ளது.

தனி சன்னதியில் ஆஞ்சநேயர் மிகவும் பழமையான புடைப்புச் சிற்பமாக எழுந்தருளியுள்ளார். தொட்டி பீடத்தில் வாலில் மணியுடன், இடுப்பில் கத்தியுடன், ஓங்கிய வலது கையும், இடது கையில் சவுபந்திகா மலர் கொண்டு அற்புத கோலத்தில் காட்சியளிக்கிறார். புடைப்புச் சிற்பத்தில், ஆஞ்சநேயரின் ஒரு பகுதி முகம், வடக்கு பார்த்து, பெருமாளைத் தரிசிக்கும் பொருட்டு வீர ஆஞ்சநேயராக எழுந்தருளியுள்ளார்.

திருமாலுக்கு உரிய புனிதம் வாய்ந்த ஆயுதங்கள் ஐந்தில் ஒன்றான சுதர்சனம் எனப்படும் சக்கரம், சிவபெருமானது சக்தி மற்றும் அவரது அக்னி இணைந்து உருவாக்கப்பட்டது. வராக அவதாரத்தில் விஷ்ணுவுக்குக் கோரைப் பற்களாகவும், நரசிம்ம அவதாரத்தில் கூர்மையான நகங்களாகவும், பரசுராம அவதாரத்தில் கோடாரியாகவும், வாமன அவதாரத்தில் சுக்ராச்சாரியாரின் கமண்டலத்தில் நீர் வராமல் தடுக்க வண்டு உருவத்தில் வந்தும் பல அவதாரங்களில் திருமாலுக்கு உதவியவர் சக்கரத்தாழ்வார். இக்கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள சுதர்சனப் பெருமாள், அறுகோண வடிவத்திற்குள் அக்னி ஜூவாலை போன்ற முடி, மூன்று கண்கள், கோரைப் பற்கள், பல்வேறு ஆயுதங்களைத் தாங்கிய 16 திருக்கரங்கள், சக்கரம் சுழன்று பாய்வது போன்ற பிரத்யேக வடிவில் சக்கரத்தாழ்வாராக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.[1]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 321 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 11°06'04.6"N, 77°20'54.7"E (அதாவது, 11.101264°N, 77.348517°E) ஆகும்.

மற்ற சன்னதிகள்

கனகவல்லி தாயார், பூதேவி தாயார், இராமானுசர், ஆண்டாள், யோக ஹயக்ரீவர், இலட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர், சக்கரத்தாழ்வார், தன்வந்திரி பகவான், வீர ஆஞ்சநேயர், நம்மாழ்வார், பொய்கையாழ்வார், மதுரகவியாழ்வார், பேயாழ்வார், பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், குலசேகராழ்வார், திருப்பாணாழ்வார், பூதத்தாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், குமுதவல்லி சமேத திருமங்கையாழ்வார் ஆகியோர் சன்னதிகள் அமைந்துள்ளன.

திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி, வைகாசி விசாகத் தேர்த் திருவிழா, புரட்டாசி உதய கருடசேவை, ராமநவமி, பங்குனி உத்திரம், பிரம்மோற்சவம், ஆடிப் பூரம், வரலட்சுமி பூசை, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, அம்பு சேவை, கார்த்திகை தீபம், கூடாரவல்லி உற்சவம், அனுமன் ஜெயந்தி ஆகியவை இக்கோயிலின் முக்கிய திருவிழாக்கள் ஆகும். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இக்கோயிலில் தேர்த்திருவிழா நடக்கவில்லை. இந்த ஆண்டுக்கான கோயில் தேரோட்டத் திருவிழா சூன் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றதுடன், சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், தேர்த் திருவிழாவின் போது கும்மியாட்டம், கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கொங்கு தமிழின் நாட்டுப்புறப் பாடல்கள் என கண்களுக்கும், செவிக்கும் விருந்தளிக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.[2]

மேற்கோள்கள்

  1. "Temple details>Tamilnadu Temple>வீரராகவப்பெருமாள்". Dinamalar.
  2. "திருப்பூர் வீரராகவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்..". News18Tamil. https://tamil.news18.com/news/tiruppur/tiruppur-veeraragava-temple-therottam-thousands-of-people-witnessed-aru-758208.html.