தி. ஞானசேகரன்
தி. ஞானசேகரன் | |
---|---|
பிறந்த இடம் | புன்னாலைக்கட்டுவன் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் சஞ்சிகை ஆசிரியர் |
பணி | மருத்துவர் |
தி. ஞானசேகரன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவரும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் ஆவார்.[1] இவர் இச்சஞ்சிகையை 2000ஆம் ஆண்டு சூனிலிருந்து வெளிக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.[2] தற்போது ஞானம் சஞ்சிகையை இணையத்தில் கிடைக்கக்கூடியவாறும் வெளியிட்டு வருகின்றார்.
வாழ்க்கைக் குறிப்பு
நீண்டகாலம் வைத்தியராகக் கடமை புரிந்து வரும் ஞானசேகரன் அவர்கள் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.[2] ஆரம்பக் கல்வியினையும் இடைநிலைக் கல்வியினையும் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டார். பின்னர் கொழும்பிலே தமது மருத்துவக் கல்வியினைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மலையகத்திலே நீண்ட காலமாக வைத்தியராகக் கடமையாற்றி வருகின்றார். யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், மலையகத்திலும் அவர் பெற்றுக்கொண்ட நிறைந்த அநுபவங்களே அவரது சிறுகதைகளாகவும், குறுபுதினம்களாகவும், புதினங்களாகவும் மலர்ந்துள்ளதை அவதானிக்கலாம்.
இலக்கியப் படைப்புகள்
1960களிலிருந்து இற்றைய வரை எழுதி வரும் ஞானசேகரனது படைப்புகளில் 1977 இல் வெளிவந்த அவரது புதிய சுவடுகள் என்னும் புதினம் விதந்தோதத்தக்கது. அவரது குருதிமலை என்னும் நாவலும் அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் என்னும் சிறுகதைத் தொகுதியும் பல்கலைக்கழகப் பாடநூல்களாக அங்கீகாரம் பெற்றுள்ளன. தமது படைப்பாற்றலால் பரிசில்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்டவர், அவரது சிறுகதைகளும், குறு புதினங்களும், புதினங்களும் ஈழத்துப் புனைகதை உலகில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
இவரது நூல்கள்
- வட இந்தியப் பயண அனுபவங்கள் - 2013
- எனது இலக்கியத் தடம் முதலாம் பாகம் (2013)
- கா. சிவத்தம்பி - இலக்கியமும் வாழ்க்கையும் (நேர்காணல்) - 2005
- ஞானசேகரன் சிறுகதைகள் (சிறுகதைகள்) - 2005
- அவுஸ்த்திரேலியப் பயணக்கதை (பயண இலக்கியம்)- 1999
- புரிதலும் பகிர்தலும் (நேர்காணல்) - 1999
- அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும் (சிறுகதைகள்)- 1998
- கவ்வாத்து (குறும் புதினம்) - 1996
- லயத்துச் சிறைகள் (புதினம்) - 1994
- குருதிமலை (புதினம்) - 1979
- புதிய சுவடுகள் (புதினம்) - 1977
- காலதரிசனம் (சிறுகதைகள்) - 1973
மேற்கோள்கள்
- ↑ "ஞானம் 2012.06". நூலகம் இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304122038/http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_2012.06. பார்த்த நாள்: நவம்பர் 11, 2012.
- ↑ 2.0 2.1 "ஞானசேகரன், தி". விருபா. http://www.viruba.com/atotalbooks.aspx?id=26. பார்த்த நாள்: நவம்பர் 11, 2012.