தம்புசாமி பிள்ளை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மலாயா சமுதாய நீதிபதி
தம்புசாமி பிள்ளை
இயற்பெயர்/
அறியும் பெயர்
தம்புசாமி பிள்ளை
K. Thamboosamy Pillay
担武沙美彼萊
பிறந்ததிகதி 1850
பிறந்தஇடம்  சிங்கப்பூர்
இறப்பு 1902
பணி ஈயச் சுரங்க உரிமையாளர், அரசாங்க குத்தகையாளர், சொந்த வர்த்தகம்
தேசியம் மலேசியர்
கல்வி ராபிள்ஸ் கல்லூரி (சிங்கப்பூர்)
அறியப்படுவது பத்துமலை கோயிலை உருவாக்கியவர்; கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலைத் தோற்றுவித்தவர்; கோலாலம்பூர் விக்டோரியா பள்ளி நிறுவனர்
பெற்றோர் கயரோகனம் பிள்ளை
பிள்ளைகள் 7

தம்புசாமி பிள்ளை (K. Thamboosamy Pillay, 1850–1902) என்பவர், சிங்கப்பூரில் பிறந்தவர். வாழ்நாளில் பெரும் பகுதியை மலாயா தமிழர்களின் கலை கலாசாரங்களுக்கு அர்ப்பணிப்பு செய்தவர். கொடை உள்ளமும் தாராள மனமும் கொண்டவர். சமயம், மொழி பார்க்காமல் தம் செல்வத்தை தர்ம சிந்தனையுடன் அள்ளிக் கொடுத்தவர். 1880களில் கோலாலம்பூர் தமிழர்களின் தலைவராக இருந்தவர்.

உலகத் தமிழர்களிடையே புகழ்பெற்று விளங்கும் பத்துமலை கோயிலை உருவாக்கியவர்; கோலாலம்பூர் மகாமாரியம்மன் கோயிலை தோற்றுவித்தவர்; கோலாலம்பூர் விக்டோரியா பள்ளி நிறுவனர்; மலாயா ஈயச்சுரங்க உரிமையாளர்களில் முதல் தமிழர்.[1]

அப்போதைய பிரித்தானிய மலாயாவில், ரவாங் நகரில் தான் முதன்முதலாக மின் இயற்றிகள் (Electric Generators) பயன்படுத்தப்பட்டன. உலகத் தமிழர்களிடையே புகழ்பெற்று விளங்கும் பத்துமலை கோயிலை உருவாக்கியவரும்; கோலாலம்பூர்மகாமாரியம்மன் கோயிலை தோற்றுவித்தவரும்; மலாயா ஈயச் சுரங்க உரிமையாளர்களில் முதல் தமிழருமான தம்புசாமி பிள்ளை அவர்கள்தான் தம்முடைய ஈய சுரங்கத்தில் (New Tin Mining Company) முதன்முதலாக மின் இயற்றிகளைப் பயன்படுத்தியவர் ஆகும்.[2]

வரலாறு

படிமம்:Lord Muruga Batu Caves.jpg
பத்துமலை முருகன் சிலை.

கயரோகனம் தம்புசாமி பிள்ளை என்று அழைக்கப்பட்ட தம்புசாமி பிள்ளை, மலாயா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் கோலாலம்பூரில் மிகவும் பிரபலமாக விளங்கியவர். தமிழர் சமுதாயத்தின் தலைவராக மதிக்கப்பட்டவர். செல்வச் சிறப்புமிக்க வர்த்தகராக விளங்கியவர்.

ஈயச் சுரங்க உரிமையாளராகவும், அரசாங்க குத்தகையாளராகவும் இருந்துள்ளார். கிள்ளானில் பிரபலமாக விளங்கும் சிவன் கோயில், தம்புசாமி பிள்ளையின் குடும்ப நிலத்தில் கட்டப்பட்டது. பின்னர், அந்த நிலம் ஆலய நிவாகத்தினரிடமே நன்கொடையாக வழங்கப்பட்டது.

பிறப்பு

தம்புசாமி பிள்ளை 1850-இல் சிங்கப்பூரில் வெள்ளாளர் மரபில் பிறந்தார். அவருடைய பெற்றோர் இந்தியா, தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு குடியேறியவர்கள். தன்னுடைய கல்வியை சிங்கப்பூரில் உள்ள ராபிள்ஸ் கல்லூரியில் பெற்றார். படிப்பை முடித்துக் கொண்டு ஜேம்ஸ் கத்தரி டேவிட்சன் எனும் வழக்குரைஞர் நிறுவனத்தில் மொழிபெயர்ப்பாளராகச் சேர்ந்தார். படிப்படியாக துணை வழக்குரைஞர் ஆனார். டேவிட்சனின் நம்பிக்கைக்கும் பாத்திரமானார்.

இந்தக் காலகட்டத்தில் பிரித்தானிய அரசு, ஜேம்ஸ் கத்தரி டேவிட்சனை மலாயாவின் முதல் பிரித்தானிய ஆளுநராக (British Resident) நியமனம் செய்தது. 1875இல் டேவிட்சன் சிலாங்கூரில் இருக்கும் கிள்ளானுக்கு பயணம் ஆனார். தன்னுடன் வருமாறு தம்புசாமி பிள்ளையை டேவிட்சன் கேட்டுக் கொண்டார். தம்முடைய 25ஆவது வயதில் தம்புசாமி பிள்ளையும் மலாயாவிற்கு வந்தார்.

மாநிலக் கருவூலத்தின் தலைமைக் கணக்கர்

தம்புசாமி பிள்ளை கோலாலம்பூருக்கு வந்ததும் அவரை மாநிலக் கருவூலத்தின் தலைமைக் கணக்கராக நியமித்தார்கள். 1870களில் அப்போதைய மாநிலக் கருவூலம் இப்போதைய நிதி அமைச்சுக்கு இணையானது. மாநிலக் கருவூலத்தின் பொருளாளர் விடுப்பில் இருக்கும் காலத்தில், தம்புசாமி பிள்ளை இடைக்கால பொருளாளராகவும் பணி புரிந்தார்.

கோலாலம்பூரில் பணிபுரிகின்ற காலத்தில், நிறைய இந்தியர்கள் கோலாலம்பூர் நகரின் சுற்றுவட்டாரங்களில் குடியேறி இருப்பதை தம்புசாமி பிள்ளை உணர்ந்தார். இவர்கள் பெரும்பாலோர் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள். இந்து சமயத்தை வழிபடுபவர்கள். ஆகவே, அவர்களுக்கு ஒரு வழிபாட்டு இல்லத்தை உருவாக்கித் தரலாம் என்று ஆவல் கொண்டார்.

மாரியம்மன் ஆலயம்

அதன் விளைவாக ஆற்றோரத்தில் ஒரு வழிபாட்டுத் தளத்தைக் கட்டினார். கோலாலம்பூரில் முதன் முதலாகக் கட்டப்பட்ட அந்த மாரியம்மன் வழிபாட்டுத் தளத்தில்தான் இப்போது விவசாய வானளாவி (Bangunan Pertanian) உள்ளது. 1875-இல் கோலாலம்பூர் இரயில்வே அமைப்புக்கு, தம்புசாமி பிள்ளை கட்டிய மாரியம்மன் வழிபாட்டுத் தளத்தின் அதே இடத்தில் நிலம் தேவைப்பட்டது.

அந்த இடத்தில் இரயில்வேயின் சரக்குக் கிடங்கு அமைய சாலப் பொருத்தமாக இருந்தது. அதற்குப் பதிலாக வேறு ஓர் இடத்தில் வழிபாட்டுத் தளத்திற்கான நிலம் வழங்கப்படுவதற்கு கோலாலம்பூர் இரயில்வேயினர் வாக்குறுதி அளித்தனர். சிலாங்கூர் மாநில சுல்தானின் ஒப்புதலின் பேரில் கோலாலம்பூர், ஜாலான் பண்டாரில் ஒரு கோயில் குடிசை கட்டப்பட்டது.

ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம்

அது அத்தாப்பு கூரைகள் வேய்ந்த கோயில் குடிசையாகும். இந்த ஜாலான் பண்டார்தான் இப்போது ஜாலான் துன் எச்.எஸ்.லீ என்று அழைக்கப்படுகிறது. அந்தக் கோயில் குடிசைக்கு ’இந்தியச் சமூகத்தின் நிலம்’ (Land for the Indian Community) என்று சிலாங்கூர் சுல்தான் அடிக்கல் நாட்டினார்.

தம்புசாமி பிள்ளை முன்னோக்குப் பார்வையுடையவர். 1888-இல் உள்ளூர் இந்தியச் சமூகத்தின் ஆதரவுடன், அந்த அத்தாப்புக் குடிசைக் கோயிலை செங்கல் கட்டிடமாக மாற்றினார். கோயில் கட்டிடம் கட்டப்படுவதற்கு கோலாலம்பூர் வாழ் மக்கள் தாராளமாக நன்கொடைகளை வழங்கினர். தம்புசாமி பிள்ளை, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் முதல் நிறுவனர் ஆனார்.

தென்னிந்திய வேலையாட்கள்

மலாயன் இரயில்வே சேவைக்கும், மலாயா பொதுப்பணித் துறைக்கும் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால், வெளிநாடுகளில் இருந்து ஆட்களைத் தருவிக்க தம்புசாமி பிள்ளை இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். மலாயாவின் பிரித்தானிய அரசாங்கம்தான் அவரை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. தம்புசாமி பிள்ளை தென்னிந்தியாவிற்கு பலமுறைகள் சென்று பல ஆயிரம் தென்னிந்தியர்களை வேலையாட்களாகக் கொண்டு வந்தார்.

1880களில் தம்புசாமி பிள்ளை அரசாங்கப் பணிகளில் இருந்து விலகிக் கொண்டு சொந்தத் தொழிலில் ஈடுபட்டார். அப்போது லோக் இயூ என்பவர் கோலாலம்பூரில் மிகப் பெரிய செல்வந்தராக இருந்தார். அவருடன் கூட்டாக இணைந்து புதிய ஈயச் சுரங்க நிறுவனம் (New Tin Mining Company) எனும் ஈயச் சுரங்கத் தொழில் நிறுவனத்தை சிலாங்கூர், ரவாங்கில் தொடங்கினார். இவர்கள்தான் மலாயாவில் முதன்முறையாக ஈயச்சுரங்கத் தொழிலில் மின்பம்பிகளைப் (electric pumps for mining) பயன்படுத்தியவர்கள் ஆகும்.

பொது வாழ்க்கை

தம்புசாமி பிள்ளை மலாயா அரசாங்கத்தால் ஒரு சமுதாய நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டவர். நீதிபதியின் தகுதி உடைய அந்த விருதை, மலாயாத் தமிழர்களில் முதன்முதலாகப் பெற்றவர் தம்புசாமி பிள்ளை ஆகும். அவர் மலாயா இந்தியச் சமுதாயத்தின் தலைவராகக் கருதப்ப்ட்டார். KL Sanitary Board என்று அழைக்கப்பட்ட கோலாலம்பூர் கழிவு நீக்க வாரிய உறுப்பினர்களில் ஒருவராகவும் சேவை ஆற்றியுள்ளார். அந்தப் பொறுப்பு மதிப்புமிக்க ஒரு உயர் பொறுப்பாகும்.[3]

அவருடைய வணிக ஈடுபாடுகளில் காப்பி பயிரிடுதல், நில மனை விற்பகம், கட்டுமானத் தொழில்களும் அடங்கும். சிலாங்கூர் சங்கம், குதிரைப் பந்தய சங்கம் போன்றவற்றில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். அந்தக் காலகட்டத்தில் சிலாங்கூர் சங்கத்தில் மேல் தட்டுப் பிரிவினர் மட்டுமே உறுப்பியம் ஆக முடியும். அவரிடம் நிறைய பந்தயக் குதிரைகளும் இருந்தன.

கோலாலம்பூர் விக்டோரியா பள்ளி

1902-இல் சிங்கப்பூர் குதிரைப் பந்தய சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொள்ள சிங்கப்பூர் சென்று இருந்த போது அங்கு காலமானார். அவருடைய உடல் அங்கிருந்து பாய்மரப்படகு மூலமாக கிள்ளான் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மலேசியாவில் புகழ்பெற்ற விக்டோரியா பள்ளியைத் தோற்றுவித்தவர்களில் தம்புசாமி பிள்ளையும் ஒருவராவார். 1893-இல் உள்ளூர் செல்வந்தர்களான லோக் இயூ, யாப் குவான் செங் போன்றவர்களின் துணையுடன் அப்பள்ளியை உருவாக்கினார். அந்தப் பள்ளியின் நிர்மாணிப்பிற்கு சிலாங்கூர் சுல்தான், பிரித்தானிய ஆளுநர் டிரேச்சர் (W.H.Treacher) நன்கொடை வழங்கினர்.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்

அப்பள்ளியின் ஒரு விளையாட்டுக்கூடம் இன்றும் தம்புசாமியின் பெயரை பறைசாற்றி வருகிறது. தம்புசாமியின் மகன் கணபதி பிள்ளை, அப்பள்ளியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவராகவும் செயலாற்றி உள்ளார். 1873-இல் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை தம்புசாமி பிள்ளை கட்டினார். மலேசியாவில் மிகப் பழமையான ஆலயங்களில் இதுவும் ஒன்று.[4]

பத்துமலைப் பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் கோரிக்கைக்கு இணங்க பத்துமலை ஆலயத்தையும் தம்புசாமி பிள்ளை கட்டிக் கொடுத்தார். தம்புசாமி பிள்ளை கொடை உள்ளம் கொண்டவர். தான் ஓர் இந்துவாக இருந்தும் இதர சமயங்களுக்கும் பண உதவிகள் செய்துள்ளார். கோலாலம்பூர் செயிண்ட் மேரி ஆலயத்திற்கு கணிசமான தொகையைக் கொடுத்து உதவியுள்ளார்.

நினைவுகள்

அன்னாரின் நினைவாக கோலாலம்பூர், சௌக்கிட் பகுதியில் ஒரு சாலைக்கு ஜாலான் தம்புசாமி என்று அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது. தவிர, செந்தூல் பகுதியில், தம்புசாமி தமிழ்ப்பள்ளி எனும் பெயரில் ஒரு பள்ளியும் இயங்கி வருகிறது. அவர் தோற்றுவித்த கோலாலம்பூர் விக்டோரியா கல்விக்கழகம் மலேசியாவின் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய வரலாற்றில் மறக்க முடியாத முதல் 10 தமிழர்களில் தம்புசாமி பிள்ளையும் ஒருவர்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=தம்புசாமி_பிள்ளை&oldid=26661" இருந்து மீள்விக்கப்பட்டது