தமிழ் - தாய்மொழி மாநாடு 2010 - பேர்கன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
Tamil-Morsål Konferense Bergen 14.JPG

தமிழ் - தாய்மொழி மாநாடு நோர்வேயிலுள்ள, பேர்கன் நகரத்தில் 2010 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 24, 25 ஆம் திகதிகளில் நடத்தப்பட்டது.[1] இது நோர்வேஜிய மொழியில் தமிழ் தாய்மொழி மாநாடு (Tamil Morsål Konferense) [2] என அழைக்கப்பட்டது. இந்த மாநாடு, அரசாங்க அனுசரணையோடு, நோர்வே மற்றும் சுவீடனில் இருக்கும் தமிழ் இருமொழி ஆசிரியர்கள், ஆசிரியர்களின் உதவியாளர்கள், பெற்றோர்கள், ஆர்வமுள்ள மற்றவர்களுக்காக நடத்தப்பட்ட முதலாவது தமிழ்த் தாய்மொழி மாநாடாகும்.[1][2] இந்த மாநாடானது பேர்கன் நகரசபையினரால், அரசாங்கத்தின் கல்விக்கான இயக்குநரகத்துடன் (Education Directorate) இணைந்து நடத்தப்பட்டது.[1][2] மாநாட்டிற்கு இருமொழிக் கல்வியில் ஆர்வம் கொண்ட நோர்வே, சுவீடனைச் சேர்ந்த தமிழ் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆர்வலர்களுக்குப் பொதுவில் அழைப்பு அனுப்பப்பட்டு[2], ஆர்வமுள்ளவர்கள் தம்மை பதிவு செய்துகொண்டு வந்து கலந்து கொண்டனர். அத்துடன் மலேசியா, கனடாவைச் சேர்ந்த தமிழ் கல்வியில் நாட்டம் கொண்ட துறைசார் அறிஞர்கள் சிலரும் விசேட அழைப்பின் பெயரில் வந்து கலந்து கொண்டு தமது அறிவை ஏனையோருடன் பகிர்ந்து கொண்டனர்.[1]

நிகழ்வுகள்

இரு நாட்கள் நிகழ்ந்த இந்த மாநாடு பேர்கன் நகரத்திலுள்ள இசுகாண்டிக் விடுதியில் (Scandic Hotel) நடைபெற்றது.[1] மாநாட்டில் 70 பேரளவில் வந்து கலந்து கொண்டனர். பேர்கன் நகரின் நகரசபையின் கல்வி நிருவாகி ஆரம்பவுரை நிகழ்த்துவதாக இருந்தாராயினும் அவர் சுகவீனம் காரணமாக மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமையால், அவரின் சார்பில் கல்வித் திணைக்களத்தில் பல்பண்பாட்டுக் கல்விக்கு பொறுப்பான அதிகாரி ஆரம்பவுரையை நிகழ்த்தினார். அவர் மேலும் நோர்வே, சுவீடனில் வாழும் வெளிநாட்டினரின் தாய்மொழியை அவர்களுக்கு கற்பிப்பதில் உள்ள அவசியம், சிரமங்கள் அதற்கான திட்டங்கள் பற்றியெல்லாம் எடுத்துரைத்தார். முனைவர் தயாளன் வேலாயுதபிள்ளை நோர்வேயிலுள்ள தமிழர்கள் பற்றியும், நோர்வேயில் ஆரம்பக் கல்வி, உயர்கல்வி போன்றவற்றில் அவர்களது நிலமை எவ்வாறுள்ளது என்பதைப் பற்றி ஒப்பீட்டளவிலும், அவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.[1]

இவ்வகையாக நோர்வேயில் வேற்று மொழியாகிய தமிழை கற்பிப்பதற்குப் பயன்படக் கூடிய வளங்களில் ஒன்றாக 'தாய்மொழித் திட்டம்' பற்றியும், அந்த வளத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் என்பதுபற்றியும் முனைவர் தயாளன் வேலாயுதபிள்ளை காட்சிப்படுத்தினார். இப்படியான வளங்களில் ஒன்றாக தமிழ் விக்கிப்பீடியாவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதுபற்றியும், தமிழ் விக்கிப்பீடியாவை மேலும் முன்னேற்ற அதற்கு தமிழர்கள் பங்களிப்பு செய்ய வேண்டியதன் அவசியம்பற்றியும் அங்கே எடுத்துக் கூறப்பட்டது. தொடர்ந்து பேர்கன் பல்கலைக் கழகத்தில் தனது முனைவர் பட்டப்படிப்பில் இருந்த விஜயசங்கர் அசோகன் 'தமிழ் மொழியின் வரலாறு' பற்றிய ஒரு உரையை நிகழ்த்தினார்.

மலேசியாவிலிருந்து விசேட அழைப்பின் பேரில் வந்து கலந்துகொண்ட முனைவர் மலர் அவர்கள், தாய்மொழியை, பிற நாடொன்றில் வைத்து கற்பிக்கும் ஆசிரியர்கள் சந்திக்கக் கூடிய பிரச்சனைகள், அவர்கள் தம்மை தகுதி வாய்ந்தவர்களாக ஆக்கிக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் போன்றவற்றை விளக்கினார்.[1] மாநாட்டின் இரண்டாம் நாளன்று கனடாவிலிருந்து வந்து கலந்து கொண்ட ஆய்வாளர் பொன் விவேகானந்தன், தாய்மொழியைக் கற்பிப்பதில் சந்திக்கக் கூடிய சவால்கள், மற்றும் கற்பித்தலுக்கான முன்மாதிரிகள் போன்றவைபற்றி விளக்கினார்.[1] முனைவர் மலர் அவர்களினது உதவியுடன் ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறை, குழு கலந்துரையாடல்கள், குழுவாக தொழிற்படும் பயிற்சிகள் என்பன வழங்கப்பட்டன.[1]

இப்படியான மாநாடு ஒவ்வொரு வருடமும் நிகழ்த்தப்பட முடிவு செய்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "Tema Morsmål Tamil konferanse". Tema Morsmål Tamil (தாய்மொழி தமிழ் கருப்பொருள்) (MFO - Morsmål og Fag Opplæring (தாய்மொழி, இருமொழி பாடப்பயிற்சி)) இம் மூலத்தில் இருந்து 2019-04-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190410141029/https://morsmal.no/ta/konferanser-tamil/246-tema-morsmal-tamil-konferanse. பார்த்த நாள்: 31 மார்ச் 2019. 
  2. 2.0 2.1 2.2 2.3 "Tamil Morsmål Konferanse (தமிழ் தாய்மொழி மாநாடு)". பேர்கன், நோர்வே நகராட்சி இம் மூலத்தில் இருந்து 2019-03-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190331140101/https://www.bergen.kommune.no/bk/multimedia/archive/00088/tamilkonferanse_88832a.pdf. பார்த்த நாள்: 31 மார்ச் 2019.