தஞ்சை சீனிவாசன் பிள்ளை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இயற்பெயர் தஞ்சை சீனிவாசன் பிள்ளை
இறப்பு 1928
பணி வழக்குரைஞர்

தஞ்சை சீனிவாசன் பிள்ளை (1846-1928) புகழ் வாய்ந்த வழக்குரைஞராகவும் தமிழ் அறிஞராகவும் விளங்கியவர்.தமிழ் வரலாறு என்னும் நூலை இரண்டு தொகுதிகளாக எழுதி வெளியிட்டவர்.

பிறப்பு,கல்வி,பணி

சீனிவாசன் பிள்ளை பிறந்த ஊர் அரியலூருக்கு அருகில் உள்ள கீழப்பழுவூர் ஆகும். அவர் தந்தை சிவசிதம்பரம் பிள்ளை ஒரு இரத்தின வணிகர் ஆவார். தொடக்கக் கல்வியை கீழப் பழுவூரிலும் கல்லூரிப் படிப்பை கும்பக்கோணம் கல்லூரியிலும் முடித்தார்.பின்னர் சட்டக் கல்வியும் படித்து வழக்கறிஞர் ஆனார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணி செய்தார். நாகப்பட்டினத்திலும் தஞ்சையிலும் வழக்குரைஞராகப் பணியாற்றினார். தஞ்சை நகரவைத் தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப் பட்டு அப்பதவியை வகித்தார்.

தமிழ்ப் பணி

தமிழ் இலக்கியங்களையும் கல்வெட்டு செப்பேடு ஓலைச்சுவடி ஆகியனவற்றைப் படித்தார்.நன்னூல், திருக்குறள், திருக்குறளின் பரிமேலழகர் உரை ஆகியவற்றை ஆழமாகப் படித்து மனனம் செய்தார். இங்ஙனம் தமிழ்ப் புலமையை வளர்த்துக் கொண்ட சீனிவாசன் பிள்ளை 'தமிழ் வரலாறு' என்னும் நூலை இரண்டு பகுதிகளாக எழுதி வெளியிட்டார்.முதல் பகுதியில் தமிழ் மொழி பற்றியும் இரண்டாம் பகுதியில் சங்க காலம் முதல் சமய எழுச்சிக் காலம் வரை தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதினார். தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் முதன்மையான நூலாகவும் தமிழில் வெளிவந்த முதல் நூலாகவும் 'தமிழ் வரலாறு' விளங்குகின்றது. கும்பக்கோணம் கல்லூரியில் தமக்குத் தமிழ் இலக்கியம் பயிற்று வித்த தியாகராசச் செட்டியாரை மிகவும் மதித்து நினைவு கூர்ந்து அவருக்கு இந்நூலை காணிக்கையாக்கினார்.மேலும் தமிழ் வரலாறு தொடர்பான பல குறிப்புகளை இரு பெட்டிகளில் போட்டு இருந்தார்.அப்பெட்டிகளை ஒரு திருடன் வீட்டில் நுழைந்து தூக்கிச் சென்று விட்டக் காரணத்தால் தமிழ் வரலாற்றின் மீதி இரண்டு பகுதிகளை வெளியிட முடியாமல் போனது. நாவலர் சோமசுந்தர பாரதியார் தி.ரு வி.க உ.வே சா போன்ற தமிழ் அறிஞர்களுடன் நட்பு பூண்டு அன்பு பாராட்டி வந்தார்.

பிற பொதுப் பணிகள்

புகழ் பெற்ற தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தைச் சென்னைக்கு மாற்றுவதாக இருந்த முயற்சியை முறியடித்து தஞ்சையிலேயே அந்நூலகம் இருக்குமாறு செய்தார். தஞ்சையில் கூட்டுறவு வங்கி ஒன்றை உருவாக்கினார்.மேலும் தஞ்சாவூர் பெர்மனண்டு வங்கி, மர்ச்சண்டு வங்கி ஆகியவற்றையும் தோற்றுவித்தார்.

தமக்கு உரிமையான நிலத்தில் ஒரு முருகன் கோவிலைக் கட்டினார்.அங்கேயே பூச் சந்தை ஒன்றை அமைத்து பொது மக்களுக்கு வழங்கினார்.

அன்னிபெசண்டு அம்மையார் தஞ்சைக்கு வருகை புரிந்த போது தாம் கட்டிய கட்டடத்திற்குப் பெசண்டு இல்லம் என்று பெயர் சூட்டி அன்னி பெசண்ட்டு அவர்களைக் கொண்டே அக்கட்டடத்தைத் திறக்கச் செய்தார் காந்தியடிகள் தி.ரு .வி.க. அன்னி பெசண்ட்டு,வி,எசு சீனிவாச சாத்திரி போன்ற தலைவர்கள் சீனிவாசன் பிள்ளையின் மாளிகை இல்லத்தில் தங்கியுள்ளார்கள்.காந்தியடிகள் ஆட்டுப் பால் குடிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்ததால் சீனிவாசன் பிள்ளை தம் வீட்டில் இரண்டு ஆடுகளை வாங்கி வைத்திருந்தார்.

மிகுந்த செல்வந்தரான சீனிவாசன் பிள்ளை 'பிரம்மஞானசவை' நெறியில் ஒழுகி சாதி மதம் பூசை சடங்கு போன்றவற்றை ஒதுக்கி மக்கள் தொண்டு செய்து 1928 ஆம் ஆண்டில் மறைந்தார்.

சான்று

செம்மொழிச் செம்மல்கள்-2 (ஆசிரியர் முனைவர் பா. இறையரசன், தமிழ்மண் பதிப்பகம்,சென்னை)

"https://tamilar.wiki/index.php?title=தஞ்சை_சீனிவாசன்_பிள்ளை&oldid=26064" இருந்து மீள்விக்கப்பட்டது