தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தங்கால் திருத்தங்கால் என்பது ஓர் ஊரின் பெயர். இவ்வூரில் வாழ்ந்த புலவர் வெண்ணாகனார். இந்த வெண்ணாகனார் நகைகள் செய்யும் பொற்கொல்லராக விளங்கியவர்.

இவரது பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் 6 உள்ளன. அவை அகநானூறு 48, 108, 355, குறுந்தொகை 217, நற்றிணை 313, புறநானூறு 326 ஆகியவை.[1]

பாடல் சொல்லும் செய்தி

அகநானூறு 48

தலைவி தலைவனை நினைத்துக்கொண்டிருக்கும் நிலையைத் தோழி செவிலித் தாய்க்கு அறத்தொடு எடுத்துரைக்கும் செய்தியைக் கொண்ட பாடல் இது.

வேங்கைப் பூத்திருக்கும் மரத்தைப் பார்த்த தலைவி அதனைப் புலி என மயங்கிப் 'புலி புலி' என்று கூவினாளாம். அங்கு வந்த தலைமகன் வில்லைக் கையிலேந்திக்கொண்டு எங்கே புலி என்று கேட்டானாம். அவள் வேங்கை மரத்தைக் காட்ட, 'பொய்யும் கூறுவையோ' என்று புன்னகை செய்துவிட்டு சென்றுவிட்டானாம். அதுமுதல் தலைவி அவனையே எண்ணிக்கொண்டிருக்கிறாளாம்.

பழந்தமிழ்

  • பழங்கண் = பழைய நினைவால் வரும் நினைவுத் துன்பம்

ஐம்பால்

'ஐவகை வகுத்த கூந்தல்'

அகநானூறு 108

மயிலைக் கண்டு பயந்து பாம்பு படம் எடுத்து ஆடுமாம்.

உவமை

விளையாட்டு - கையாடு வட்டு

ஐந்து கை விரல்கள் போல ஆறு இதழ்களுடன் பூத்திருக்கும் காந்தள் பூவில் அமர்ந்தும் எழுந்து பறந்தும் ஆடும் வண்டு 'கை ஆடு வட்டு' போல் இருக்குமாம். கைகளில் சிறு கல்லை வைத்துக்கொண்டு தூக்கிப் போட்டுப் பிடித்து விளையாடும் இக்காலப் 'பாண்டிக் கல்' விளையாட்டுப் போன்றது என்பது சங்ககாலக் கையாடு வட்டு விளையாட்டு என்பதை இதனால் உணரமுடிகிறது.

நீராவித் துளிகள்

பாறைகளின் மேல் முத்துக்கள் சிடப்பது போல் யானையின் மேல் நீராவித் துளிகள் தெரித்துக் கிடந்தனவாம். அந்தத் துளிகள் பளிங்குக் கற்கள் போலவும் காணப்பட்டனவாம்.

ஞெகிழி போல் மின்னல்

ஞெகிழி என்பது தீப் பந்தம். இரவில் தினையை மேய வரும் யானைகளை ஓட்டக் காடவர் தம் கையிலுள்ள ஞெகிழியை எறிவர். அது மின்னல் போலப் பாய்ந்ததாம்.

அகநானூறு 355

பிரிவு உணர்த்திய தோழியிடம் தலைவி சொல்கிறாள். தலைவன் இருப்பிடத்திற்கே சென்று நம் வளையல் கழல்வதைக் காட்டி நீ பிரிந்து செல்வது எமக்கு ஒத்தது அன்று என்று சொல்லிவிட்டு வந்துவிடலாம் வா என்கிறாள் தோழியிடம்.

குறுந்தொகை 217

தலைவன் உயர்ந்தவன் எனவும், தான் மெல்லியள் ('ஐதேகம்ம') எனவும் தலைவி தன்னைப் பற்றி எண்ணியவளாய்த் தலைவனுடன் ஓடிப் போக ஒப்பித் தன் தோழியிடம் சொல்கிறாள் தலைவி.

நற்றிணை 313

தாய் தன்னை வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளதைத் 'தினை கொய்பதம் பெற்றது' என்று கூறித் தலைவனை வரைந்து எய்தும்படி வீட்டக்குப் பக்கத்தில் தலைவிக்காகக் காத்திருக்கும் தலைவனிடம் தோழி சொல்கிறாள்.

புறநானூறு 326

  • இந்தப் பாடல் 'மூதின் முல்லை' என்னும் துறையைச் சேர்ந்தது. மறவன் குடும்பத்தின் பெருமை இதில் சொல்லப்படுகிறது.

குடும்பத்தின் மூதாட்டி இரவில் விளக்கு வெளிச்சத்தில் பஞ்சை அடித்துத் தூய்மை செய்கிறாள். ('சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த பருத்திப் பெண்டு') அந்த ஓசையைக் கேட்டு குஞ்சை அடைகாக்கும் கோழியும் நடுங்குகிறது. குஞ்சைப் பிடிக்கச் செல்லும் பூனையும் நடுங்குகிறது.

அந்த முதுகுடிப் பெண் தன் செல்வர்கள் பிடித்துவந்த உடும்புக் கறியைச் சமைத்துத் தருகிறாள். தயிர்சோற்றுக்குத் தொட்டுகொள்ள அந்த உடும்புக் கறி.

விருந்தாக வந்த பாணரோடு சேர்ந்து அந்தக் குடும்பமே அதனை உண்கிறது.

வீட்டுத் தலைவன் அரசனுக்காகப் போரிட்டுப் பட்டத்து யானையின் முகத்தில் கட்டப்பட்டிருக்கும் பொன்னால் செய்த ஓடையைப் பரிசிலாகப் பெறுவதை எண்ணித் திட்டமிட்டுகொண்டிருக்கிறான்.

மேற்கோள்கள்