செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன் சங்ககாலப் புலவர். குறுந்தொகை 228 எண்ணில் உள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
பெயர் விளக்கம்
செய்தி என்னும் சொல் யாழையும், செய்ந்நன்றியையும் உணர்த்தும் வகையில் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் இவரை யாழிசைவாணன் வள்ளுவன் என்றும், உதவும் வள்ளுவன் என்றும் கொள்ளலாம். உலகியலைச் சொல்லும் திருக்குறளைச் செய்தி என எடுத்துக்கொள்ளவும் இடம் உண்டு. இந்த வகையில் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரைச் செய்திவள்ளுவன் என்றும் கூறுகின்றனர்.
இந்தச் செய்திவள்ளுவனின் மகன்தான் இந்தப் பெருஞ்சாத்தன்.
பாடல் செய்தி
தலைவன் பிரிவை ஆற்றிக்கொண்டிருக்கும் திறமைசாலி என்று தலைவியைத் தோழி பாராட்டியதற்கு மறுமொழியாகத் தலைவி இவற்றைக் கூறுகிறாள்.
நெய்தல்நிலச் சிறுகுடி முற்றத்தில் தாழம்பூவின் மடல், குருகு சிறகை விரித்துப் படுத்துக் கிடப்பது போல், வீழ்ந்துகிடக்கும். அதனைக் கடலலை வந்து தொட்டுவிட்டுச் செல்லும். இந்த மென்பதத்தை விட்டுவிட்டு அவர் மிகத் தொலைவிலுள்ள நாட்டில் இருக்கிறார். இருந்தால் என்ன? அவர் என் நெஞ்சுக்கு அணியராக இருக்கிறாரே!
(தலைவியைத் தாழைமடலாக எண்ணிக்கொண்டு செய்தியை இணைத்துப் பார்க்கவேண்டும்)