சுரேந்திரநாத் ஆர்யா
சுரேந்திரநாத் ஆர்யா (S. P. Y. Surendranath Arya)என்பவர் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீர்ரும்,தெலுங்குப் பேச்சாளருமாவார். இவர் சுப்பிரமணிய பாரதியின் நண்பராவார். இவரது இயற்பெயர் எத்திராஜ் ஆகும்.
வாழ்க்கை
சுரேந்திரநாத் ஆர்யா சென்னையைச் சேர்ந்த தனகோடி ராஜு நாயுடு என்பவருக்கு மகனாகப் பிறந்தார். அவரது ஆரம்ப கல்வி முடிந்த பின்பு, தீவிரவாத அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1897இல் வங்கம் சென்றார்.அங்கு 1906 வரை வாழ்ந்தார்.அங்கு பெங்காலி புரட்சியாளர்கள் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். வங்கத்தில் இருந்தபோது, சுரேந்திரநாத் பானர்ஜி மீது கொண்ட ஈடுபாட்டால்,தனது பெயரை "சுரேந்திரநாத் ஆர்யா" என்று மாற்றிக்கொண்டார்.
கைது
சென்னை திரும்பிய ஆர்யா சுப்பிரமணிய பாரதியுடன் இணைந்து, செயல்பட்டார். அரச துரோகக் குற்றச்சாட்டின் பேரில் ஆகத்து 18, 1908 ல் கைது செய்யப்பட்டார்.
சிறைக்குப் பின்
சுரேந்திரநாத் ஆர்யா ஆறு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவித்துப் பிறகு, 1914-ல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.[1] பெல்லாரி சிறையிலிருந்தபோது அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. டேனிஷ் கிருத்துவ மிஷினரிகள் சேவையால் ஈர்க்கப்பட்ட அவர் கிறித்துவத்துக்கு மதம் மாறினார்.[2] மிஷனரிகளால் ஆர்யா அமெரிக்காவுக்கு படிப்புக்காக அனுப்பப்பட்டார் அங்கு தத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.படிப்பு முடித்துக் கிருத்தவ மதப் போதகராகச் சென்னைக்குத் திரும்பினார். இந்தியா திரும்பிய, ஆர்யா ஒரு ஸ்வீடிஷ் அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். பாரதியின் மறைவுக்குப் பிறகு பாரதியின் குடும்பத்துக்குப் பலவிதங்களில் உதவிசெய்தார்.
பின் வாழ்க்கை
ஆர்யா தனது ஸ்வீடிஷ் அமெரிக்க மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, 1920 களின் பிற்பகுதியில் மீண்டும் இந்து மதத்துக்கு மாறினார்.[2] பிரம்ம சமாசத்தின் உறுப்பினராகப் பணியாற்றினார்.சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து பெரியார் ஈ.வே.ராவின் நெருக்கமான நண்பர் ஆனார்.[2]
பாரதி திரைப்படத்தில் சுரேந்திரநாத் ஆர்யா வேடத்தில் நிழல்கள் ரவி நடித்திருந்தார்.
குறிப்புகள்
- ↑ http://www.madrasmusings.com/laying-traps-for-freedom-fighters-in-pondicherry.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 2.0 2.1 2.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-09-17. பார்க்கப்பட்ட நாள் 2015-01-08.