சுஜாதா கிருஷ்ணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சுஜாதா கிருஷ்ணன்
Sujatha Krishnan
苏迦达克利斯南
இயற் பெயர் சுஜாதா
பிறப்பு (1979-01-01)சனவரி 1, 1979
மலேசியா பகாங், கேமரன் மலை
ரிங்லெட்
இறப்பு (2007-06-25)சூன் 25, 2007
சிலாங்கூர், கிள்ளான், துங்கு அம்புவான்
ரஹிமா மருத்துவமனை
துணைவர் திருமணமாகாதவர்

சுஜாதா கிருஷ்ணன் (Sujatha Krishnan) (பிறப்பு: ஜனவரி 1, 1979 - இறப்பு: ஜூன் 25, 2007) மலேசியாவில் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகை. சுஜாதா என்பது இவருடைய இயற்பெயர். இவர் நடித்த கடைசிப் படம் நூர்ஹாலிசா எனும் மலாய்ப் படமாகும். இவர் ஒரு பாடகியாக மலேசியத் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், பல தொலைக்காட்சித் திரைப்படங்கள், தொடர் நாடகங்களில் நடித்தார். உள்ளூர் விளம்பரப் படங்களிலும் நடித்து இருக்கிறார்.

பாராகுவாட் எனும் களைக் கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.[1] அப்போது அவருக்கு வயது 28. இறப்பதற்கு முன்னர் சுஜாதா கிருஷ்ணன் மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வேல்பாரியின் தனிச் செயலாளராகப் பணிபுரிந்தார். வேல்பாரி, மலேசியாவின் பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த டத்தோ ஸ்ரீ சாமிவேலுவின் மூத்த புதல்வர் ஆவார்.

சுஜாதாவின் இறப்பில் மர்மங்கள் நிறைந்துள்ளன என்று மக்கள் கூட்டணியைச் சேர்ந்த மலேசிய நீதிக்கட்சி காவல் துறையிடம் புகார் செய்தது. சிலாங்கூர், காப்பார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். மாணிக்கவாசகம் அந்தப் புகார் மனுவைச் செய்தார். சுஜாதாவின் இறப்பிற்கும் சா. வேல்பாரிக்கும் தொடர்புகள் இருக்கலாம் என்றும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.[2]

வரலாறு

சுஜாதா கிருஷ்ணன், கேமரன் மலையில் இருக்கும் ரிங்லெட் நகரில் பிறந்தவர். ரிங்லெட் தமிழ்ப்பள்ளியில் தன் தொடக்கக் கல்வியைத் தொடங்கினார். சிறு வயதாக இருக்கும் போதே அவருடைய குடும்பம் கோலாலம்பூருக்கு மாற்றலாகிச் சென்றது. தன்னுடைய தொடக்க, உயர்நிலைக் கல்வியைக் கோலாலம்பூரிலும் ஈப்போவிலும் பெற்றார்.

பேராக் மாநிலத்தின், ஈப்போ மாநகருக்கு அருகில் இருக்கும் ஜெலாப்பாங் புறநகர்ப் பகுதியில் வளர்ந்தவர். இப்போது அவருடைய இல்லம் தாமான் புஞ்சாக் ஜெலாப்பாங்கில் இருக்கிறது. பள்ளியில் படிக்கும் போதே பாடுவதில் திறன் பெற்று இருந்தார். உள்ளூர் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல பாடல் போட்டிகளிலும் வாகை சூடியுள்ளார்.

மலேசியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

மேல்படிப்பு படிப்பதற்காக கோலாலம்பூர் வந்த போது, மலேசியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. தனியார் நிறுவனங்களின் விளம்பர படங்களிலும் நடித்தார். மேடை நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்தார்.

இந்தக் காலகட்டத்தில் டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலுவின் புதல்வர் வேல்பாரியின் நட்பு கிடைத்தது. மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்த வேல்பாரிக்கு செயலாளினியாகப் பணியில் சேர்ந்தார். 1999இல் இருந்து 2007வரை அவருக்கு உதவியாளராக இருந்துள்ளார்.

தெரியாமல் குடித்துவிட்டேன்

சுஜாதாவின் சொகுசு மாடிவீடு கோலாலம்பூர், ஈப்போ சாலையில் சாங் சூரியா கூட்டுரிமை வீட்டுப்பகுதியில் இருந்தது.[3] 2007 ஜூன் மாதம் 21ஆம் தேதி அவர் பாராகுவாட் எனும் களைக் கொல்லி மருந்தை அருந்தினார்.

சிலாங்கூர், கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். களைக் கொல்லி மருந்தை ‘தெரியாமல் குடித்துவிட்டேன்’ என்று சொல்லி வந்தார்.[4] நான்கு நாட்கள் கழித்து 2007 ஜூன் 25இல் காலமானார்.

மலேசியத் திரைபட நடிகையாக இருந்து புகழ் பெற்றதைக் காட்டிலும், அவருடைய இறப்பிற்குப் பின்னர்தான் அவர் மிகவும் பிரபலம் அடைந்தார். அவருடைய இறப்பைப் பற்றிய விசாரணைகள் மலேசிய நீதிமன்றங்களில் நடைபெற்ற போது, முடிவுகளை அறிந்து கொள்வதில் மலேசிய மக்கள் ஆர்வம் காட்டினர்.

மரண விசாரணை

சுஜாதா இறந்த பின்னர், அவருடைய இறப்பில் சூது நடந்து இருக்கலாம். அது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று காப்பார் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் எஸ். மாணிக்கவாசகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.[5] மலேசியத் தலைமை காவல்துறை சுயேட்சையான விசாரணைக் குழு ஒன்றை அமைத்து உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று மாணிக்கவாசகம் கேட்டுக் கொண்டார்.[6]

சுஜாதாவின் இறப்பிற்கும் வேல்பாரிக்கும் தொடர்புகள் உள்ளன என்று எஸ். மாணிக்கவாசகம் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார். இருவரும் காதலர்களாக இருந்தனர். சுஜாதா வாங்கிய 420,000 மலேசிய ரிங்கிட் சொகுசு வீட்டிற்கு, வேல்பாரி 200,000 மலேசிய ரிங்கிட் அன்பளிப்பாகக் கொடுத்து இருக்கிறார்.[7]

அத்துடன் 229,095 மலேசிய ரிங்கிட் மதிப்புள்ள ’மாஸ்டா ஆர்.எக்ஸ் 8’ ரக விலையுயர்ந்த காரையும் வாங்கிக் கொடுத்து இருக்கிறார் என்று குற்றம் சாட்டினார். பின்னர், நீதிமன்றத்தின் விசாரணைகளில் அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என நிரூபிக்கப்பட்டன.[8]

வேல்பாரி மறுப்பு

2009 மார்ச் 16ஆம் தேதி சுஜாதாவின் திடீர் மரணம் குறித்த மரண விசாரணை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது.[9] மரண விசாரணை நீதிபதி முகமட் பாய்சி செ அபு என்பவரின் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அரசு தரப்பில் அரசுக் குற்றவியல் வழக்குரைஞர் கீதன் ராம் வின்செண்ட் வழக்கு நடத்தினார்.[10] வேல்பாரியின் சார்பில் வழக்குரைஞர் கே.குமரேந்திரன் வாதாடினார்.

விசாரணையின் போது, தனக்கும் சுஜாதாவிற்கும் எவ்வித நெருக்கமான தொடர்புகள் இல்லை என்றும், தங்களுக்குள் உரிமையாளர் - ஊழியர் எனும் சாதாரண உறவு மட்டுமே இருந்தது என்றும் வேல்பாரி (வயது 49) கூறினார்.[11] அலுவலக நிகழ்ச்சிகளுக்காகத் தான் போகும் இடங்களுக்கு தன்னுடன் சுஜாதாவும் வருவார் என்று வேல்பாரி தெரிவித்தார்.[12]

காதல் உணர்வுகள் இல்லை

சுஜாதாவிற்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் மிகையாகச் செலவு செய்ததை வேல்பாரி ஒப்புக் கொண்டார். ஆனால், தனக்கும் சுஜாதாவிற்கும் காதல் உணர்வுகள் இருந்தன என்பதை மட்டும் முற்றாக மறுத்துவிட்டார்.

வேல்பாரியும் அவருடைய மனைவி ஷைலா நாயரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட திருமணப்படம் ஒன்று கிழிக்கப்பட்டு, சுஜாதா தங்கி இருந்த வீட்டின் படுக்கை அறையில் கிடந்தது. அதைப் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்று வேல்பாரி கூறினார்.[13][14]

இந்தியாவில் சுஜாதாவிற்கு மருத்துவ சிகிச்சை

சுஜாதாவிற்கு கி. யுகேந்திரன் (28), கி. சுரேந்திரன் (26) என இரு சகோதரர்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் தங்கிப் படிப்பதற்கான செலவுகளை தான் ஏற்றுக் கொண்டதாக வேல்பாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.[15][16]

சுஜாதாவுக்கு அடிக்கடி வயிற்றுவலி வரும். அவரைச் சிறப்பு மருத்துவரிடம் வேல்பாரி அழைத்துச் செல்வார். சுஜாதாவிற்கு கர்ப்பப்பையில் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஈப்போ சாலையில் இருக்கும் டாமாய் மருத்துவமனைக்கு, சுஜாதாவை அவருடைய இரு தம்பிகளுடன் அழைத்துச் செல்வதும் உண்டு.[17]

அந்த நோயைக் குணப்படுத்த அவரை இந்தியாவிற்கும் அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சிகள் வேல்பாரியின் மனைவி ஷைலா நாயருக்குத் தெரியும். ஆனால், அவர் தங்களுடன் சேர்ந்து இந்தியாவிற்கு வந்தது இல்லை.[18]

ஆஸ்திரேலியாவில் சுஜாதாவின் தம்பிகள்

சுஜாதாவையும் அவருடைய குடும்பத்தாரையும் இரு முறை இந்தியாவிற்கு அழைத்துச் சென்றதாகவும் அதற்கான செலவுகளைத் தானே ஏற்றுக் கொண்டதாவும் நீதிமன்றத்தில் வேல்பாரி மேலும் கூறினார். ஆஸ்திரேலியாவில் படித்த சுஜாதாவின் தம்பிகளைப் பார்க்க வேல்பாரியும் சுஜாதாவும் அங்கு ஒன்றாகவே சென்றனர்.

அந்தச் சமயங்களில் வேல்பாரியின் மனைவி ஷைலா நாயர் அவர்களுடன் வெளிநாடுகளுக்கு வரவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.[19]

2009 ஜூலை 10ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த மரண விசாரணையில் 23 பேர் சாட்சியம் அளித்தனர். அவர்களில் கடைசியாக, செந்தூல் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.பி. ஜில்கிப்ளி பாஜார் என்பவர் சாட்சியம் அளித்தார்.

தீர்ப்பு

2009 செப்டம்பர் 29இல் விசாரணை நீதிமன்றம் தன் தீர்ப்பை வழங்கியது. சுஜாதாவின் மரணத்தில் எவ்வித சூதும் நடைபெறவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டது உண்மை என தீர்ப்பு வழங்கியது. அத்துடன் சுஜாதாவின் மரணத்தில் இருந்த மர்மங்கள் ஒரு முடிவுக்கும் வந்தன.[20]

காணொளித் தொகுப்பு

  1. யூடியூபில் Malaysian Actress Sujatha 1
  2. யூடியூபில் The mysterious death of K. Sujatha

மேற்கோள்கள்

  1. Sujatha mungkin minum racun: Doktor. Utusan Online. 19 Mac 2009.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Local newspapers did not specify the cause of her death but a police report has been made yesterday by Parti Keadilan Rakyat implicating Vellpaari, Works Minister Samy Vellu’s son.
  3. "Sang Suria is a freehold condominium nestled in Sentul West, part of YTL186-acre township." இம் மூலத்தில் இருந்து 2013-02-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130208183954/http://www.propwall.my/sentul/sang_suria. 
  4. "Poison drunk ‘mistakenly’. When Vell Paari contacted Sujatha, she kept repeating (in Tamil) “theriyaama kudichiten”." இம் மூலத்தில் இருந்து 2009-03-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090321033753/http://thestar.com.my/news/story.asp?file=%2F2009%2F3%2F17%2Fcourts%2F3492748&sec=courts. 
  5. "Kapar member of parliament M Manikavasam this morning filed an application at the High Court." இம் மூலத்தில் இருந்து 2013-03-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130323122132/http://national-express-malaysia.blogspot.com/2009/02/sujathas-death-kapar-mp-wants-answers.html. 
  6. "Manikavasam of Justice party (Parti Keadilan Rakyat) has called Malaysian Inspector of General of Police to setup an independent inquiry commission." இம் மூலத்தில் இருந்து 2013-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130116040516/http://www.indianmalaysian.com/sound/modules.php?name=News&file=article&sid=567. 
  7. court was told that Sujatha had taken a RM200,000 loan from a bank to buy the property and that Vell Paari had come up with the other RM220,000.
  8. "Vel Paari admitted to servicing part of a loan for Sujatha’s condominium, a guarantor for her loan to buy a Mazda RX8 sportscar and funding her studies at the diploma and master’s level." இம் மூலத்தில் இருந்து 2009-03-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090321030942/http://thestar.com.my/news/story.asp?file=%2F2009%2F3%2F18%2Fcourts%2F3500431&sec=courts. 
  9. "Vell Paari, today took the stand to testify in the inquest probing into the mysterious death of former actress K Sujatha." இம் மூலத்தில் இருந்து 2013-03-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130323184433/http://national-express-malaysia.blogspot.com/2009/03/sujatha-inquest-starts-with-vellpaari.html. 
  10. "Vell Paari yang menjawab soalan Timbalan Pendakwa Raya, Geethan Ram Vincent berkata, Sujatha berkhidmat di syarikatnya sejak tahun 1999–2007 sebagai setiausaha sulitnya." இம் மூலத்தில் இருந்து 2009-03-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090320080916/http://www.utusan.com.my/utusan/info.asp?y=2009&dt=0317&pub=Utusan_Malaysia&sec=Mahkamah&pg=ma_05.htm#ixzz2JINOWY00%20%C2%A9%20Utusan%20Melayu%20%28M%29%20Bhd. 
  11. Maika Holdings Bhd chief executive officer S Vell Paari told the coroner’s court here today that he never had a sexual relationship with his personal assistant K Sujatha.
  12. Sujatha had accompanied me for official and family functions.
  13. ""Photo of Vell Paari found in bedroom", The Star. 18 Mac 2009." இம் மூலத்தில் இருந்து 2009-03-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090321030942/http://thestar.com.my/news/story.asp?file=%2F2009%2F3%2F18%2Fcourts%2F3500431&sec=courts. 
  14. "A torn wedding photograph showing Maika Holdings chief executive officer S. Vell Paari and his wife was among items produced as exhibit." இம் மூலத்தில் இருந்து 2009-03-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090321030942/http://thestar.com.my/news/story.asp?file=%2F2009%2F3%2F18%2Fcourts%2F3500431&sec=courts. 
  15. "Sujatha, his family members knew well that he had been financing the overseas education of both Sujatha’s brothers from 2003 up until last year." இம் மூலத்தில் இருந்து 2013-03-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130323184433/http://national-express-malaysia.blogspot.com/2009/03/sujatha-inquest-starts-with-vellpaari.html. 
  16. Vell Paari told the court that he had funded the education for Sujatha's two brothers, Surenthiran and Ugenthiran. Ugenthiran was then studying in Australia.
  17. leading centre for Assisted Reproductive Treatment, Concept Fertility Center and IVF treatment.[தொடர்பிழந்த இணைப்பு]
  18. "Sujatha pernah beberapa kali menghantar Sujatha ke Hospital Damai kerana Sujatha selalu mengalami kesakitan di bahagian ovari." இம் மூலத்தில் இருந்து 2009-03-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090320080916/http://www.utusan.com.my/utusan/info.asp?y=2009&dt=0317&pub=Utusan_Malaysia&sec=Mahkamah&pg=ma_05.htm#ixzz2JINOWY00%20%C2%A9%20Utusan%20Melayu%20%28M%29%20Bhd. 
  19. Sujatha had also accompanied him to Australia. Vell Paari's wife Shaila Nair had never followed them during these trips.
  20. The coroner's court today ruled out any criminal involvement in the death of actress K.Sujatha's, saying that she committed suicide by drinking paraquat.
"https://tamilar.wiki/index.php?title=சுஜாதா_கிருஷ்ணன்&oldid=22836" இருந்து மீள்விக்கப்பட்டது