சு. தமிழ்ச்செல்வி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சு. தமிழ்ச்செல்வி
சு. தமிழ்ச்செல்வி
இயற்பெயர்/
அறியும் பெயர்
சு. தமிழ்ச்செல்வி
பிறந்ததிகதி 1971 மே 4 ,கற்பகநாதர்குளம், திருவாரூர்

சு. தமிழ்ச்செல்வி என்பவர் ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர்.

சு. தமிழ்ச்செல்வி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கற்பகநாதர்குளம் என்னும் ஊரில் 1971 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் நாள் பிறந்தார். இவருடைய பெற்றோர்களான தந்தை சுப்பிரமணி ஓமியோபதி மருத்துவராகப் பணியாற்றியவர். தாயார் முத்துலட்சுமி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

பல இலக்கிய மேடைகளில் பங்களிக்கும் இவர் மாணிக்கம், அளம், பொன்னாச்சரம், ஆறுகாட்டுத்துறை, கீதாரி, தொப்புள்க்கொடி மற்றும் கண்ணகி ஆகிய நாவல்களை எழுதியுள்ளார்.

இவர் எழுதிய "மாணிக்கம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருந்தது. 2022 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது பெற்றுள்ளார்.

இலக்கியப் பணி

சு.தமிழ்செல்விக்கு அவர் பிறந்த ஊர், அதன் வாழ்க்கை முறை, நிலத்தோற்றம் இவையே பின்னாளில் எழுதுவதற்கான கருப்பொருட்களை தந்தன. " எளிய கிராமத்து பிறப்பும், வளர்ப்புமே என்னை எழுதத் துாண்டின" என்று குறிப்பிடுகிறார்.சு.தமிழ்ச்செல்வியின் முதல் நாவல் மாணிக்கம்

வேதாரண்யம் அருகிலுள்ள கோயில்தாழ்வு என்ற கிராமத்து மக்களின் வாழ்வாதாரமான உப்பளத்தையும், அங்கு உழைக்கும் பெண்களையும் களமாகக் கொண்டது சு.தமிழ்ச்செல்வியின் இரண்டாவது நாவல் அளம். தன் கணவன் கைவிட்டுசென்ற குடும்பத்திற்காக உப்பளத்தில் உழைக்கும் பெண்ணின் கதை. தான் சிறுவயதில் கண்ட, அவ்வூரில் வசித்த தன் தாய்வழி உறவினரின் வாழ்வே 'அளம் ' நாவலின் கரு என தமிழ்ச்செல்வி குறிப்பிடுகிறார்.

குடிப்பழக்கம் எளிய மக்களின் வாழ்வைப் புரட்டிப்போடுவதை சித்தரிக்கும் நாவல் கற்றாழை. சிற்றூர் பின்னணி கொண்ட மணிமேகலை என்னும் சாதாரணப் பெண்ணின் அல்லல் மிக்க வாழ்வு அவளைத் தொழில் நகரமான திருப்பூருக்கு இட்டுச் செல்ல, அங்கு தன்னைப் போன்ற பெண்களோடு ஒரு கம்யூனாக (commune) வாழ அவளது உழைப்பு வழிகாட்டுகிறது. எத்தகைய வறட்சியிலும் தன்னை தகவமைத்துக் கொண்டு உயிர்த்திருக்கும் கற்றாழை இப்பெண்களுக்கான உருவகம்

மீன் பிடிக்கும் வன்னிய சமூகத்தினர் வாழும் ஊர் ஆறுகாட்டுத்துறை.சமத்துவம் கூடிய சமூக அமைப்பாகத் திகழும் அவ்வூரைப் பற்றிய பதிவுகளைத் தன் நாவலில் கொண்டுவரவேண்டி, சமுத்திரவல்லி என்னும் கற்பாத்திரத்தின்மூலம் ஆறுகாட்டுத்துறை நாவலை எழுதினார்.

சாதி மற்றும்பாலியல் ரீதியாக ஒதுக்கப்பட்ட பெண்ணின் சீற்ற வெளிப்பாடுதான் கண்ணகி '. தன் உழைப்பால் உயர்ந்து தொழில் முனைவோராக வளரும் பெண்ணின் வாழ்வேதொப்புள் கொடி நாவலின் கதைக்கரு. விரும்பி ஏற்றுக்கொண்ட கணவன் செய்யும் துரோகம், அவள் மீது காட்டும் அலட்சியப்போக்கு இவற்றால் சோர்ந்து போகமல் உழைத்து,தனது லட்சியம் நிறைவேறியதும் அனைத்தையும் உதறிச் சென்று கோயில் வாசலில் பிச்சைக்காரர்களுக்கு இடையில் சென்று அமரும் பெண்ணின் கதை.

ஆண்டுதோறும் விருத்தாச்சலத்தின் புறநகர்ப் பகுதிக்கு ஆட்டுக்கிடை போட வரும் நாடோடிகளான கீதாரிகளிடம் பழகி, அவர்கள் வாழ்க்கையைப் பதிவு செய்த நாவல் 'கீதாரி'. கீதாரிப் பெண்களின் இருப்பையும், நாடோடி வாழ்க்கையில் அவர்களின் பாடுகளையும் சொல்லும் நாவல் 'பொன்னாச்சரம்'. நகர்மயமாதலால் அவர்கள் வாழ்வியல் ஏற்படும் பாதிப்புகளையும் , நில ஆதாரம் இல்லாத அவர்கள் ஊரின் புழங்கு வெளிகளுக்குள் அடிமை போலவே நடத்தப்படுவதையும் இந்த இரு நாவல்களும் பதிவுசெய்கின்றன.

சு.தமிழ்ச்செல்வியின் படைப்புகளை முன்வைத்து பல மாணவர்கள் முனைவர், இளம் முனைவர் பட்ட ஆய்வுகள் செய்துள்ளனர்.

தான் நன்கு அறிந்த, நேரில் கண்டுணர்ந்த, பின் தங்கிய கிராமப் பகுதிகளில் உழைக்கும் பெண்களின் உழைப்பையும் வியர்வையையும் வலியையும் பாடுபொருளாகவும் அவர்களின் உழைப்பை வேண்டி நிற்கும் வயல் காடுகளைப் பாடுகளங்களாகவும் தேர்வு செய்கிறார். கதை மாந்தர்கள் ஈடுபடும் தொழிலிடங்களில் (விவசாயம், உப்பளம், ஆட்டுக்கிடை, பீங்கான்தொழில், மீன் பிடிப்பு ) கள ஆய்வு செய்து அத்தொழில்களின் சூழல், நுட்பங்கள், கடினத்தன்மை, தொழிலாளர்களிடையே நடைபெறும் பண்டமாற்று முதலியவற்றை நுண் விவரங்களுடன் பதிவு செய்திருக்கிறார்.

சு.தமிழ்ச்செல்வியின் அனைத்து நாவல்களிலும் பொதுமைப் பண்பாக அமைந்திருப்பது திருமணமான பெண்களின் துயரங்களே. ஒடுக்கப்படும் பெண்கள் தங்கள் உழைப்பினால் மெல்ல எழும்போது, அடுத்த தலைமுறைப் பெண்கள் தம்மை அழுத்தும் தளைகளை மீறி குடும்பத்தை விட்டு வெளியேறவும் துணிகிறார்கள்.

நாவல்கள்

  • மாணிக்கம் (2002)
  • அளம்( 2002)
  • கீதாரி( 2003)
  • கற்றாழை ( 2005)
  • ஆறுகாட்டுத்துறை(2006)
  • கண்ணகி (2008)
  • பொன்னாச்சரம் ( 2010)

சிறுகதைகள்

  • சாமுண்டி (2006)
  • சு.தமிழ்ச்செல்வி சிறுகதைகள் ( 2010)

பரிசுகளும் சிறப்புகளும்

  • தமிழ் வளர்ச்சித் துறை, சிறந்த புதினம் ("மாணிக்கம்") விருது, 2002
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் விருது, புதினம்- "கற்றாழை"
  • கலைஞர் பொற்கிழி விருது (தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்)
  • விளக்கு விருது 2022


அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

"https://tamilar.wiki/index.php?title=சு._தமிழ்ச்செல்வி&oldid=4189" இருந்து மீள்விக்கப்பட்டது