சி. ஜேசுதாசன்
பேராசிரியர் சி. ஜேசுதாசன் (C. Jesuthasan, 1919 - மார்ச் 6, 2002; சேனவிளை, குமரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) தமிழ் நவீன இலக்கியத்தில் ஆழ்ந்த பாதிப்பை செலுத்திய கல்லூரி ஆசிரியர், திறனாய்வாளர், இலக்கிய வரலாற்றாசிரியர்.
வாழ்க்கைச் சுருக்கம்
ஒரு கொத்தனாரின் மகனாக எளிய குடும்பத்தில் பிறந்தவர் ஜேசுதாசன். குளச்சல் உயர் நிலைப்பள்ளியிலும், திருவனந்த புரத்திலும் தமிழ் பட்டப்படிப்பை முடித்த பேராசிரியர், தன் தமிழிலக்கிய முதுகலைப்பட்டத்தை அண்ணாமலை பல்கலை கழகத்தில் முடித்தார். சிறிதுகாலம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேலை பார்த்தார். பின்பு திருவனந்தபுரம் பல்கலைகழக கல்லூரியில் சேர்ந்தார். அங்கு தமிழ் துறை தலைவராக இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப்பின் மனைவியின் சொந்த ஊரான புலிப்புனத்தில் ஒரு ஆங்கிலப்பள்ளியை நடத்திவந்தார்.
நாவலாசிரியை ஹெப்சிபா ஜேசுதாசனின் கணவர். ஹெப்ஸிபா ஜேசுதாசன் புத்தம் வீடு. மாநீ டாக்டர் செல்லப்பா போன்ற நாவல்களை எழுதிய நாவலாசிரியர். பேராசிரியர் அடிப்படையில் ஒரு ஆசிரியர். விமரிசனம் உட்பட அவரது பிற பங்களிப்புகள் எல்லாமே அந்த பணியின் பகுதிகள் மட்டுமேயாகும்.
கோட்டாறு குமாரசாமிபிள்ளை இவரது தமிழாசிரியர். அண்ணாமலைபல்கலையில் கா.சு.பிள்ளையிடம் தமிழ்கற்றார்
பங்களிப்பு
கல்லூரி ஆசிரியராக பேராசிரியர் ஜேசுதாசன் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் வழி வந்தவர். கம்பராமாயணம் மீது ஆழமான பிடிப்பு கொண்ட மரபார்ந்த தமிழறிஞர். அவரது வாழ்க்கையின் தொடக்கம் முதல் இறுதிக்கணம் வரை கம்பராமாயணம் அவருடன் இருந்தது. அவர் நவீன இலக்கியத்தை ரசித்தார், அதன் முக்கியத்துவத்தை கல்வி நிலையங்கள் ஏற்கச் செய்ய கடுமையாக போராடினார். நகுலன், மாதவன், நீலபத்மநாபன், காஸ்யபன், தட்சணாமூர்த்தி போன்ற தமிழ் எழுத்தாளர்களும் அய்யப்ப பணிக்கர், கே எஸ் நாராயணபிள்ளை போன்ற மலையாள எழுத்தாளர்களும் அன்று ஒரு கூட்டாக இயங்கினார்கள். நவீன தமிழிலக்கியத்தின் திருப்பு முனையாக கணிக்கப்படும் குருஷேத்ரம் என்ற தொகை நூல் (நகுலன் தொகுத்தது) அப்போது வெளியானது. அதில் பேராசிரியருக்கும் பங்கு உண்டு.
கல்வித்துறையில் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்ய அமைப்பு ரீதியாக போராடியவர் ஜேசுதாசன். புதுமைப்பித்தனைப் பற்றிய முதல் முனைவர் பட்ட ஆய்வு அவரது மாணவரால் முனைவர் ஏ சுப்ரமணியபிள்ளை அவரது வழிகாட்டலில் நடத்தப்பட்டது. புதுமைப்பித்தன், ஆர். சண்முக சுந்தரம் ஆகியோரின் படைப்புகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவும் அவரே காரணமாக அமைந்தார்.
ஒரு விமரிசகராக மிகக் குறைவாகவே பேராசிரியர் எழுதியுள்ளார். அதற்கு அன்றைய பிரசுரச் சூழலும் ஒரு காரணம். நீலபத்மநாபன், ஆர் ஷண்முக சுந்தரம், க நா சு ஆகியோர் குறித்து அவர் ஆக்கிய விமரிசனங்கள் முக்கியமானவை.
பிற்பாடு வெளியீட்டு வாய்ப்பு கிடைத்தபோது அவர் தன் மனைவியை வழிகாட்டி மனைவி பேரில் மூன்று பகுதிகளாக ஆக்கிய 'தமிழிலக்கிய வரலாறு' (ஆங்கிலம்: Count Down from Salamon, Hepsipaa Jeesuthaasan) ஒரு சாதனை படைப்பு.
ஆயினும் பேராசிரியரின் முக்கிய பங்களிப்பு அவரது வகுப்புகள் தான். நகைச்சுவை உணர்வும், நுட்பமான விமரிசனப் பாணியும், ஆழமான தகவலறிவும் நிரம்பியவை அவரது வகுப்பு உரைகள். அவரது மாணவர்கள் மூலம் மெல்ல மெல்ல ஒரு கருத்தியல் பாதிப்பை உருவாக்கவும் அவரால் முடிந்தது. பேரா பத்மநாபன், அ. கா.பெருமாள், ராஜமார்த்தாண்டன்(விமரிசகர்,இதழாளர்), வேதசகாயகுமார் (விமரிசகர்), ப கிருஷ்ணசாமி (விமரிசகர்) ஆகியோர் அவர்களில் முக்கியமான சிலர்.
பேராசிரியர் இசைப்பயிற்சி உடையவர். இசைச்செல்வர் லட்சுமணபிள்ளையின் மாணவரான கிருஷ்ணசாமியிடம் இசை பயின்றவர். தமிழிசையார்வம் உண்டு. அழகிய இசைப்ப்பாடல்கள் பல எழுதியுள்ளார். அவரே நன்றாக பாடவும் செய்வார். வீணை வாசிப்பார்.
ஆழமான மதபக்தி உடையவர் பேராசிரியர். ஒவ்வொரு வரியுடனும் மத ரீதியாக ஒத்துப்போனாலும் கூட தேம்பாவணியும் இரட்சணிய யாத்ரீகமும் கவித்துவ வெற்றி அடையவில்லை என்று சொல்லவும் தயங்கியவரல்ல. தன் குழந்தைகளுக்கு முழுக்க ராமாயண கதாபாத்திரங்களின் பெயர்களை மத மரபை மீறி சூட்டியவர் அவர்.
பேராசிரியரின் விரிவான பேட்டி சொல்புதிது ஜனவரி 2002 இதழில் வெளிவந்தது. 'ஒரு மகத்தான விரிவான வகுப்பு அது. பேட்டி எடுத்தவர்களும் கொடுத்தவரும் மிக உயர்ந்த அறிவார்ந்த தளத்தில் இருக்கும்போது நடந்துள்ளது.. என்று அசோகமித்திரன் விருட்சம் பிப்ரவரி 2002 இதழில் அதைப்பற்றி சொல்கிறார்.