கோவிலூர் கொற்றவாளீசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கோவிலூர் கொற்றவாளீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

Koviloor

அமைவிடம்

இக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் கோவிலூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 108 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 10°04'56.7"N, 78°44'44.0"E (அதாவது, 10.082412°N, 78.745562°E) ஆகும்.

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக கொற்றவாளீசுவரர் உள்ளார். இறைவி நெல்லையம்மன் ஆவார். பிரதோஷம், பௌர்ணமி, சிவராத்திரி உள்ளிட்ட பல விழாக்கள் நடத்தப்படுகின்றன.[1]

அமைப்பு

கோயிலின் முன் புறத்தில் சதுர வடிவில் தெப்பம் உள்ளது. நடுவில் 16 தூண்களுடன் நீராழி மண்டபம் காணப்படுகிறது. கோயிலின் மண்டபத்தில் ஆடல்வல்லான் சிலை காணப்படுகிறது. வீணை சரசுவதி, சாரதாம்பிகை, ஊர்த்துவ தாண்டவ நடராஜர், மீனாட்சி கல்யாணம், ரிஷப வாகனத்தில் சிவன் பார்வதி, மயில் மீது சண்முகர், வீரசேகர பாண்டியன் ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன.

வரலாறு

ஆதியில் பாண்டியர்களால் கட்டப்பட்ட இந்த கோயில், காலவோட்டத்தில் சிதிலமடைந்துள்ளது. பின்னர் கோவிலூரில் வேதாந்த மடத்தை நிறுவிய கோவிலூர் ஆண்டவர் என்று போற்றப்படும் முத்துராமலிங்க சுவாமிகளால் பொ.ஆ.1818-இல் இக்கோயில் கற்றளியாக்கப்பட்டது.[2]

Koviloor tank

புராண கதை

சிவனின் பக்தரான சிவகுப்தன், சுதன்மை தம்பதியரின் வயல் அறுவடைக்குத் தயாரான காலகட்டத்தில் அவர்களுடைய மகளான அரதனவல்லியைக் காவலுக்கு அனுப்பினர். அங்கு செல்லாமல் மலர்ச்சோலைக்குச் சென்றாள் அரதனவல்லி. அவளுடைய தாயார் அவளுக்கு உணவு எடுத்துச் சென்றாள். அப்போது இறைவி மகள் வடிவில் காவல் காத்துக்கொண்டிருந்தார். சுதன்மை தந்த உணவை உண்டாள். வீட்டுக்கு வந்த அரதனவல்லி தனக்குப் பசியாக இருக்கிறது என்று கூறவே பின்னர் இறைவியே மகள் வடிவில் வந்து உணவு உண்டதை உணர்ந்தார். ஆனால் இறைவிக்கு நெல்லையம்மன் என்ற பெயரும் உண்டு. மற்றொரு வரலாறும் இக்கோயிலைப் பற்றி கூறுகின்றனர். காளையார் கோயிலை பாண்டிய மன்னரான வீரபாண்டியன் ஆண்டு வந்தபோது இறைவனின் அருளால் ஒரு வாளைப் பெற்றிருந்தான். மன்னன் வேட்டையாடச் சென்றபோது சிவனின் திருவிளையாடல் ஆரம்பமானது. மாய மான் ஒன்றைக் கண்டு அதனைத் துரத்திச் செல்லும்போது அவனிடம் இருந்த வாள் இறையருளால் மறைந்தது. இறைவனின் அருளால் ஒரு அந்தணனும், ஒரு புலியும் வர நேரிட்டது. அந்தணரின் உயிரைக் காக்க புலியுடன் போரிட்டு தன் உயிரைத் தர தயாரானான் மன்னன். புலியும், அந்தணரும் மறைந்தனர். அங்கு அருகே இறைவன் லிங்கத்திருமேனியாகக் காட்சி தந்தார். அவரை மூலவராக வைத்து மன்னன் கோயில் எழுப்பினான். கொற்ற வாளை வழங்கிய சிவன் என்ற நிலையில் மூலவர் கொற்றவாளீசுவரர் என்றழைக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்