காக்கை விடு தூது
காக்கை விடு தூது என்று பொதுவாக அறியப்படும் நூல் தூது சிற்றிலக்கிய வடிவில் அமைந்த ஒருநூல். க. வெள்ளைவாரணனார் எழுதிய இந்நூல் 1939-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்நூலின் 1987-ஆம் ஆண்டுப் பதிப்பில் இந்நூலுக்குச் "சென்னை மாநில முதலமைச்சர் ச. இராசகோபாலாச்சாரியாரிடத்து வெண்கோழியுய்த்த காக்கை விடு தூது" என்னும் நீண்ட பெயர் காணப்படுகிறது. ஆசிரியர் இந்நூலைப் பாந்தளூர் வெண்கோழியார் என்னும் பெயரில் வெளியிட்டுள்ளார்.[1]
வரலாற்றுப் பின்னணி
இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெறுவதற்கு முன்னர்ச் சென்னை மாகாணத்துக்கு இடம்பெற்ற தேர்தலில் காங்கிரசுக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இராசாசி என அழைக்கப்பட்ட ச. இராசகோபாலாச்சாரியார் முதலமைச்சர் ஆனார். அக்காலத்தில் சென்னை மாகாணத்தில், உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தது. தமிழ் மொழி கட்டாய பாடமாகப் பயிற்றப்படவில்லை. ஆனால் இராசாசி இந்தியைக் கட்டாய பாடம் ஆக்கினார். தமிழ்த் தலைவர்களும், தமிழறிஞர்களும் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தும் அரசாங்கம் தனது திட்டத்தைக் கைவிடவில்லை. இந்தச் சூழலிலேயே இந்நூல் எழுதப்பட்டது. முதலில் இது, தமிழ்ப் பொழில், விடுதலை, திராவிடநாடு போன்ற பத்திரிகைகளில் வெளியானது. இதன் இரண்டாவது பதிப்பு 1987-ஆம் ஆண்டில் வெளியானது.[2]
குறிப்புகள்
உசாத்துணைகள்
- வெள்ளைவாரணன், க., காக்கை விடு தூது, சிவகாமி பதிப்பகம், அண்ணாமலை நகர், 1987.