காக்கை பாடினியம்
காக்கை பாடினியம் செய்யுள் இலக்கணம் கூறும் ஓர் தமிழ் இலக்கண நூல். இந்த நூல் முழுமையான அளவில் தற்காலத்தில் கிடைக்கவில்லை. இலக்கண நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் இந்த நூலின் நூற்பாக்களை தம் கருத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் மேற்கோள்களாகக் காட்டியுள்ளனர். இந்த நூற்பாக்களையெல்லாம் தொகுத்து இதனை ஒரு தனி நூலாக அண்மையில் உருவாக்கியுள்ளனர். 89 நூற்பாக்கள் இதில் உள்ளன.
காக்கைபாடினியார் இயற்றிய நூல் காக்கைபாடினியம் எனப்பட்டது.
இந்த நூல் தோன்றிய காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டு என அறிஞர்கள் கருதுகின்றனர்.[மேற்கோள் தேவை]
அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி இந்த நூற்பாக்களைத் தொகுத்த முதல் நூலாசிரியர். இந்த நூலிலுள்ள நூற்பாக்களைத் தம் இலக்கண அறிவைக்கொண்டு வகைப்படுத்தி, நிரலாக்கி அறிஞர் இரா. இளங்குமரன் தற்போதுள்ள இதன் பதிப்பை வழங்கியுள்ளார்.[1]
இந்த நூலைத் திரட்டுவதற்கு உதவிய மூலநூல்கள்:
- தொல்காப்பிய உரைநூல்கள்
- நன்னூல் மயிலைநாதர் உரை
- இறையனார் களவியல் உரை
- வீரசோழிய உரை
- யாப்பருங்கலக் காரிகை உரை
- யாப்பருங்கல விருத்தியுரை
காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்பவர் சங்ககாலப் புலவர். காக்கை பாடினியம் பாடிய காக்கை பாடினியார் இந்த நச்செள்ளையார் அல்லர். காலத்தால் பிற்பட்டவர்.
காக்கை பாடினியார் செய்துள்ள புதுமை
தொல்காப்பியர் செய்யுளில் வரும் அசைக்கூறுகளை நேர், நிரை, நேர்பு, நிரைபு என நான்காகப் பகுத்துக் காட்டினார். தொல்காப்பிய வழிவந்த இந்த நூல் நேர்பு, நிரைபு அசைகளை விலக்கிவிடுகிறது. இதன் வழிவந்த யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய நூல்கள் நேர், நிரை என்னும் இரண்டு அசைகளையே குறிப்பிடுகின்றன.
மேலும் நாலசைச்சீர் பற்றிய குறிப்பும் காக்கைபாடினியத்தில் வருகிறது.
நூலின் பெருமையை விளக்கும் பாடல்
தொல்காப்பியப் புலவர் தோன்ற விரித்து உரைத்தார்
பல்காப்பியனார் பகுத்துப் பண்ணினார் - நல் யாப்புக்
கற்றார் மதிக்கும் கலைக் காக்கைபாடினியார்
சொற்றார் தம் நூலுள் தொகுத்து. (யாப்பருங்கலம் விருத்தியுரையில் உள்ள பாடல்)
(இந்த வெண்பாப் பாடல் பொருள் புரியும் வகையில் பிரித்து எழுதப்படுகிறது)
மேற்கோள்கள்
- ↑ காக்கைபாடினியம் - மூலம் - விளக்கச் சிற்றுரை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு 1974
கருவிநூல்
- தமிழ் இலக்கண நூல்கள் - பதிப்பாசிரியர் முனைவர் ச.வே.சுப்பிரமணியன் - பதிப்பு 2007
- யாப்பருங்கலம் Madas Government Oriental Manuscripts Series No. 66 - 1960