கா. அ. சண்முக முதலியார்
கா. அ. சண்முக முதலியார் (K. A. Shanmuga Mudaliar, 2 நவம்பர், 1885 - 17 ஜூலை, 1978) என்பவர் ஓர் இந்தியக் கல்வியாளரும், சுதந்திர போராட்ட வீரரும், அரசியல்வாதியும், மக்கள் சேவகரும் ஆவார். இவர் திருப்பத்தூர் நகராட்சித் தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். திருப்பத்தூர், குடியாத்தம் வட்டாரத்தில் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி அமைப்பதற்கு 47 ஏக்கர் இடமும் 5 லட்ச ரூபாய் பணமும் தானமாக கொடுத்தவர்.[1] [2][3][4][5][6]
அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் வட ஆற்காடு மாவட்டத்தில் திருப்பத்தூர் செங்குந்த கைக்கோளர் குல செல்வந்தர் கா. அருணாசல முதலியார் முத்துவேடியம்மாள் தம்பதியருக்கு மகனாக நவம்பர் 2ஆம் நாள் 1885ஆம் ஆண்டில் பிறந்தார்
1915ஆம் ஆண்டில் திருப்பத்தூரில் முதன்முதலாக பெஞ்ச் மாஜிஸ்திரேட் கோர்ட் அமைந்த போது சண்முகனார் அதில் கௌரவ மாஜிஸ்ட்ரேட் ஆக நியமிக்கப்பட்டார். 5 ஆண்டுகள் அப்பணியாற்றிய பிறகு, 1920ல் முதல் வகுப்பு பெஞ்ச் மாஜிஸ்ட்ரேட் ஆக நிமனம் பெற்றார்.
திருப்பத்தூர் ஜில்லா போர்டு உறுப்பினர் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். 1927ல் திருப்பத்தூர் நகர மன்றத்தில் ஓர் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டிலேயே நகர் மன்றத் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
1930ல் திருப்பத்தூரில் “பிளேக்" என்னும் கடும் நோய் ஏற்பட்டு, மக்கள் எல்லோரும் வெளியூர் சென்று விட்டனர். நகர்மன்றத் தலைவர் என்ற முறையில் இவர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு எல்லாம் சென்று தேவையான உதவிகளைச் செய்தார். 1933ல் மீண்டும் நகர் மன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்.
இவர் 1930ம் முதல் திருப்பத்தூர் தாலுகா போர்டில் அங்கம் வகித்து வந்தார். 1933ல் தாலுகா போர்டுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். 1933ல் ஜில்லா போர்டு தேர்தலிலும் நின்று வெற்றி பெற்றார்.
காந்தீயக் கொள்கையில் பற்று சண்முகர் தமது மணி விழா நினைவாக காந்தி கட்டட நிர்மாண அறக்கட்டளை நிறுவி, அதற்கு புகைவண்டி நிலைய சாலையில் உள்ள தனது நிலத்தை நன்கொடையாகக் கொடுத்தார். காந்தியடிகளின் கொள்கைகளைப் பரப்ப கால்கோள் செய்யு முகத்தான், இலவச திருமணம், நூல் நூற்பு வேள்வி, கலாசாரப் பிரச்சாரம் போன்றவை நிகழச் செய்தார்.[7]
சட்டமன்றம் 1937ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாநிலச் சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பாக சண்முகனார் வேட்பாளராக நிறுத்தப் பட்டார். நீதிக்கட்சி சார்பாகவும் மக்கள் கட்சி சார்பாகவும் இரு வேட்பாளர்களை எதிர்த்து பெருவாரியான வாக்குகள் பெற்று சண்முகனார் வெற்றி பெற்றார்.
இவர் பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் பங்கு பெற்றுள்ளார்
20ஆம் நூற்றாண்டில் முற்பகுதி யில் கோயம்புத்தூரில் நூற்பு ஆலைகள் தொடங்கப்பட்டன. 1924ம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்ட ஸ்ரீரங்கவிலாஸ் மில்லில் சண்முகனார் பங்குதாரராகச் சேர்ந்து டைரக்டரா கவும் ஆனார். பின்னர் பயனீர் மில்லிலும் பங்குதாரர் ஆகி டைரக்டர் பதவி வகித்தார். திருப்பூரில் ஆலை அமைக்க ஆவன செய்தார். அந்த மில்லில் பல ஆண்டுகள் டைரக்டரா கவும் இருந்தார். நூற்பு ஆலைகளின் தொடர்பு இருந்ததால், நூல் வியாபாரத்தை குடியேற்றத்தில் தொடங்கினார். பலரோடு சேர்ந்து "கலைமகள் பருத்தி அரைவை ஆலை" தொடங்கினார்.
குடியேற்றத்தில் ஒரு நூற்பு ஆலை தொடங்கினால் நல்ல இலாபம் வரும் என்று அறிந்த சண்முக முதலியார் ஏராளமான பிரமுகர்க ளோடு தொடர்பு கொண்டு திருவாரூர் வள்ளல் சபாபதி முதலியார், காஞ்சி நாகலிங்க முனிவர் முதலியவர்களோடு தொடர்பு கொண்டு சுமார் 7 லட்சம் ரூபாய் திரட்டி திருமகள் நூற்பாலை ஒன்றை நிறுவி 1937 முதல் 1965 வரை சிறப்பாக நிருவகித்தார்.
சண்முக முதலியார் அவர்கள் 1934ல் திருவாரூரில் நடைபெற்ற செங்குந்தர் மாநாட்டில், வர்த்தக மாநாட்டுத் திறப்பாளராகவும் 1937ல் மதுரையில் கூடிய செங்குந்தர் மாநாட்டுத் தலைவராகவும் 1956ல் திருச்செங்கோட்டில் கூடிய செங்குந்தர் மாநாட்டில் சமூக மாநாட்டுத் தலைவராகவும் சண்முகனார் அவர்கள் பங்கேற்றார்.[8]
சண்முகனார் அவர்கள் 1955ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய தாம் மாணவ செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணியாற்றினார்.[9]
இவரின் பேரன் எஸ். பி. மணவாளன் திருப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர்.
சண்முகனார் ஒரு சிறந்த கவிஞராகவும் இருந்தார். இவர் நயாளினி வெண்பா, திருமால் போற்றி அகவல், இராமன் புகழ் அறுபது, திருமால் அவதாரம், திருவேங்கடமாலை, நூற்றியெட்டு திருப்பதி போற்றி அகவல், திருமால் வெண்பா மாலை, இராகவன் புகழ் மாலை, திருவேங்கடப்பெருமாள் திருப்பள்ளியெழுச்சி, சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, திருமால் அருச்சனை ஈடுபாடு என பல நூல்களை எழுதியுள்ளார்.
சண்முக முதலியார் அவர்கள் 93வது வயதில் 17 ஜூலை 1978 யில் இறைவனடி சேர்ந்தார்.[10][11]
மேற்கோள்கள்
- ↑ GOVERNMENT THIRUMAGAL MILLS COLLEGE self study report
- ↑ அய்வுகோவை
- ↑ Madras Legislative Assembly Debates. Official Report
- ↑ The Who's who in Madras: ... A Pictorial Who's who of Distinguished Personages, Princes, Zemindars and Noblemen in the Madras Presidency
- ↑ புதிய சட்டப் பேரவை தலைமைச் செயலக வளாகம் திறப்பு விழா சிறப்பு மலர்
- ↑ நளாயனி வெண்பா
- ↑ Fort Saint George Gazette
- ↑ 2016 செங்குந்தர் மாநாடு மலர்
- ↑ செங்குந்தர் சங்கம் வலைதளம்
- ↑ "பட்டக்காரர் மீது நான்மணிமாலை பாடிய அப்துல் சுகூர் சாஹிப்!" (in தமிழ்). தினமணி. 2014. https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2014/aug/31/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-969042.html.
- ↑ Tamic̲ collākkam