கவிதை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கவிதை (Poiesis) என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை பண்புச் சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலை வடிவம் ஆகும்[1][2][3]. மேலும், மொழியில் உள்ள ஒலியன் அழகியல், ஒலிக் குறியீடுகள், மற்றும் சந்தம் (Metre) ஆகியவற்றுடன் இடம், இயல்பான பொருள் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டுவதாகக் கவிதை உள்ளது. உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.

கவிதைத் தோற்றம்

கவிதையினைக் கத்தோலிக்க சுமேரிய காவியத்தோடு ஒப்பிடும் ஒரு போக்கு உள்ளது. தொடக்கத்தில் கவிதைகளுக்கு, சீன ஷிஜிங் போன்ற நாட்டுப்புற பாடல்களிலிருந்தும் அல்லது சமற்கிருத வேதங்கள், சௌராட்டிரிய கத்தாஸ் மற்றும் ஹோமரிக் புராணங்கள், இலியட் மற்றும் ஒடிஸி ஆகிய வாய்வழித் தொன்மங்களைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தன. அரிஸ்டாட்டிலின் கவிதையியல் போன்று கவிதையை வரையறுக்க, சொல்லாட்சிக் கலை, நாடகம், பாடல் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றில் பேச்சுக்களைப் பயன்படுத்தும் வழக்கம் இருந்து வந்தது. பிறகு, போன்மை, வடிவம் மற்றும் அசை முதலான அம்சங்கள் காரணமாக அப் பழங்கால முயற்சிகள் தேக்கமுற்றன. மேலும், 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து கவிதையானது இசைக் கோர்ப்பிற்கேற்ப மிகவும் பொருந்தக்கூடிய தகவல்களின்படி, கற்பனைச் செய்திகள், எழுத்துரு வடிவங்கள் ஆகியவற்றைக் கொண்டு விளங்க ஆரம்பித்தது. 

'காட்டுவாசி ஒருவன் கொட்டிய பாறையில் கவிதை தோன்றியிருக்க வேண்டும்' என்பார் எமர்சன். 'கவிதை மந்திர மொழிகளிலும் சடங்குச் சொற்களிலும் வாய்மொழிப்பாடல்களாகத் தோற்றம் பெற்றிருக்க வேண்டும்' என்கிறது வாழ்வியல் களஞ்சியம். கவிதை முதலில் இசைப்பாடலாகத் தோன்றிருக்கவேண்டும் என்ற கருத்திற்கு வலிமை சேர்க்கும் விதமாக சங்க இலக்கியத்தில் பாணன், பாடினி, விறலி போன்றோர்களின் குறிப்புகள் கிடைக்கின்றன. தமிழ்க் கவிதைத் தோற்றத்தில் பரிபாடல், பத்துப்பாட்டு ஆகியன எட்டுத்தொகையின் அகவற்பாவிற்கு முந்தைய வடிவம் என்ற கருத்தும் உண்டு. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற திணைகளுக்குப் பண் வடிவங்கள் இருந்துள்ளன. கவிதை முதலில் வாய்மொழிப் பாடலாக இருந்தது என்பது ஆய்வாளர்களின் கருத்து. எனவே கவிதையின் தோற்றமும் முதலில் பொருளற்ற இசை குறிப்புகளில் இருந்து இசைப் பாடல்கள் தோன்றிருக்க வேண்டும். கல்வி புலவர்களின் உடமைப்பொருளான போது இ​சையின் ஒரு பிரிவாய் ஒலி நயத்துடன் கூடிய அகவற்பா, வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா போன்ற யாப்பு வடிவமும் தோன்றின. கல்வி மக்களின் உடமைப் பொருளாகும் போது உரைநடை இலக்கியம் மற்றும் உரைநடைசார்ந்த புதுக்கவிதை பிறந்தது எனலாம்.

நுாற்பா செய்யுள், விருத்தம், பண், கவி​தை, புதுக்கவி​தை, ஐக்கூ ஆகியன ஒரு இனம் சார்ந்தது என்றாலும் அதன் முகங்கள்​ வேறானது. காலத்​திற்கு காலம்​ மொழி தன்​மை புதுப்பித்துக்​கொள்வது ​​போல் கவி​தையியலும் தன்​னை வளர்த்துக் ​கொள்கிறது.

வரலாறு

படிமம்:Cuneiform tablet, legal document concerning a trial, Sumer, modern Iraq, c. 2037-2029 BC - Spurlock Museum, UIUC - DSC05943.jpg
Cuneiform tablet, legal document concerning a trial, Sumer, modern Iraq, c. 2037-2029 BC - Spurlock Museum, UIUC - DSC05943

அறிஞர்களுள் சிலர் கவிதைக்கலையினால் முன் கல்வியறிவு வளர்வதாக நம்புகின்றனர். எனினும், வேறுசிலர், கவிதைக்கு முன் எழுத்துப் பயிற்சி தேவையில்லை என எடுத்துரைக்கின்றனர்.

பழைமையான எஞ்சிய காவிய கவிதை மரபானது, கி.மு.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சுமேரியர் மெசபடோமியாவில் (இன்றைய ஈராக்) க்யூனிபார்ம் என்கிற சுமேரிய எழுத்துக்களால் களிமண் கட்டிகளில் எழுதிய கில்கமேஷ் காப்பியத்திலிருந்து தொடங்குகிறது. பின்னர், பாப்பிரஸ் என்னும் காய்ந்த மூங்கில்களில் எழுதிவைத்தனர். கி.மு.2000-த்தில் எழுதிவைக்கப்பட்ட எழுத்துக்கள் அரச குடும்பத்தில் ஓர் ஆண்டில் நிகழ்ந்த திருமணம் சார்ந்த சடங்குகளை விவரிப்பதாகக் காணப்படுகிறது. மேலும், இனான்னா (Inanna) என்கிற தேவதையுடனான இனவிருத்தி மற்றும் செழிப்புக்கான கவிதை உலகின் பழமையான காதல் கவிதையாகக் கருதப்படுகிறது. எடுத்துக்காட்டு: எகிப்திய ஸிநுஹே (The story of Sinuhe) காப்பியம் கவிதை (கி.மு.1800). இலியட் (Iliad) மற்றும் ஒடிஸி (Odyssey) போன்ற கிரேக்க காவியங்கள், கேத்திக் அவஸ்டா (Gathic Avesta) மற்றும் யாஸ்னா (Yasna) என்னும் அவெஸ்தான் நூல்கள், வெர்ஜிலின் எனேயிட் (Aeneid) உள்ளிட்ட ரோமன்நாட்டுக் காவியங்கள் மற்றும் இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இந்திய காவியங்கள் ஆகியவை பழங்காலத்தில் தோன்றிய காப்பியங்களாவன. வரலாற்றுக்கு முந்தைய பண்டைய சமூகங்களில் எளிதாக நினைவில் நிறுத்திக்கொள்ளவும், வாய்மொழியாகப் பரவச் செய்யவும் உதவிடும் கருவியாகக் காப்பியம் திகழ்ந்ததை ஒடிஸி, கத்தாஸ் மற்றும் இந்திய வேதங்கள் வாயிலாக அறியமுடிகிறது.

படிமம்:Manuscript from Shanghai Museum 1.jpg
பண்டைய சீனக் கவிதைகள்

நாட்டுப்புற பாடல்கள் வடிவங்களிலும் கவிதை வளர தொடங்கியது. ஷீஜிங் (Shijing) the Kǒngzǐ Shīlùn (孔子詩論), வாய்மொழிப் பாடல்கள் Shijing (செவ்வியல் கவிதைகள்)]] என்கிற பண்டைக்கால சீனக் கவிதைத் தொகுப்புகளின் தொடக்க வரிகளில் இவற்றைக் காணமுடியும். கிரேக்க, இலத்தீன் மொழிகளின் கவிதை ஈடுபாட்டைத் தொடர்ந்து ஆங்கில இலக்கியம் சாசரின் காலத்தில்தான் (கி.பி.1340-1400) வளர்ச்சி அடைந்தது. அவருக்கு முன்பே கவிதைகள் எழுதப்பட்டிருந்தாலும், ஜியோஃப்ரே சாசர் (Geoffrey Chaucer), கவிதையைப் பொதுமக்களின் இலக்கியமாக மாற்றினார். சாசர் பிறப்பால் ஆங்கிலேயர் ஆவார். பிரான்ஸிலும் இத்தாலியிலும் பணிபுரிந்த காரணத்தால் அவருடைய கவிதைகளில் அவற்றின் செல்வாக்கு மிகுந்து காணப்பட்டன. [4]

படிமம்:Geoffrey Chaucer - Illustration from Cassell's History of England - Century Edition - published circa 1902.jpg
Geoffrey Chaucer - Illustration from Cassell's History of England - Century Edition - published circa 1902

ஜியோஃப்ரே சாசர் (14 ஆம் நூற்றாண்டு) பதினைந்தாம் நூற்றாண்டில் ஒக்கிலேவ்(Occleve), லிட்கேட்(Lydgate), ஸ்கெல்டன் (Skelton), ஹாவ்ஸ்(Hawes), பாக்லே (Bhaclay) முதலான கவிஞர்கள் சாசரைப் பின்பற்றி எழுதினர். ஆங்கில இலக்கிய உலகில் பதினாறாம் நூற்றாண்டை (கி.பி.1558-1625) எலிசபெத்தன்-ஜாக்கோபன் காலம் என்பர். ஆங்கில நாடக முன்னோடி வில்லியம் ஷேக்ஸ்பியர் (கி.பி.1564-1616) இக்காலகட்டத்தைச் சார்ந்தவராவார். அகச் செய்யுட்கள் (Lyrics) அதிகம் எழுதப்பட்டன. இத்தாலியில் புகழ்பெற்ற விடா (Vida(1489-1566) இலத்தீன் மொழியில் கவிதைகள் பல எழுதியுள்ளார். கி.பி.1527 ஆம் ஆண்டில் இவருடைய கவிதைக்கலையைப் பற்றிய நூல் வெளியாயிற்று.[5]

வில்லியம் ஷேக்ஸ்பியர்

பதினேழாம் நூற்றாண்டை ஆங்கில இலக்கிய உலகம், கரோலின் காலம் (Caroline Age) என்றழைக்கின்றனர். ஜான் மில்டன், பாய்லோ (Boileau 1636-1711), பென் ஜான்சன் (Ben Johnson 1572-1637), தாமஸ் காம்பியன் (Thomas Campion 1575-1620) போன்றோர் இக்கால கட்டத்தைச் சேர்ந்தவராவர். இந்நூற்றாண்டின் பிற்பகுதியில் காஃபி விடுதிகள் (Coffee Houses) உருவாகின. [[ஜான் டிரைடன்] ](John Dryden 1631-1700) என்பார் இக்காலக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவராவார்.[6] கி.பி.பதினெட்டாம் நூற்றாண்டை காஃபி விடுதிகளின் காலமாகக் குறிப்பிடுகின்றனர். இலண்டன் நகரில் மட்டும் ஏறத்தாழ மூவாயிரம் காஃபி விடுதிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவ்விடுதிகளில் மேல்தட்டு, நடுத்தட்டு மக்களிடையே இலக்கியம் தொடர்பான செய்திகள் காஃபியுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இக்காலத்தில்தான் ஆங்கிலப் பேரகராதியினை உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் (1709-1784), பாஸ்வெல், ஆலிவர் கோல்ஸ்மித் (1730-1774), கதே (Goethe 1749-1832), பிளேக் (Blake 1757-1827), வேர்ட்ஸ் வொர்த், வில்லியம் வேர்ட்ஸ் வொர்த் (1770-1850, கோல்ட்ரிஜ், ஜான் கீட்ஸ் (1798-1821), ஜான் கீட்ஸ், ஷெல்லி (1792-1822), லார்ட் பைரன் (1788-1824) முதலான புகழ்பெற்ற கவிஞர்கள் வாழ்ந்து வந்தனர். வசன கவிதைகள் உருவாகின. ஷெல்லியின் கவிதைகள் சோக எண்ணங்களின் எதிரொலி என்பர்.[7]

கி.பி.1837-1901 வரை விக்டோரியா காலமாகக் குறிப்பிடப்படுகிறது. ஆக்ஸ்போர்டு இயக்கம் மற்றும் குடியாட்சி இயக்கம் தோன்றிப் பரவிய காலமிது. பிரிட்டன் பேரரசாக ஆசிய, ஆப்பிரிக்கக் கண்டங்களில் விரிந்து பரவியதும் டார்வினுடைய கூர்தலறக் கோட்பாடு, பைபிள் கதைகளை, கற்பனைகளைத் தகர்த்துக் கொண்டிருந்ததும் இக்காலத்தில்தான்.அரசியல், பொருளாதார, அறிவியல், மத இயல் மாற்றங்கள் ஆகியவை மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தன. இதன் காரணமாக கவிதையின் நோக்கும் போக்கும் மாறத் தொடங்கின. கவிதையைப் பற்றிய மதிப்பீடுகள் மாற்றம் பெற்றன. மத நம்பிக்கைகள் தளர்வுற்றன. நுகர்வு கலாச்சாரம் பெருகியது. லார்டு டென்னிஸன்௲ (1809-1892), இராபர்ட் ப்ரௌனிங் (1812-1889), மாத்யூ அர்னால்டு(1882-1888), அமெரிக்க கவிஞர் லாங்பெலோ (1807-1882), பெண் கவிஞர்களான எலிசபெத் பேரட் பிரவுனிங் (1806-1861), கிறிஸ்தியானா, ஜார்ஜினா ரோஸட்டி(1830-1894)[8] முதலானோர் கவிதையை இக்கால கட்டத்தில் முன்னெடுத்துச் சென்றனர்.

மகாகவி சுப்பிரமணிய பாரதி
பாரதிதாசன்

தமிழ்நாட்டில் வாழ்ந்த கவிஞர்களில் சுப்பிரமணிய பாரதி (1882 – 1921) மிக முக்கியமானவராவார். இவர் மகாகவி என்றும், தேசியப் போராட்டக் காலத்தில் பல தேசிய உணர்வுள்ள கவிதைகளைப் படைத்ததனால் தேசியக்கவி என்றும் அழைக்கப்பட்டார். இவர் கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி, நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று கூறியிருக்கிறார்.[9]

பாரதிதாசன் (1891-1964) என்பவர் இன்னுமொரு தமிழ்க் கவிஞர் ஆவார். இவர் புரட்சிக்கவி மற்றும் பாவேந்தர் எனவும் அழைக்கப்படார்[10][11].[12]

கவிதை உருவாக்கத்திற்கான நான்கு அடிப்படைகள்

1)சமுதாயத் தேவைகள்.

2)இலக்கு.

3)கவிதைக்குரிய மூலப்பொருள்.சொற்கள்.

4)உத்திகளும் வழிமுறைகளும்.[13]

கவிதைப் படைப்பின் வகைகள்

ஓவியர் போன்ற பிற கலைஞரைப் போலக் கவிஞனும் போன்மை முறையைப் பின்பற்றி மானிட வாழ்க்கையைப் படைக்கிறான்.இதனை அவன் மூவகையாகப் படைக்கலாம்.அதாவது வாழ்க்கை நிகழ்ச்சிகள் எப்படியிருந்தனவோ அல்லது இருக்கின்றனவோ அப்படியே படைப்பது ஒருவகை;எப்படியிருப்பனவாகக் கருதப்பட்டனவோ அல்லது காணப்பட்டனவோ அவ்வாறே படைப்பது மற்றொருவகை;எப்படியிருக்க வேண்டுமென்று கவிஞன் கருதுகிறானோ அவ்வகையில் படைப்பது மூன்றாவது வகை.[14]

கவிதையின் நடை

கவிதையின் நடையென்பது மொழியமைப்பின் ஒரு கூறு அல்லது ஒரு பகுதி சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல; தொடர்புபட்ட பல கூறுகளின் ஒன்றிணைந்த செயல்பாடு அது.சிறப்பான சில தேவைகளையும் சூழல்களையும் ஒட்டிச்,சில சமயங்களில் வெவ்வேறு கூறுகளில் அது,தன்னைப் பிரத்தியேகமாக அடையாளம் காட்டிக் கொள்கிறது.ஆனால், பொதுவாகக் கவிதைமொழியின் தளம் ஒரு ஒட்டுமொத்தமான நிலையில் அமைவதாகும்.[15]

கவிதையின் பாடுபொருள்கள்

  • சுற்றுப்புறச் சூழல் சீர்கேடுகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்.
  • உலகமயமாக்கல், தனியார் மயம்,நுகரவுக் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுச் சீரழிவுகள்.
  • காதல் மற்றும் குடும்ப உறவுகள்.
  • விளிம்புநிலை மக்கள், பெண்கள்,தலித்துகள் ஆகியோரின் எழுச்சியும் எதிர்வினைகளும்.
  • அதிகார அரசியல் மற்றும் அறிவுரைகள்.
  • அடிமைத்தனம்.
  • லஞ்சம்.
  • அரச பயங்கரவாதப் போக்குகள்.
  • அடிப்படை வாதங்கள் மற்றும் எதிர்ப்புகள்.
  • மாறிவரும் வாழ்க்கை முறைகள்.
  • மொழிப்பற்று.
  • அரசியல் விழிப்புணர்வு.
  • தேர்தல் நடைமுறைகள்.
  • நவீன அறிவு ஜீவனமும் அதன் இயலாமையும்.[16]

வெளி இணைப்புகள்

Wikilogo.JPG
தமிழர்விக்கி பொதுவகத்தில்,
கவிதை
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

  1. "Poetry". Oxford Dictionaries (Oxford University Press). 2013 இம் மூலத்தில் இருந்து 2013-06-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130618104733/http://oxforddictionaries.com/definition/english/poetry?q=poetry. 
  2. "Poetry". Merriam-Webster (Merriam-Webster, Inc.). 2013. http://www.merriam-webster.com/dictionary/poetry. 
  3. "Poetry". Dictionary.com (Dictionary.com, LLC). 2013. http://dictionary.reference.com/browse/poetry?s=t. 
  4. க.ப.அறவாணன் (2009). கவிதை கிழக்கும் மேற்கும். தமிழ்க்கோட்டம்,சென்னை-29.. பக். ப.11. 
  5. க.ப.அறவாணன் (2009). கவிதை கிழக்கும் மேற்கும். தமிழ்க்கோட்டம், சென்னை-29.. பக். ப.12. 
  6. க.ப.அறவாணன் (2009). கவிதை கிழக்கும் மேற்கும். தமிழ்க்கோட்டம், சென்னை-29.. பக். பக்.12-13. 
  7. க.ப.அறவாணன் (2009). கவிதை கிழக்கும் மேற்கும். தமிழ்க்கோட்டம், சென்னை-29.. பக். பக்.14-15. 
  8. க.ப.அறவாணன் (2009). கவிதை கிழக்கும் மேற்கும். தமிழ்க்கோட்டம், சென்னை-29.. பக். பக்.15-16. 
  9. "மகாகவி பாரதியார் மணிமண்டபம்". தமிழ்நாடு, செய்தி - மக்கள் தொடர்புத்துறை இம் மூலத்தில் இருந்து 2017-07-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170731010433/http://www.tndipr.gov.in/memorials/tamil/mahakavibharathiyarmanimandapam.html. பார்த்த நாள்: 25 மே 2017. 
  10. "புது ரத்தம் பாய்ச்சிய பெருங்கவிஞன் பாரதிதாசன்..!". விகடன்.காம் இம் மூலத்தில் இருந்து 2017-05-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170507030241/http://www.vikatan.com/news/tamilnadu/87180-bharathidasan-birthday-article.html. பார்த்த நாள்: 25 மே 2017. 
  11. "பாரதிதாசன்". உலக தமிழர்களுக்கான ஓர் தமிழ் களஞ்சியம் இம் மூலத்தில் இருந்து 2017-05-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170524194421/http://www.itstamil.com/bharathidasan.html. பார்த்த நாள்: 25 மே 2017. 
  12. "பாவேந்தர் பாரதிதாசன் 10". தி இந்து. http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-10/article8536260.ece. பார்த்த நாள்: 25 மே 2017. 
  13. தி.சு.நடராசன் (2008). கவிதையெனும் மொழி. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்,சென்னை-98. பக். பக்.20-22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-234-1363-7. 
  14. அ.அ.மணவாளன் (2001). அரிஸ்டாடிலின் கவிதை இயல். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட், சென்னை-98.. பக். பக்.123-124. 
  15. தி.சு.நடராசன் (2008). கவிதையெனும் மொழி. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்,சென்னை-98.. பக். ப.67. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-234-1363-7. 
  16. தி.சு.நடராசன் (2008). கவிதையெனும் மொழி. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட், சென்னை-98.. பக். பக்.25-26. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-234-1363-7. 
இலக்கிய வடிவங்கள் தொகு
கதை | சிறுகதை | தொடர்கதை | புதினம் | காப்பியம் | நாடகம் | பாட்டு | கவிதை | உரைவீச்சு | உரைநடை | கட்டுரை | உரையாடல் | நனவோடை | இதிகாசம்
"https://tamilar.wiki/index.php?title=கவிதை&oldid=9850" இருந்து மீள்விக்கப்பட்டது