கழைதின் யானையார்
கழைதின் யானையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது புறநானூறு 204 எண் கொண்ட பாடலாக உள்ளது.
இவரது பெயரைப் பார்க்கும்போது இவர் பாடலால் பெயர் பெற்ற புலவர் என்று எண்ணவேண்டியுள்ளது. என்றாலும் இவரது ஒரே ஒரு பாடலில் அந்தத் தொடர் இல்லை. இவர் பாடிய பல பாடல்களில் ஒன்றில் 'கழைதின் யானை' என்னும் தொடரை இவர் பயன்படுத்தியிருக்கவேண்டும். சங்கப் பாடல்களைத் தொகுத்தவர்களில் யாருமொருவர் அப் பாடலை இடம்பெறச் செய்யாது போயினர் என்று எண்ணவேண்டியுள்ளது.
அன்றியும் இவரது ஒரே ஒரு பாடலே உலகியல் என்னும் கரும்பை மூதறிவு என்னும் யானை தின்பது போல உள்ளதை உணரமுடிகிறது.
பழந்தமிழ்
- ஆ = செல்வமாக ஆகும் ஆடுமாடுகள்
- மா = விலங்கினங்களை உண்ணும் விலங்குகள்
- இழிந்தன்று, உயர்ந்தன்று (உயர்ந்து + அன் + து) 'அன்' - சாரியை
பாடல்
ஈ என இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள் என கொடுத்தல் உயர்ந்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப நீர் வேட்டோரே
ஆவும் மாவும் சென்று உணக் கலங்கிச்
சேற்றொடு பட்ட சிறுமைத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர் பல ஆகும்
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர்ப் பழியலர் அதனால்
புலவேன் வாழிய ஓரி விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே
பாடல் தரும் பொருள்
ஈ என்றால் கொடு, தா, என்று பொருள். எனக்குக் கொடு, எனக்குத் தா என்று கேட்டு இரப்பது இழிவு. தன்னிடம் உள்ளதை ஈயமாட்டேன் என்பது அதைவிட இழிவு. இந்தப் பாடலின் முதல் வரியிலுள்ள ஈ என்ற வார்த்தைக்கு, "ஈ..." என்று பல்லை இழித்துக்கொண்டு கேட்டல் என்று சிலர் பொருள் கூறுகின்றனர். ஆனால் இடவமைப்பின்படி இது சரியான பொருளல்ல. மூன்றாம் வரியிலுள்ள கொள் என்ற வார்த்தை இதை உறுதிசெய்கிறது. தன்னிடம் உள்ளதைப் பெற்றுக்கொள் என்று கொடுப்பது உயர்வு. பிறர் இலவசமாகக் கொடுப்பதைப் பெற்றுக்கொள்ளமாட்டேன் (உழைத்து உண்பேன்) என்பது அதைவிட உயர்வு.
கடலில் தெளிவான நீர் மிகுதியாக இருந்தாலும் தாகம் உள்ளவர் அதனை உண்பதில்லை. ஆனிரைகளும் அவற்றைக் கொன்று தின்னும் விலங்கினங்களும் சென்று உண்ணும் கலங்கிய நீராயினும் அதனை உண்ணச் செல்வோரின் எண்ணிக்கை மிகுதியாதலால் அதற்கு அமைந்த நடைபாதைகள் பல.
ஓரி!
நீ கருமேகம் சூழ்ந்த வானம் போல எல்லாருக்கும் மிகுதியாக வழங்குபவன். நீ வழங்காதுபோனால், உன் கொடையைப் பற்றி மாறுபாடாகப் புலந்து பேசமாட்டேன். தனது ஊழையும், தான் வேண்டிநிற்கும் காலத்தையும் பழிப்பதுதான் புலவர் வழக்கம்.
கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரியிடம் பரிசில் வேண்டி வந்த கழைதின் யானையார் இவ்வாறு பாடுகிறார்.