கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககால நல்லிசைப் புலவர்களுள் ஒருவர் ஆவார். இவர் பாடிய பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய இரு பாட்டுக்களும் பத்துப்பாட்டு எனும் தொகை நூற்களின் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இது மட்டுமின்றி இவர் அகநானூற்றில் 167ஆவது பாடலையும் குறுந்தொகையில் 352ஆவது பாடலையும் இயற்றியவராவார். தொல்காப்பிய மரபியல் 629ஆம் சூத்திரவுரையில் இவர் அந்தணர் என்று சொல்லப்படுகிறார்.
பெயர்க் காரணம்
தமிழ்நாடு வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் என்னும் ஊருக்கு மற்றொரு பெயர் திருக்கடிகை. இந்தக் கடிகையைக் கடியலூர் எனக் கொள்வது பொருத்தமாக உள்ளது.
- காஞ்சியில் இருந்த தொண்டைமானிடம் ஆற்றுப்படுத்தும் பெரும்பாணாற்றுப்படை பாலை நில வழியை முதலில் காட்டுகிறது.
- சோழன் கரிகாற் பெருவளத்தானிடம் ஆற்றுப்படுத்தும் நூலின் பெயர் பட்டினப்பாலை.
- இப் புலவரது பிற இரண்டு பாடல்களும் பாலைத்திணை.
எனவே பாலை நிலத்தில் உருத்து இருக்கும் உருத்திரத்தைப் பாடிய புலவர் என்று காட்டக் கண்ணனாருக்கு உருத்திரம் என்னும் அடைமொழி தரப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு. ஆயினும் பெயரைக் கொண்டு நோக்கின் தமிழ்ப் படுத்தப்பட்ட ருத்ரக்ருஷ்ண என்ற வடமொழிப் பெயரை இவர் கொண்டிருந்தார் என்றும் இன்னொரு கருத்து உண்டு. இவர் தந்தையார் பெயர் உருத்திரன் என்றும் இவரது பெயர் கண்ணனார் என்றும் கூறுவர்.[1]
மேற்கோள்கள்
- ↑ "பெரும்பாணாற்றுப்படை - வரலாறு". 26 september 2012. https://temple.dinamalar.com/news_detail.php?id=13490.
மேலும் பார்க்க
- அகநானூறு 167
- குறுந்தொகை 352