கடம்பி மீனாட்சி
கடம்பி மீனாட்சி (C. Minakshi) (செப்டம்பர் 12, 1905 - மார்ச்சு 3, 1940) இந்திய வரலாற்றாய்வாளர் ஆவார். இவர் பல்லவ மன்னர்களை நன்கறிந்த மேதையாவார். 1935 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சென்னை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் முதல் பெண் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.[1]
இளம்பருவமும் கல்வியும்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மீனாட்சி, 1905 ஆம் ஆண்டு, செப்டம்பர் 12 இல், கடம்பி பாலக்கிருஷ்ணன், மங்களம்மா இணையருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை சென்னை உயர்நீதி மன்றத்தில் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். மீனாட்சியின் இளவயதிலேயே தந்தை இறந்ததால், தாயார் குடும்பப் பொறுப்பை ஏற்றார். மீனாட்சி இளம்வயதிலேயே வரலாற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். மன்னார்குடி, புதுக்கோட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய வரலாற்றுப் புகழ் பெற்ற ஊர்களைச் சுற்றிப் பார்த்தார். பள்ளிப் படிப்பை முடித்ததும், இளநிலைப் படிப்பை சென்னையில் உள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் பயின்று மேற்படிப்பை சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் பயில விரும்பினார். ஆனால் இவர் ஒரு பெண் என்பதால் இடம் கிடைக்கவில்லை. இவரின் அண்ணன் லட்சுமிநாராயணன் அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அவர் தன் தங்கையைப் பார்த்துக் கொள்வதாகக் கூறினார். பல்லவர்களின் ஆட்சியில் அமைச்சும் சமூக வாழ்வும் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார். இதை நீலகண்ட சாஸ்திரியின் வரலாற்றுத் தொகுப்புகளுடன் வெளியிட்டது சென்னைப் பல்கலைக்கழகம். த இந்து நாளிதழ், இந்நூலை வெற்றிபெற்ற ஆய்வுகளுள் ஒன்று எனவும், தொகுப்புகளில் முக்கியமானது என்றும் கூறியுள்ளது.
தொழிலும் ஆய்வும்
முனைவர் பட்டம் பெற்ற உடனேயே வேலை தேடினார். இவர் விண்ணப்பித்த நிறுவனங்கள் இவர் கோரிக்கையை ஏற்கவில்லை. பின்னர், மைசூர் திவான் இவரது திறமை கண்டு, பெங்களூரின் மகாராணி கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணிபுரியுமாறு பணித்தார்.
இறப்பு
பெங்களூருக்குச் சென்ற சில நாட்களிலேயே உடல் நலம் குன்றி, மார்ச்சு 3, 1940 அன்று இறந்தார். இவரின் இறப்பைத் தாங்க முடியாத வரலாற்றாய்வாளர் நீலகண்ட சாஸ்திரி தெரிவித்தது:
இளம்வயதிலேயே இவர் இறந்தது கொடுமை. இதை நினைத்தாலே என் மனம் துன்புறுகிறது
ஆக்கங்கள்
- க. மீனாட்சி (1938). பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில் நிர்வாகமும் சமூக வாழ்வும். சென்னைப் பல்கலைக்கழகம்.
- க. மீனாட்சி (1940). காஞ்சியின் கட்டிடக்கலை பற்றிய தொடக்கவுரை. இந்தியத் தொலைத்தொடர்புத் துறை.
- க. மீனாட்சி (1941). காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவிலின் வரலாற்றுச் சிற்பங்கள். இந்தியத் தொல்லியல் துறை.
மேற்கோள்கள்
- A. Srivathsan (15 ஆகத்து 2010). "Scholar extraordinaire". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2010-08-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100818071637/http://www.hindu.com/mag/2010/08/15/stories/2010081550040200.htm.
- ↑ "முதல் முனைவர்". கட்டுரை (தி இந்து). 17 மார்ச் 2017. http://tamil.thehindu.com/society/women/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9581069.ece. பார்த்த நாள்: 1 செப்டம்பர் 2017.