ஐயூர் மூலங்கிழார்
ஐயூர் மூலங்கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அது புறநானூற்றில் 21[1] ஆம் பாடலாக அமைந்துள்ளது. அதில் அவர் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னனின் வெற்றியைப் பாடியுள்ளார்.
பாடல் தரும் செய்தி
அரசன் வேங்கை மார்பன் என்பவன் கானப்பேரெயில் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். அந்தக் கோட்டை கடல்போன்ற அகழியைக் கொண்டிருந்தது. அதன் மதில் வானத்தைத் தோய்வது போல் இருந்தது. கோட்டைமதிலில் பதுங்கியிருந்து அம்பு எய்யும் ஞாயில் வானத்தில் மீன்கள் பூத்திருப்பது போல் காணப்பட்டது. கோட்டையைச் சுற்றி இருந்த காவற்காட்டில் மரங்கள் வெயிலே நுழையமுடியாதபடி அடர்ந்திருந்தன. இப்படிப்பட்ட கானப் பேரெயிலை உக்கிரப் பெருவழுதி தனதாக்கிக்கொண்டான்.
(கொல்லன் உலையில் இரும்பைப் பழுக்கக் காய்ச்சி அதில் வளையா எஃகுதன்மை ஏற்றுவதற்காகத் தண்ணீரில் இடுவான்.) அப்போது அந்த இரும்பு தண்ணீரை உறிஞ்சிக்கொள்ளும். அந்தத் தண்ணீரை மீட்கமுடியாது. அதுபோலக் கானப்பேரெயில் என்னும் தண்ணீரை உக்கிரப் பெருவழுதி என்னும் பழுக்கக் காய்ச்சிய இரும்பு உறிஞ்சித் தனதாக்கிக்கொண்டது என்கிறார், புலவர்.
இந்த வழுதியை இழந்தவர் தம் புகழோடு கெட்டொழிய இவனுடைய வெல் புகழோடு பூக்கவேண்டும் என்று புலவர் இவனை வாழ்த்திப் பாடலை முடிக்கிறார்.
இவரது பாடலில் உள்ள நயமான தொடர்கள்
நிலவரை இறந்த குண்டுகண் அகழி = நிலத்துக்கு வரம்பு இல்லாதபடி ஆழமான இடம் கடல். அது போன்ற அகழி
தும்பைப் புலவர் = தும்பைப்பூச் சூடிய புலவர், போர்வீரர்களை இவர் புலவர் என்கிறார்.