ஏ. எஸ். ராஜா
ஏ. எஸ். ராஜா (இறப்பு: 21 பெப்ரவரி 1981) இலங்கைத் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர். பல சிங்கள, தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர்.[1]
நாடகங்களில்
1940களில் தமிழ்நாட்டில் இருந்து சங்கரதாஸ் சுவாமிகள் தலைமையில் நாடகக் குழு இலங்கைக்கு வந்து பல நாடகங்களை மேடையேற்றியது. அவர்களது "மச்ச ஹரிச்சந்திரா" என்ற நாடகத்தில் பெண் வேடத்தில் நடிக்க ஏ. எஸ். ராஜாவிற்கு வாய்ப்புக் கிடைத்தது.[1] சுவாமிகளின் நாடகக் குழுவுடன் இலங்கை முழுவதும் சென்று அவரது நாடகங்களில் நடித்தார்.
விஜயா ஸ்டேஜ் என்ற பெயரில் ஒரு நாடகக் கம்பனியை ஆரம்பித்து பல மேடை நாடகங்களை நடத்தினார். இவற்றில், "நீதிபதியின் மகள்", "சுமதி எங்கே" போன்ற நாடகங்கள் புகழ் பெற்றன. லடீஸ் வீரமணி, டீன்குமார் ஆகியோரின் நாடகங்களிலும் நடித்தார்.
திரைப்படங்களில்
சிங்களத் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கிய ஏ. எஸ். ராஜா பிரபல சிங்கள நடிகர் காமினி பொன்சேகா நடித்த பல திரைப்படங்களில் வில்லன் பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.[1]
ஏ. எஸ். ராஜா முதன் முதலில் நடித்த தமிழ்த் திரைப்படம் சமுதாயம். இதனை ஹென்றி சந்திரவன்ச என்பவர் தயாரித்திருந்தார். டபிள்யூ. எம். எஸ். தம்பு தயாரித்த வெண்சங்கு திரைப்படத்தில் வயதான தந்தை வேடத்தில் நடித்தார். கிங்ஸ்லி எஸ். செல்லையா தயாரித்த மஞ்சள் குங்குமம் என்ற திரைப்படத்தில் நடித்தார்.[1]
நடித்த சில திரைப்படங்கள்
ஏ. எஸ். ராஜா 25 இற்கும் மேற்பட்ட சிங்களத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]
- சண்டியா
- ஹித்த ஹொந்த மினிஹா
- சத்த பணஹாய்
- யட்டகிய தவச
- சூர சௌரயா
- சமாஜய
- வனாத்த கெல்ல
- சுமதி எங்கே (மொழி மாற்றத் திரைப்படம்)
- சமுதாயம் (1962)
- வெண்சங்கு (1970)
- மஞ்சள் குங்குமம் (1970)
பட்டங்கள்
- திரைக்கலைக்குரிசில் என்ற பட்டம் திரைக்கலை என்ற இதழின் சார்பாக வழங்கப்பட்டது.
மறைவு
ஏ. எஸ். ராஜா 1981 பெப்ரவரி 21 இல் கொழும்பில் காலமானார். இவரது மகன் ராஜா கணேசன் ஒரு தொலைக்காட்சி, வானொலி, மேடை நாடகக் கலைஞர் ஆவார்.