இளவெயினனார்
இளவெயினனார் (இள எயினனார்) சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் ஒரே ஒரு பாடல் அவர் பாடியதாகக் காணப்படுகிறது. அது நற்றிணை பாடல் எண் 263 ஆக உள்ளது. எயினன் என்பது பாலைநில மக்களின் பெயர். அது நெய்தல் திணைப் பாடல்.
பாடல் நிகழ்விடம்
அவன் அவளுக்காக அவள் வீட்டுப்பக்கம் வந்து நிற்கிறான். தோழி அவளது நிலைமையை விளக்கி அவளைத் திருமணம் செய்துகொண்டு அடையுமாறு வலியுறுத்துகிறாள்.
பாடல் சொல்லும் செய்தி
அவளது நெற்றி பிறை போல ஒளிவிடும் வனப்பை இழந்துவிட்டது. (முழங்கைக்கும் தோளுக்கும் இடையிலுள்ள உறுப்பு இறை) இறையில் தோள்வளை நிற்கவில்லை. உறுப்புகள் அவளது நிலையை மறைக்காமையால் ஊர்மக்கள் அலர் தூற்றிப் பலவாறாகப் பேசிக்கொள்கின்றனர். இதைப்பற்றியெல்லாம் அவள் கவலைப்படவில்லை. எனினும் அவள் கண்களில் உரைக்கின்றது (ததும்புகின்றது) எப்போது கண்ணீர்?
உவமை
பெண்நாரை கருவுற்றிருந்தது. அதற்கு வயா. (அதைத் தின்னவேண்டும், இதைத் தின்னவேண்டும் என்று கருவுற்ற காலத்தில் மகளிர் மண்ணைக்கூத் தின்னும் ஆசை) கழனியில் அயிரை மீனை மேய்ந்துகொண்டிருந்த அதற்குக் கடல்மீனைத் தின்னவேண்டும் என்னும் ஆசை. அதனால் பறக்க முடியவில்லை. அந்த நாரையின் ஆண்நாரை பறந்து சென்று கடல்மீனைக் கொண்டுவந்து தன் பெண்நாரைக்கு ஊட்டியது. இதைப் பார்த்த அவள் தன்னோடு ஒப்பிட்டுப் பார்க்கிறாள். கண்ணீர் ததும்புகிறது.
நாரையின் கழுத்து வளைந்திருக்கும். இதனைப் பாடல் முடமுதிர் நாரை என்று குறிப்பிடுகிறது.