இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவன். இவரது பாடலாக ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அது அகநானூறு பாடல் எண் 279 ஆக உள்ளது. பாலைத்திணை நெறியில் அமைந்த இந்தப் பாடலில் பொருள் தேட வெளியூர் சென்ற தலைவன் தன் தலைவியை எண்ணி நெஞ்சம் அழுங்குகிறான்.

அவன் தன் நெஞ்சுக்குச் சொல்லியது

இவரது பாடலில் உள்ள முதல் மூன்று அடிகள் தலைவனுக்கும் தலைவிக்கும் பொருந்துவனவாக அமைந்துள்ளன.

'நட்டோர் இன்மையும் கேளிர் துன்பமும், ஒட்டாது உறையுநர் பெருக்கமும் காணூஉ, ஒருபதி வாழ்தல் ஆற்றுப தில்ல' என்பன அந்த மூன்று அடிகள்.

தலைவன் பொருள் தேடிக்கோண்டு வாழும் ஊரில் அவனுக்கு நண்பர் இல்லை. அவனது உறவினர்கள் அவனது சொந்த ஊரில் துன்பப்படுகிறார்கள். அவனோடு ஒட்டாமல் வாழ்வோரின் எண்ணுக்கை பொருள் தேடும் ஊரில் பெருகியுள்ளது.

தலைவிக்குத் தலைவனின் நட்பு இல்லை. அவளது உறவினர்கள் அவளைப்பற்றி ஏதேதோ பேசுவது அவளுக்குத் துன்பமாக உள்ளது. அவளோடு ஒட்டாமல் வாழ்பவர்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது.

அவன் நினைக்கிறான். நான் பாலைநிலத்து வழிகளில் துன்புறுகிறேன். அவள் என்னை நினைக்கும் துன்பத்துடன் என்ன பாடு படுவாளோ? யாழ் போலவும், குயில் போலவும் பேசுவாளே! பெண் அன்னம் போல நடப்பாளே! இப்போது கையற்று வாழ்கிறாளே! இப்படி நினைத்து அவன் கவலைப்படுகிறான்.

புலவர் பெயர் விளக்கம்

இவரது பெயரில் உள்ள 'ஒல்லை' என்பது ஒல்லையூரைக் குறிக்கும். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்னும் அரசன் பெயரில் உள்ள ஒல்லையூர் அது. ஆயன் என்பவன் ஆடுமாடு மேய்க்கும் இடையன். இடையனைக் 'கோன்' என்னும் வழக்கம் சங்ககாலத்திலேயே இருந்திருக்கிறது. ஆடுமாடு மேய்க்கும் கோலை வைத்திருப்பதால் இவன் 'கோன்' எனப்பட்டான். இருங்கோன் என்பதிலுள்ள இருமை என்னும் அடைமொழி இவரது குடும்பம் பெருமளவில் ஆடுமாடுகளை வைத்திருந்தமையைப் புலப்படுத்தும். கண்ணனார் என்பது இவரது பெயர். இவரது கண்கள் சிவந்து காணப்பட்டதால் ஊர்மக்கள் இவரைச் செங்கண்ணனார் என வழங்கலாயினர்.