இடையன் சேந்தன் கொற்றனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இடையன் சேந்தன் கொற்றனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று அகநானூறு 375ஆம் பாடலாக (பாலைத் திணை) இடம் பெற்றுள்ளது. ஆடுமாடு மேய்க்கும் முல்லைநில மக்களை ஆயர் என்றும் இடையர் என்றும் கூறுவர். இந்தப் புலவர் முல்லை நிலத்தவர் என்பதை அவரது பெயரால் அறியலாம்.
கொற்றனார் என்பது புலவரின் பெயர். இவரது தந்தையின் பெயர் சேந்தன். சேந்தங் கொற்றனார் என்னும் தொடர் சேந்தன் மகன் கொற்றனார் என்னும் பொருளைத் தரும்.
இந்தச் சேந்தன் காவிரிக்கரை ஆர்க்காட்டை ஆண்ட அழிசி என்பவனின் மகன். புள்ளிப்பள்ளம் போட்ட வேலைக்கொண்டு இந்தச் சேந்தன் பகைவர் பலரை வென்றவன்.

பாடல் தரும் செய்தி

அவன் பிரிந்து சென்றான். அவள் உள்ளமும் உடலும் சோர்ந்து வேறுபட்டாள். தோழி தேற்றினாள். அவள் தேறுதல் பெறாமல் தோழியிடம் சொல்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

வழியில் செல்வோரின் கையில் எந்தப் பொருளும் இல்லை என்றாலும், கல்லா இளையர் தம் அம்பு தொடுக்கும் வில்லாண்மையை அறிந்துகொள்ளும் பொருட்டு அவர்கள்மீது அம்பை எய்து கொன்று எருவை என்னும் பெருங்கழுகளுக்கு உணவாக ஊட்டுவர். அந்த வழியில் அவர் செல்கிறாரே என்று கவலைப்படுகிறேன்.

வரலாறு

பாழி செம்பாலானது போன்ற கோட்டையை உடையது. ஒருமுறை அந்தக் கோட்டையைச் சோழ அரசன் இளம்பெருஞ்சென்னி அழித்தபொழுது அந்தப் போரில் யானைகளின் தந்தங்கள் சிவந்தாற்போல் தலைவர் செல்லும் காட்டுவழியும் பிணந்தின்னிக்கழுகுகள் அமரும் மரக்கிளைகளும் குருதியால் சிவந்திருக்கும்; வழிச்செல்வோர்க்கு அச்சமேற்படுத்தும் என்று தலைவை சொல்வதாகப் பாடியுள்ளார்.