ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி
ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி SJK(T) Ayer Tawar | |
---|---|
அமைவிடம் | |
மலேசியா மஞ்சோங், பேராக் | |
தகவல் | |
வகை | ஆண்/பெண் இரு பாலர் பள்ளி |
தொடக்கம் | 1935 |
நிறுவனர் | Rev. Bro.I.J. Aloysius |
பள்ளி மாவட்டம் | மஞ்சோங் |
கல்வி ஆணையம் | மலேசியக் கல்வி அமைச்சின் பகுதி உதவி |
பள்ளி இலக்கம் | ABD1092 |
தலைமை ஆசிரியர் | ச. முனியாண்டி |
தரங்கள் | 1 முதல் 6 வகுப்பு வரை |
மாணவர்கள் | 638 |
கல்வி முறை | மலேசியக் கல்வித்திட்டம் |
4°18′01″N 100°45′37″E / 4.300400°N 100.760200°E |
ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி மலேசியா, பேராக் மாநிலத்தில், மஞ்சோங் மாவட்டத்தின் ஆயர் தாவார் நகரில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளி. 1937 ஆம் ஆண்டு 43 மாணவர்களுடன் தொடக்கப்பட்ட ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியில் இப்பொது 638 மாணவர்கள் படிக்கின்றனர். பேரா மாநில இளம் அறிவியல் ஆய்வாளர் விழாவில் முதல் பரிசை வென்ற பெருமையும் இப்பள்ளிக்கு உண்டு.
ஆயர் தாவார் நகரில் வாழும் ஒரு சீனர் இந்தத் தமிழ்ப் பள்ளிக்கு ஒன்றரை இலட்சம் ரிங்கிட் செலவில் ஒரு மண்டபத்தைக் கட்டிக் கொடுத்துள்ளார்.
வரலாறு
இப்பள்ளியின் பழைய கட்டடம் ஒரு கிறிஸ்துவ தேவாலயம் ஆகும். இது 1935-இல் குரு அலோசியஸ் (Rev. Bro.I.J. Aloysius) எனும் பாதிரியாரால் கட்டப் பட்டது.
ஆயர் தாவார் நகரில் வாழ்ந்த கிறிஸ்துவர்கள் வழிபாடுவதற்காக அந்தத் தேவாலயம் உருவாக்கம் பெற்றது.
1937 ஆம் ஆண்டு முதல் செயிண்ட் திரேசா பள்ளி எனும் பெயரில் அந்தத் தேவாலயம் மாற்றம் கண்டது. அப்போது அப்பளியில் 43 மாணவர்கள் கல்வி பயின்றனர்.[1]
இரண்டாம் உலகப் போர்
அப்பள்ளியின் முதல் தலைமையாசிரியர் வி. மைக்கல். 1944 லிருந்து 1946 வரை இரண்டாம் உலகப் போரினால் அப்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.
1947 ஆம் ஆண்டு எம். சின்னப்பன் என்பவரைத் தலைமையாசிரியராகக் கொண்டு அப்பள்ளி மறுபடியும் தொடக்கப் பட்டது. அந்த ஆண்டில் 49 மாணவர்கள் கல்வி பயின்றனர்.[2]
1951 லிருந்து 1978 வரை டோமினிக் தேவசி என்பவர் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். மாணவர்களின் எண்ணிக்கை 64 லிருந்து 132 ஆக உயர்ந்தது. 1978-இல் 5 ஆசிரியர்கள் கல்வி போதித்தனர்.
கோயில் மண்டபத்தில் வகுப்புகள்
அப்பள்ளியின் நான்காவது தலைமையாசிரியர் ஜோசப் ரத்தினம். இவர் 1978-இல் பொறுப்பேற்றார். அவர் பணிபுரிந்த காலம் ஒரு பொன்னான காலம் என்று வர்ணிக்கப் படுகிறது. மாணவர்களின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்தது.
1980 ஆம் ஆண்டில் வெல்லிங்டன் தமிழ்ப்பள்ளி மூடப்பட்டதும் அங்கு பயின்ற 27 மாணவர்களும் இப்பள்ளிக்கு மாற்றப் பட்டனர். மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததால் வகுப்பு பற்றக்குறை ஏற்பட்டது. அதனால் அருகில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் மண்டபத்தில் வகுப்புகள் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
03.01.1984-இல் அப்பள்ளி புதிய கட்டடத்திற்குக் குடி பெயர்ந்தது. பள்ளியின் பெயரும் ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி என்று மாற்றம் கண்டது. 1988-இல் மாணவர்களின் எண்ணிக்கை 443 ஆக உயர்ந்தது.
சீனக் கோடீஸ்வரர்
1985 ஆம் ஆண்டு உள்ளூர் சீனக் கோடீஸ்வரர் சான் சிங் டெக் தம் தந்தையார் சான் ஹான் பூன் நினைவாக 1,30,000 ரிங்கிட் செலவில் ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளிக்கு ஒரு மண்டபத்தை எழுப்பித் தந்தார்.
சிறு பள்ளியாக இருந்த பள்ளியைப் பெரிய பள்ளியாக மாற்றி அமைப்பதில் முன்னாள் தலைமையாசிரியர் ஜோசப் ரத்தினம் குறிப்பிடத் தக்கவர். தவிர, முன்னாள் தலைமையாசிரியர் பால் ராஜ், ஹபுபுல்லா மைடின், நல்லப்பன் போன்றோர் பள்ளியின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளனர்.
தலைமையாசிரியர்கள்
- வி. மைக்கல் (1937–1946)
- எம். சின்னப்பன் (1947–1950)
- டோமினிக் தேவாசி (1951–1978)
- ஜோசப் ரத்தினம் (1978–1988)
- பால் ராஜ் (1989–1997)
- ஹபிபுல்லா மைடின் (1997–2003)
- என். நல்லப்பன் (2003)
- ச. முனியாண்டி (2011)
- எ. ஆறுமுகம் (2016)[3]
பள்ளி நிர்வாகம்
இப்போது ஆயர் தாவார் தமிழ்ப் பள்ளியில் 638 மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களில் ஆண்கள் 328. பெண்கள் 310.
இப்பள்ளியில் 38 ஆசிரியர்களும் 6 ஊழியர்களும் பணிபுரிகின்றனர். இந்த பள்ளிக்கான புதிய நான்குமாடி கட்டிடம் 2016ல் கட்டிமுடிக்கப்பட்டது.
- தலைமையாசிரியர்: எ. ஆறுமுகம்
- துணைத் தலைமையாசிரியர்: ஜோர்ஜ் தோமஸ்
- துணைத் தலைமையாசிரியர் (மாணவர்கள் விஷயங்கள்): துளசியம்மா வரதராஜு[4]
கணினி அறை
2002 ஆண்டில் 20 கணினிகளுடன் ஒரு கணினி அறை செயல்படத் தொடங்கியது. அடுத்த ஆண்டு மேலும் சில கணினிகள் சேர்க்கப்பட்டன. கணினி அறையும் விரிவு செய்யப்பட்டது.
ஆயர் தாவார் தமிழ்ப் பள்ளியின் பாலர் பள்ளியைச் சிறப்பாக வழி நடத்த, பாலர் பள்ளிக்கான அறை மறுசீரமைப்புச் செய்யப் பெற்றது. பள்ளியின் தோற்றமும் வளர்ச்சியும் புதிய பரிமாணத்தை அடைந்து பள்ளி ‘ஏ’ தரத்திற்கு உயர்த்தப் பட்டது.
பழனிக்குமார் சின்னசாமி
புறப்பாட நடவடிக்கைகளில் ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர். 2003 ஆம் ஆண்டு இப்பள்ளியில் பயின்ற பழனிக்குமார் சின்னசாமி யு.பி.எஸ்.ஆர் தேர்வில், மலேசியாவிலேயே தேசிய நிலையில் தலை சிறந்த மாணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் தற்சமயம் செர்டாங் புத்ரா பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் தம் மேல்கல்வியைத் தொடர்ந்து வருகிறார்.
இளம் அறிவியல் ஆய்வாளர் விழா
2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரா மாநில இளம் அறிவியல் ஆய்வாளர் விழாவில் இப்பள்ளி முதல் பரிசை வென்றது. 2010-இல் மலேசிய இந்து சங்கம் நடத்திய தேசிய நிலையிலான திருமுறை ஓதும் போட்டியில் இப்பள்ளியைச் சேர்ந்த செல்வி தோஷணா நல்லப்பன் முதல் பரிசு பெற்றார்.
பொது
2011 ஜூன் மாதம் சகல வசதிகளும் அடங்கிய புதிய நான்கு மாடிக் கட்டடப் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. இந்தப் புதிய கட்டடத்தில் 10 வகுப்பறைகள், ஓர் அலுவலகம், தலைமையாசிரியர் அறை, துணைத் தலைமையாசிரியர்களுக்கான அறைகள், நடவடிக்கை அறை ஆகியவை அமையவிருக்கின்றன. அதற்கான செலவுகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.
2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற பேராக் மாநில இளம் அறிவியல் ஆய்வாளர் விழாவில் இப்பள்ளி முதல் பரிசை வென்றது. மலேசிய இந்து சங்கம் 2010-இல் நடத்திய தேசிய நிலையிலான திருமுறை ஓதும் போட்டியில் இப்பள்ளியைச் சேர்ந்த தோஷனா நல்லப்பன் முதல் பரிசு பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்தார்.
மேற்கோள்கள்
- ↑ Jabatan Pelajaran Perak[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி ,32400 ஆயர் தாவார், பேராக்
- ↑ "Portal dan Blog Sekolah Manjung" இம் மூலத்தில் இருந்து 2020-01-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200126171516/http://jpnperak.moe.gov.my/ppdmanjung/v3/index.php/profil-organisasi/pentadbir-sekolah-rendah.html.
- ↑ "GURU DAN STAF SOKONGAN". http://sjk-t-ayertawar.blogspot.com/search/label/School%20Citizen.